Published:Updated:

3 லட்சம் ஊழியர்களுக்குக் கட்டாய ஓய்வு?! - பட்டியல் கேட்கும் ரயில்வே நிர்வாகம்

தினேஷ் ராமையா

மூன்று லட்சம் ஊழியர்களை கட்டாய ஓய்வில் அனுப்ப ரயில்வே துறை முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

Railways
Railways

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வே துறையில் 12.75 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். நிதி ஒதுக்கீடு, தனியார் மயமாக்கலை அனுமதிப்பது எனப் பல்வேறு சவால்களை இன்றைய சூழலில் ரயில்வே துறை எதிர்க்கொண்டு வருகிறது. பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டும் இணைக்கப்பட்ட நிலையில், இந்தாண்டு ரயில்வேக்கு என 65,837 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், 7,255 கோடி ரூபாய் புதிய ரயில்வே தடங்களை உருவாக்கவும் 2,200 கோடி ரூபாய் பழைய ரயில் பாதைகளை புதிய அகல ரயில் பாதைகளாக மாற்றுவதற்காகவும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், ரூ.700 கோடி இருவழி ரயில் பாதைகள் அமைக்கவும் 1,750 கோடி ரூபாய் சிக்னல் மற்றும் தொலைதொடர்புக்கென ஒதுக்கப்பட்டிருக்கிறது. இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

railways
railways

பட்ஜெட் தாக்கலின்போது பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ``2018 - 2030 இடைப்பட்ட ஆண்டுகளில் ரயில்வேத் துறையில் 50 லட்சம் கோடி ரூபாய் முதலீடு தேவை. தனியார் மற்றும் பொதுத்துறை கூட்டு முயற்சியில் (PPP) இதைச் சாத்தியப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும். ரயில்வே இணைப்பை பலப்படுத்தவும் பயணிகளுக்கு வழங்கப்படும் சேவைகளை திறம்பட வழங்கவும் ஆலோசித்து வருகிறோம்’’ என்று தெரிவித்தார்.

இந்தநிலையில், ரயில்வே துறையில் 3 லட்சம் ஊழியர்களை கட்டாய ஓய்வு மூலம் வீட்டுக்கு அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக பிராந்திய பொது மேலாளர்களுக்கு ரயில்வே வாரியம் அனுப்பியுள்ள கடிதத்தில், ரயில்வே ஊழியர்கள் பணித் திறன் குறித்து ஆய்வு மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டின் முதல் காலாண்டில் 30 ஆண்டு பணிக்காலம் அல்லது 55 வயது ஆகிய இவற்றை நிறைவு செய்யும் ஊழியர்கள் குறித்த தகவலை அனுப்புமாறும் மேலாளர்களை ரயில்வே துறை அறிவுறுத்தியிருக்கிறது.

railways
railways

இதன்மூலம் ரயில்வே துறையில் உள்ள 3 லட்சம் ஊழியர்களுக்குக் கட்டாய ஓய்வு அளிக்கப்படும் என்று தெரிகிறது. அதேபோல், ரயில்வே துறையின் இந்த நடவடிக்கையால் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 10 லட்சம் என்ற அளவாகக் குறைக்கப்படும் என்கிறார்கள். ரயில்வே துறை ஊழியர்களின் பணித் திறனை உடல் திறன், மனத் திறன், பணிக்கு சரியாக வருவது மற்றும் ஒழுக்கம் ஆகிய காரணிகள் மூலம் ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டிருப்பதாக ரயில்வே வட்டாரங்கள் கூறுகின்றன.

இதுகுறித்து டி.ஆர்.இ.யூ தொழிற்சங்கத்தின் செயல்தலைவர் இளங்கோவனைத் தொடர்புகொண்டு பேசினோம். ``30 ஆண்டுகள் சர்வீஸ் அல்லது 55 வயதை நிறைவு செய்யும் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் முடிவில் ரயில்வே இருக்கிறது. இதுதொடர்பான மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை கடந்த ஜூன் 20-ம் தேதி கடிதம் அனுப்பியிருந்தது. அதுபோல, ரயில்வே வாரியம் சார்பில் இதுதொடர்பாக சமீபத்தில் ரயில்வேயின் பிராந்திய பொது மேலாளர்களுக்குக் கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது.

இளங்கோவன்
இளங்கோவன்

பணியில் நேர்மை இல்லாமை அல்லது ஒழுக்கமின்மை ஆகியவை அடிப்படையில் ஊழியர்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இது ஆண்டுதோறும் நடைபெறும் வழக்கமான நடைமுறைதான். சொல்லப்போனால், ஆங்கிலேயர் காலத்திலிருந்து இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இதில் புதிய அம்சம் என்னவென்றால், இதுபோல் 30 ஆண்டுகள் சர்வீஸ் அல்லது 55 வயதை நிறைவு செய்யும் ஊழியர்கள் குறித்த தகவல்களை மாதந்தோறும் 8-ம் தேதிக்குள் அனுப்ப மேலாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அவர் தகவல்களை அனுப்ப தவறும்பட்சத்தில் அவரையும் தகுதியில்லாத நபர் என்று கருதி வீட்டுக்கு அனுப்ப ரயில்வே துறை திட்டமிட்டிருக்கிறது’’ என்றார் நிதானமாக.