Published:Updated:

`கும்பலைக் கண்டு ஓடினோம், ஆனால்...?!’ -ராணுவப் பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்ட இளைஞரின் உடல்

டெல்லிக் கலவரம்
டெல்லிக் கலவரம்

டெல்லியில் நடந்த கலவரத்தினால் உயிரிழந்த ராகுல் என்ற இளைஞரின் உடல் துணை ராணுவப்படையின் உதவியுடன் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

`குடியுரிமை சட்டத்திருத்த மசோதா’ இந்த ஒற்றை வார்த்தையை முன்வைத்து நடந்த போராட்டம் மற்றும் கலவரத்தில் கடந்த மூன்று மாதத்தில் மட்டும் பலர் பலியாகியுள்ளனர். பொதுவாக 11 வருடங்களாக இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டவருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என 1955-ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இதில் மாற்றம் செய்து வெளிநாட்டினர் இனி 6 ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்தால் அவர்களுக்குக் குடியுரிமை வழங்கலாம் என்று கடந்த டிசம்பர் மாதம் இந்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது மத்திய அரசு.

டெல்லி கலவரம்
டெல்லி கலவரம்

இந்தச் சட்டத்திருத்தத்தில் இந்துக்கள், கிறிஸ்துவர்கள், பார்சிகள், ஜைனர்கள், பௌத்தர்கள் ஆகியோரிடம் உரிய ஆவணம் இல்லையென்றாலும் அவர்களுக்குக் குடியுரிமை வழங்கலாம் எனக் கூறப்பட்டது. இந்தப் பட்டியலில் இஸ்லாமியர்களை மட்டும் குறிப்பிடவில்லை. இதனால் இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களுக்கும் பிரச்னை ஏற்படும் என்பதுதான் இவ்வளவு பெரிய போராட்டத்துக்குப் பெரும் காரணமாக உள்ளது.

குடியுரிமை சட்டத்திருத்த போராட்டத்தினால் டெல்லியின் பல சாலைகள் போராட்டக் களமாகி உள்ளன. கடந்த மூன்று நாள்களுக்கு முன்னர் வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை சட்டத்திருத்த ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் ஒரே இடத்தில் கூடியதால் கலவரம் வெடித்தது. இதனால் இதுவரை 30 பேர் வரை உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதே கலவரத்தின் போது 26 வயதான ராகுல் சோலான்கி என்ற இளைஞரும் குண்டடிபட்டு உயிரிழந்துள்ளார்.

இளைஞர் ராகுல்
இளைஞர் ராகுல்

காஸியாபாத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார் ராகுல். விடுமுறைக்காக தன் வீட்டுக்கு வந்த இவர் கடந்த திங்கள்கிழமை பால் வாங்குவதற்காக வெளியில் சென்றுள்ளார். பின்னர் அங்கு நடந்த கலவரத்தில் ஒரு கும்பல் இவரது தோள்பட்டைக்கு அருகில் கழுத்துப் பகுதியில் துப்பாக்கியால் சுட்டுள்ளது. இதனால் படுகாயமடைந்து ஜி.டி.பி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராகுல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பிறகு துணை ராணுவப்படையின் உதவியுடன் இறந்த ராகுலின் உடலை அடக்கம் செய்துள்ளனர் அவரின் குடும்பத்தினர். டெல்லி போலீஸார் ராகுலின் குடும்பத்துக்குப் பாதுகாப்பு அளித்துள்ளனர். ராகுல் உயிரிழந்தது பற்றிப் பேசியுள்ள அவரது நண்பர், ``சம்பவம் நடந்தபோது நானும் ராகுலுடன்தான் இருந்தேன். நாங்கள் சாலையில் நடந்து சென்றுகொண்டிருக்கும்போது ஒரு கும்பல் எங்களை நோக்கி வேகமாக வந்துகொண்டிருந்தது. அவர்களைப் பார்த்ததும் நாங்கள் இருவரும் ஓடத் தொடங்கினோம்.

ராகுலின் தந்தை
ராகுலின் தந்தை

அப்போது ராகுலின் செருப்பு கழன்றுவிட, அவன் அதைப் போட்டுக்கொண்டிருக்கும்போது அடையாளம் தெரியாத சிலர் பின்னால் இருந்து ராகுலைச் சுட்டுவிட்டனர். அவன் அதே இடத்தில் விழுந்ததும் கும்பல் ஓடிவிட்டது” என்று விவரித்துள்ளார். கலவரக்காரர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் துணை ராணுவத்தினரின் உதவியுடன் ராகுலின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு