Published:Updated:

நமஸ்தே ட்ரம்ப் முதல் ராஜஸ்தான் ஆட்சி வரை! - பா.ஜ.க-வை பட்டியலிட்டு விமர்சித்த ராகுல்

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படத் தொடங்கியது முதல் மத்திய அரசின் சாதனைகள் என மாதம் வாரியாகப் பட்டியல் ஒன்றை விமர்சனம் செய்யும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் ஒவ்வொரு நாளும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால், இயல்பு நிலைக்குத் திரும்ப முடியாமல் மக்கள் திணறி வருகின்றனர். வைரஸால் அனைத்து மாநிலங்களும் ஒருபுறம் பாதிப்பில் இருக்க, மறுபுறம் இயற்கை சீற்றங்கள், எல்லைப் பிரச்னைகள் மற்றும் அரசியல் நெருக்கடிகள் எனப் பலவற்றிலும் நாடு சிக்கித் தவித்து வருகிறது. இதுதொடர்பாக, மத்திய அரசை எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். குறிப்பாக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல் காந்தி. ட்விட்டரின் வழியாக மத்திய அரசின் மீது தனது கடுமையான விமர்சனத்தை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார். ராகுல் காந்தியின் விமர்சனங்களுக்கு பா.ஜ.க-வும் அவ்வப்போது பதிலடி கொடுத்து வருகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படத் தொடங்கியது முதல் மத்திய அரசின் சாதனைகள் என மாதம் வாரியாகப் பட்டியல் ஒன்றை விமர்சனம் செய்யும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார். அந்தப் பட்டியல் பின்வருமாறு உள்ளது.

கொரோனா காலத்தில் மத்திய அரசின் சாதனைகள் :

பிப்ரவரி : நமஸ்தே ட்ரம்ப்.

மார்ச் : மத்திய பிரதேச ஆட்சியைக் கவிழ்த்தது.

ஏப்ரல் : நாட்டு மக்களை மெழுகுவர்த்தி ஏற்றக் கூறியது.

மே : மத்திய அரசின் ஆறாவது ஆண்டு நிறைவு.

ஜூன் : பீகாரில் பேரணி நடத்தியது.

ஜூலை : ராஜஸ்தானில் அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சி செய்வது.

ட்விட்டர் பக்கத்தில் இந்தப் பதிவினையிட்ட ராகுல் காந்தி, பிரதமர் மோடி அடிக்கடி கூறி வந்த தற்சார்பு இந்தியா திட்டத்தையும் விமர்சனம் செய்யும் வகையில் பதிவிட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இடையே பிரச்னைகள் அதிகமாகத் தொடங்கியது முதல் இதுவரை காங்கிரஸின் தலைமை அமைதியாகவே உள்கட்சியில் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்த நிலையில் தற்போது ராஜஸ்தானில் நிலவி வரும் அரசியல் குழப்பத்துக்கு பா.ஜ.க-தான் காரணம் என தனது விமர்சனத்தைப் பதிவு செய்துள்ளார்.

` ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூலின் எதிர்கால ஆய்வுப் பட்டியல்!’ - மோடியை விமர்சிக்கும் ராகுல்

ராகுல்காந்தியின் இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது ட்விட்டர் பக்கத்தில், ராகுல் காந்தி வெளியிட்டதைப்போலவே பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பட்டியல் பின்வருமாறு உள்ளது.

ராகுல் காந்தி, உங்களது கடந்த ஆறுமாத சாதனைகளை குறித்துக்கொள்ளுங்கள்:

பிப்ரவரி : ஷாகீன் பாக் மற்றும் வன்முறை.

மார்ச் : ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் மத்திய பிரதேச ஆட்சியை இழந்தது.

ஏப்ரல் : புலம்பெயர்ந்த தொழிலாளர்களைத் தூண்டியது.

மே : காங்கிரஸ் வரலாற்று தோல்வி அடைந்ததன் ஆறாவது ஆண்டு நிறைவு.

ஜூன் : சீனாவைப் பாதுகாப்பது.

ஜூலை : ராஜஸ்தான் ஆட்சியில் ஏற்பட்ட சரிவு.

``கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் இந்தியாவின் சாதனைகளை ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா, ஐரோப்பா, பிரேசில் நாடுகளை விடவும் இந்தியாவில் சராசரி பாதிப்பு எண்ணிக்கை, சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை மற்றும் இறப்பு விகிதம் ஆகியவை குறைவாகவே உள்ளது. மெழுகுவத்திகள் ஏற்றக் கூறியதை கேலி செய்வதன் மூலம் நீங்கள் இந்திய மக்களையும் கொரோனாவுக்கு எதிராக போராடும் வீரர்களையும் அவமதிக்கிறீர்கள்” என்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குறிப்பிட்டுள்ளார்.

`எவ்வளவு தைரியம் இருந்தால் இந்திய வீரர்களை சீனா கொல்லும்?’ கொதிக்கும் ராகுல் காந்தி
அடுத்த கட்டுரைக்கு