Published:Updated:

`ரயில் டிக்கெட்டுகள் விலை ஏற வாய்ப்பு!’ - என்ன காரணம் தெரியுமா?

ரயில்
News
ரயில் ( Representational Image )

விமானப் பயணங்களில் வசூலிக்கப்பட்டு வருவதுபோல பயன்பாட்டுக் கட்டணத்தை ரயில் டிக்கெட்டுகளிலும் கூடுதலாக வசூலிக்க ரயில்வே வாரியம் முடிவெடுத்திருக்கிறது.

இந்திய ரயில்வேயில், பரபரப்பாக இயங்கக்கூடிய ரயில் நிலையங்களில் பயணிகளின் ரயில் டிக்கெட் கட்டணத்தில் `டோக்கன் பயனாளர் கட்டணம்' என்ற பயன்பாட்டுக் கட்டணத்தை கூடுதலாக சேர்த்து வசூலிக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டிருக்கிறது. `கூடுதலாகப் பெறப்படும் தொகை, ரயில் நிலையங்களின் மேம்பாட்டுக்கும், உள்கட்டமைப்பை நவீனப்படுத்தவும் பயன்படுத்தப்படும்’ என்று ரயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் தெரிவித்திருக்கிறார்.

சாலைப் போக்குவரத்தில் `சுங்க வரிக் கட்டணம்’, விமான சேவையில் `பயன்பாட்டுக் கட்டணம்’ ஆகியவை மக்களை முகம் சுளிக்கவைத்திருந்தன; `குறைந்த செலவில் பயணம்’ என்பது ரயில்வேயால் மட்டுமே சாத்தியமாகியிருந்தது.

இந்திய மக்களின் முக்கியமான பொதுப் போக்குவரத்தே ரயில்வேதான். தினமும் சுமார் இரண்டரைக் கோடி மக்கள் இந்திய ரயில்களில் பயணம் செய்கிறார்கள். சுமார் 13 லட்சம் ஊழியர்களைக்கொண்டிருக்கும் இந்திய ரயில்வே, உலகின் மிகப்பெரிய அரசுத்துறை. இந்த ரயில்வேதுறையில் தனியார்மயம் என்ற அதிர்ச்சியிலிருந்தே மக்கள் மீண்டுவராத நிலையில், ரயில் டிக்கெட்டில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

ரயில் நிலையம்
ரயில் நிலையம்

சமீபத்தில், நோயாளிகளுக்கான கட்டணச் சலுகைகளுடன்கூடிய பயணச்சீட்டு தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தெற்கு ரயில்வே பதிலளித்திருந்தது. தெற்கு ரயில்வேயின் வணிகப் பிரிவு துணைத் தலைமை மேலாளா் தாக்கல் செய்த பதில் மனுவில், ``கொரோனாநோய்த் தொற்றுப் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஏராளமான ரயில்களின் சேவைகள் நிறுத்தப்பட்டன. இதனால், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள், மாணவா்கள் ஆகியோருக்கு மட்டும் சலுகை வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை மேற்கொள்ளக் கூடாது என்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது’’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதோடு, பயணிகளுக்கான இது போன்ற கட்டணச் சலுகைகளுடன் பயணச்சீட்டு வழங்கியதன் மூலம், ரயில்வே நிா்வாகத்துக்கு கடந்த 2016-2017 நிதியாண்டு முதல் 2018-2019 நிதியாண்டு வரையிலான மூன்று நிதியாண்டுகளில் மொத்தம் ரூ.5,475 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அண்மையில், பொதுமக்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்த கர்நாடக மாநிலம் பெங்களுரூ ரயில் நிலையத்தில் நடைமேடைக் கட்டணம் உயர்த்த திட்டமிட்டு, நடைமேடைக் கட்டணம் ரூ.10-லிருந்து ரூ.50-ஆக உயர்த்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து, விமானப் பயணங்களில் வசூலிக்கப்பட்டு வருவதுபோல பயன்பாட்டுக் கட்டணத்தை ரயில் டிக்கெட்டுகளிலும் கூடுதலாக வசூலிக்க ரயில்வே வாரியம் முடிவெடுத்துள்ளது.

இது குறித்து காணொலி வாயிலாக செய்தியாளர்களைச் சந்தித்த ரயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ்,``ரயில் பயணிகளிடம் இனி ரயில் கட்டணம் தவிர, `ரயில் நிலையப் பயன்பாட்டு கட்டணம் என்ற பெயரில் சிறிய தொகை வசூலிக்கப்பட உள்ளது. இந்தியாவில் 7,000 பெரிய ரயில் நிலையங்கள் உள்ள நிலையில், அதில், முதல் 15 சதவிகிதம் அதாவது, 700 முதல் 1,050 ரயில் நிலையங்களில் ரயில் கட்டணத்தில் சிறிது கட்டண உயர்வு அமல்படுத்தப்பட உள்ளது. பயணிகளுக்கு மிகச்சிறிய கட்டணத்தை மட்டும் கூடுதலாக நிர்ணயிக்க முடிவு செய்திருக்கிறோம்.

இந்தக் கூடுதல் தொகை, தற்போது மறுசீரமைக்கப்பட்டு வரும் மற்றும் மறுசீரமைக்கப்பட வாய்ப்புள்ள ரயில் நிலையங்களுக்கு மட்டுமே பொருந்தும். ரயில் நிலையங்கள் முழுவதுமாக மறுசீரமைக்கப்பட்டவுடன், பயணிகளிடமிருந்து வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணம், பயணிகளுக்கு மேம்பட்ட சேவைகள் வழங்கப் பயன்படுத்தப்படும்.

ரயில் நிலையம்
ரயில் நிலையம்

பயணிகளுக்கு கட்டுப்படியாகக்கூடிய அளவில்தான் கூடுதல் கட்டணம் இருக்கும். பயணிகளை பாதிக்கக்கூடிய வகையில் ஒருபோதும் இருக்காது. தற்போதைய சூழலில் உலகத்தரத்திலான வசதிகளைச் செய்துதர வேண்டியது இந்திய ரயில்வேயின் கட்டாயம்’’ என்றார்.

இந்தத் திட்டத்தின்கீழ், அடுத்த ஐந்து ஆண்டுகளில் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கும் ரயில் நிலையங்களில்தான் டோக்கன் பயனாளர் கட்டணம் வசூலிக்கப்படும் என ரயில்வே தெரிவித்திருக்கிறது.

இது தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் எழுத்துபூர்வமாக பதிலளித்தார். அதில், ``ரயில் நிலையங்களில் மேம்பட்ட மற்றும் பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தவும், பயணிகளுக்குத் தேவையான அத்தியாவசியமான சேவைகளை அளிப்பதற்கும் செயலாளர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைத்திருக்கிறோம். இந்தக் குழுதான் டோக்கன் பயனாளர் கட்டணம் வசூலிக்கப் பரிந்துரை செய்திருக்கிறது. இது தற்போது அரசின் பரிசீலனையில் இருக்கிறது’’ என்று பதிலளித்திருந்தார்.

ரயில் டிக்கெட்டில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்புக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது.