Published:Updated:

ஆறு மாதங்களில் 1,000 குழந்தைகளுக்கு மேல் உயிரிழப்பு! சர்ச்சையில் ராஜஸ்தான் அரசு மருத்துவமனை

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட்
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட்

``மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனிடமும் கோட்டா மருத்துவமனை விவகாரத்தில் தனி கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளேன்" என முதல்வர் அசோக் கெஹ்லாட் கூறியுள்ளார்.

ராஜஸ்தானின் கோட்டா அரசு மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் மருத்துவ வசதிகள் குறைபாடு காரணமாகக் கடந்த மாதத்தில் 100-க்கும் மேற்பட்ட பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், அம்மாநிலத்தின் முதல்வர் அசோக் கெஹ்லாட் இதுகுறித்து பேசியிருக்கிறார்.

ஜே.கே.லோன் குழந்தைகள்  மருத்துவமனை
ஜே.கே.லோன் குழந்தைகள் மருத்துவமனை
twitter

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர்,``ஜே.கே.லோன் மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லாத குழந்தைகள் இறந்துள்ள சம்பவத்தை அரசு உணர்வுபூர்வமாக அணுகி வருகிறது. இந்த விவகாரத்தில் எந்த அரசியலும் இருக்கக்கூடாது. குழந்தைகளின் இறப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது. இதுதொடர்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். தாயும் குழந்தையும் நலமுடன் இருப்பது தொடர்பான நடவடிக்கைக்கு முன்னுரிமை அளித்து வருகிறோம். மருத்துவ வசதியை மேம்படுத்த தயாராக இருக்கிறோம். துறைசார் நிபுணர்களிடம் இதுகுறித்து விவாதித்து வருகிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

`48 மணி நேரத்தில் 10 கைக்குழந்தைகள் இறப்பு!’ - மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தொகுதியின் துயரநிலை

மேலும், ``மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனிடமும் கோட்டா மருத்துவமனை விவகாரத்தில் தனி கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளேன். ஹர்ஷவர்தன் ஒரு மருத்துவர். அவர் மருத்துவமனைக்கு நேரடியாகச் சென்று நிலவரங்களைப் பார்வையிட்டு குழப்ப நிலையில் இருக்கும் மக்களுக்கு தெளிவை ஏற்படுத்த வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

சரியான உடல் எடை இல்லாத காரணத்தால் குழந்தைகள் இறந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத், ``பிரியங்கா காந்தி, உத்தரப் பிரதேசத்தில் அரசியல் வித்தைகளைச் செய்வதற்கு மாறாக, ராஜஸ்தானில் குழந்தைகளை இழந்த தாய்மார்களைச் சந்தித்து ஆறுதல் கூறியிருக்கலாம். அவர்களுக்கும் ஆறுதலாக இருந்திருக்கும்" என்று விமர்சித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த மாதம் தேசிய குழந்தைகள் உரிமைகளுக்கான ஆணையம் மருத்துவமனைக்கு நேரடியான சென்று ஆய்வு செய்தது. உடைந்த ஜன்னல்கள், வளாகத்துக்குள் பன்றிகள் சுற்றுவது, ஊழியர்களின் பற்றாக்குறை ஆகியவற்றைக் கண்டறிந்தது. ``கதிரியக்க உபகரணங்கள் 70 சதவிகிதம் செயல்படவில்லை. படுக்கை - செவிலியர் விகிதம் 13:1ஆக உள்ளது. ஆக்ஸிஜன் குழாய் பற்றாக்குறை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் முறையாகச் செய்யப்படாதது குறித்து ஆணையம் கவலை தெரிவித்திருந்தது.

கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 1,000 குழந்தைகளுக்கும் மேல் அந்த மருத்துவமனையில் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு