Published:Updated:

`இனி 98 அல்ல 217 கி.மீட்டர் பயணம்!' - வயநாடு போராட்டத்துக்குக் கரம் கொடுத்த ராகுல் காந்தி

பந்திபூர் சாலை போக்குவரத்து தடைக்கு எதிராக நடக்கும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு வயநாடு எம்.பி ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி ( Twitter/@RGWayanadOffice )

கேரளாவின் வயநாட்டிலிருந்து கர்நாடகாவின் மைசூருக்குச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை கர்நாடகாவின் பந்திபூர் காட்டுப் பகுதி வழியாகச் செல்கிறது. இந்த இரு மாநிலங்களையும் இணைக்கும் ஒரு முக்கியச் சாலையாக இது உள்ளது. இரவு நேரங்களில் இந்தச் சாலை வழியாகச் செல்வதால் வாகனங்களில் அடிபட்டு வன விலங்குகள் உயிரிழக்கின்றன என்று கர்நாடக அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது.

 Bandipur tiger reserve
Bandipur tiger reserve
Twitter/@bijoyendless

இதனால் இரவு நேரங்களில் பந்திபூர் சாலை வழியாகப் பயணிக்கக் கூடாது எனக் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு தடை விதித்தது. கர்நாடக அரசின் இந்த அறிவிப்புக்கு அப்போதே கேரள அரசு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தது. 10 வருடங்களுக்கு முன்பு, இரு மாநிலங்களுக்கு இடையே இது மிகப் பெரும் பிரச்னையாகப் பேசப்பட்டது. கேரள அரசு எவ்வளவோ பேச்சுவார்த்தை நடத்தியும் கர்நாடக அரசு தன் முடிவிலிருந்து பின்வாங்க மறுத்துவிட்டது.

இந்நிலையில், பந்திபூர் சாலையில் காலை நேரங்களிலும் பயணிக்கக் கூடாது என மீண்டும் கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. பந்திபூர் சாலைக்குப் பதிலாக, குட்டா கோனிகுப்பா சாலையைப் பயன்படுத்துமாறு கூறியது. பந்திபூர் சாலை முற்றிலுமாக மூடப்பட்டதுக்குக் கேரளா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

 Bandipur tiger reserve
Bandipur tiger reserve
Twitter

இதனால் கேரள மற்றும் கர்நாடக மக்கள் வெகுவாகப் பாதிக்கப்படுவார்கள், கேரளாவில் உள்ள விவசாயிகள் தங்கள் பொருள்களைச் சந்தைக்குக் கொண்டு செல்ல கடுமையான சிரமங்களைச் சந்திக்க வேண்டியது வரும் என்பது கேரளாவின் கருத்தாக உள்ளது. மேலும், வயநாட்டிலிருந்து பந்திபூர் சாலை வழியாக மைசூருக்குச் செல்ல 98 கி.மீ ஆகிறது, அதுவே தற்போது தெரிவிக்கப்பட்டுள்ள வேற்று பாதையில் 217 கி.மீ பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது எனக் கூறுகின்றனர். இதனால் தடை செய்யப்பட்ட சாலையில் மீண்டும் வாகன போக்குவரத்தை அனுமதிக்க வேண்டும் எனக் கேரளா முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

Vikatan

குறிப்பாக, வயநாடு மாவட்டத்தில் உள்ள இளைஞர் அமைப்பினர் கடந்த ஒரு வாரமாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈட்டுப்பட்டுள்ளனர். காங்கிரஸின் முன்னாள் தலைவரும் வயநாடு எம்.பி-யுமான ராகுல் காந்தி இன்று வயநாடு வந்துள்ளார். அவர் வயநாட்டில் நடக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்.

Rahul Gandhi
Rahul Gandhi
Twitter/@RGWayanadOffice

இதுதொடர்பாக, ராகுல் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ` என்.ஹெச் 766 சாலையில் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கடந்த 25-ம் தேதி முதல் வயநாடு இளைஞர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் நானும் துணை நிற்கிறேன். இந்தப் போக்குவரத்து தடை கேரள மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்களைப் பாதிக்கும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.