Published:Updated:

ஆண்டில் 300 நாள்கள் தூங்கிக் கழிக்கும் ராஜஸ்தான் விநோத மனிதர்! - ஓர் ஆச்சர்யக் கதை!

புர்காராம்
புர்காராம்

ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் இருக்கும் நாகூரைச் சேர்ந்த புர்காராமுக்கு தற்போது 42 வயது. இவர்தான் வருடத்தின் மொத்த நாள்களில் 300 நாள்களை (300 days in a year) தூங்கியே கழிக்கிறார்.

கும்பகர்ணன்! ராமாயணத்தில் நன்கு பரிச்சயப்பட்ட பெயராக இருக்கும். காரணம், கும்பகர்ணனின் ஆழ்ந்த தூக்கம். அதுதான் அவனது அடையாளமாக விளங்கும். புராண காலத்தில் அப்படி ஒரு பாத்திரம் இருந்ததோ இல்லையோ, ஆனால் கலியுகமான நிகழ்காலத்தில் கும்பகர்ணனைவிடவும் அதிக காலம் தூங்கும் ஒருவர் இருக்கிறார் என்பதுதான் உண்மை. ஆம், கும்பகர்ணனாவது முதல் ஆறு மாதங்கள் தூங்குவது, மீதி ஆறுமாதங்கள் உண்பது என ஆண்டைக் கழிப்பான். ஆனால், இந்த நபரோ உண்பதற்குக்கூட எழுந்திருக்காமல், வருடத்தில் 300 நாள்களும் தூங்குகிறார் என்பதுதான் ஆச்சர்யப்படவைக்கும் உண்மை. யார் அந்த நபர், இப்படி நாள்கணக்கில் தூங்குவதற்கு என்ன காரணமாக இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்வோம். அந்த கலியுக கும்பகர்ணனின் பெயர் புர்காராம். ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் இருக்கும் நாகூரைச் சேர்ந்த புர்காராமுக்கு தற்போது 42 வயது. இவர் வருடத்தின் மொத்த நாள்களில் 300 நாள்களைத் தூங்கியே கழிக்கிறார். பலசரக்குக் கடையை நடத்திவரும் இவருக்கு மிகப்பெரும் பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது அதீத தூக்கம்.

sleep புர்காராம்
sleep புர்காராம்

ஆரம்பத்தில் ஒரு நாள், இரண்டு நாள்கள், பிறகு ஒரு வாரம் என்றிருந்த இவரது தூக்கம், ஒரு மாதத்துக்கு 25 நாள்கள் எனத் தொடர்ந்து நீண்டுகொண்டே சென்றிருக்கிறது. இதனால், மாதத்தில் ஐந்து நாள்கள் மட்டுமே தன்னுடைய பலசரக்குக் கடையைத் திறக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார் புர்காராம்.

தனது கணவனின் விநோதமான தூக்கம், விசித்திரமான செயல்பாடுகளால் அதிச்சியடைந்த புர்காராமின் மனைவி, அவரை அழைத்துக்கொண்டு மருத்துமனைக்கு சென்றிருக்கிறார். இருவரும் சொன்னதைக் கேட்டு ஆச்சர்யமும் அதிச்சியும் அடைந்த மருத்துவர்கள் உடனடியாக புர்காராமுக்கு என்ன பிரச்னை என்பதை அறிய முழுப் பரிசோதனை செய்துள்ளனர். பரிசோதனை முடிவில், அவர் ஆக்சிஸ் ஹைப்பர்சோமியா (Axis Hypersomnia) எனும் விநோத நோயால் பாதிக்கப்பட்டிருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். அதாவது, `` `ஆக்சிஸ் ஹைப்பர்சோமியா’ என்பது மிகவும் விநோதமான நோய். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தூக்கத்திலிருந்து எழ முயற்சி செய்தாலும், அவர்களின் உடல் ஒத்துழைக்காது. மேலும், அவர்கள் தூக்கம் வருவதற்கு முன்பாக, கடும் தலைவலியால் அவதிக்குள்ளாவர். இந்த வகையான நோயை முற்றிலுமாக குணப்படுத்துவது என்பது எளிதான காரியம் இல்லை’’ என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கும்பகர்ணன்
கும்பகர்ணன்

புர்காராம் இப்படி நாள்கணக்கில் தூங்குவதெல்லாம் இந்த ஆண்டோ, சென்ற ஆண்டு நிகழ்ந்ததோ அல்ல. சுமார் 23 ஆண்டுகளாகவே இந்த விநோத நோயால் பாதிக்கப்பட்டு இன்னல்களை அனுபவித்துவருகிறார். அவரைவிட அவரை நம்பி வாழும், அவருடைய மனைவியும் தாயாரும்தான் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இப்படி கட்டுப்பாடில்லாமல் மெய்மறந்து தூங்கும் புர்காராம், உணவு உண்பதெல்லாமே தூக்கத்தில்தானாம்.

உண்ணக்கூட மறந்து தூங்கும் கணவனுக்கு அவருடைய மனைவிதான் தூக்கத்திலேயே உணவு ஊட்டுகிறார். அவரின் குடும்பத்தினரும் பலசரக்குக் கடையைத் திறக்க முடியாமல், வருமானத்துக்கு வழியில்லாமல் திணறிவருகின்றனர்.
புர்காராம் உறவினர்கள்

இப்படியாக, புர்காராமின் தூக்கத்தால் பல்வேறு பிரச்னைகளுக்கும், இன்னல்களுக்கும் ஆளாகிவரும் அவரின் மனைவி மற்றும் தாயார், ``புர்காராமுக்கு இருப்பது குணப்படுத்த முடியாத நோய் என்று மருத்துவர்கள் சொன்னாலும், அவர் குணமடைவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது" என உறுதியாக நம்புகின்றனர். புர்காராமின் கட்டுப்பாடற்ற இந்த (Deep sleep) அதீத தூக்கத்தால், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், ஊர் மக்கள் என அனைவரும் அவரை `கும்பகர்ணன்’ என்றே பட்டப் பெயர் வைத்து அழைக்கின்றனராம். ஆனால், இந்த விமர்சனங்களையெல்லாம் புர்காராம் பொருட்படுத்தவே இல்லையாம். ஏனென்றால் அதுகூடத் தெரியாமல் அவர் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கிறார் என்பதுதான் வேடிக்கையான விஷயம்.

அடுத்த கட்டுரைக்கு