Published:Updated:

`ஓவர் லோடு; விதிமுறைகளை மீறிட்டீங்க' - ராஜஸ்தான் டிரக் டிரைவருக்கு ரூ.1.41 லட்சம் அபராதம்!

தினேஷ் ராமையா

டெல்லியில், ராஜஸ்தானைச் சேர்ந்த டிரக் டிரைவருக்கு போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக ரூ.1.41 லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

Representational Image
Representational Image ( Pixabay )

நாடு முழுவதும் புதிய மோட்டார் வாகன சட்டத் திருத்தம், கடந்த ஒன்றாம் தேதி முதல் அமலானது. இதில், போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டிருக்கின்றன. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கான அபராதம் ரூ.2,000-த்திலிருந்து ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.

Representational Image
Representational Image

சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கான அபராதம் 10 மடங்கு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், செல்போனில் பேசியபடியே வாகனம் ஓட்டுபவர்களுக்கு 1000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.

புதிய சட்டம் அமல்படுத்தப்பட்ட பின்னர், நாடு முழுவதும் வாகன ஓட்டிகளுக்கு பெரிய தொகை அபராதமாக விதிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில், ஒடிசாவின் சம்பல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அசோக் ஜாதவ் என்ற டிரக் டிரைவருக்கு போக்குவரத்து விதிகளை மீறியதாக ரூ.86,500 அபராதமாக விதிக்கப்பட்டது. உரிய ஆவணங்களின் சரக்கு வாகனத்தை இயக்கியதற்காக ரூ.5,000, ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டியதற்காக ரூ.5,000, சரக்கு வாகனத்தில் கூடுதலாக 18 டன் எடையை ஏற்றியதற்காக ரூ.56,000 உள்ளிட்ட விதிமீறல்களுக்காக மொத்தம் அவருக்கு ரூ.86,500 அபராதமாக விதிக்கப்பட்டது.

Representational Image
Representational Image
Pixabay

அதேபோல், புவனேஷ்வரில் ஆட்டோ டிரைவர் ஒருவருக்கு போக்குவரத்து விதிகளை மீறியதாக ரூ.47,500 அபராதம் விதிக்கப்பட்டது. ஆட்டோவையே ரூ.26,000 -க்குதான் வாங்கியதாகவும், தன்னால் அவ்வளவு பெரிய தொகையை அபராதமாக செலுத்த இயலாது என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில், டெல்லியில் போக்குவரத்து விதிகளை மீறியதாக டிரக் டிரைவர் ஒருவருக்கு ரூ.1.41 லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் நடந்திருக்கிறது. ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் அளித்துள்ள தகவலின்படி, ராஜஸ்தானைச் சேர்ந்த பகவான் ராம் என்ற டிரக் டிரைவர், போக்குவரத்து விதிகளை மீறியதாக டெல்லி போலீஸாரால் கடந்த செப்டம்பர் 5-ம் தேதி பிடிக்கப்பட்டு, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Challan
Challan
ANI

இந்த நிலையில், டெல்லி ரோஹினி பகுதியில் உள்ள நீதிமன்றம், போக்குவரத்து விதிகளை மீறியதற்காக அவருக்கு ரூ.1,41,700-ஐ அபராதமாக விதித்திருக்கிறது. நீதிமன்றம் வழங்கிய சலான், சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. புதிய மோட்டார் வாகன சட்டத் திருந்தங்கள் அமலான பிறகு, இவ்வளவு பெரிய தொகை ஒருவருக்கு அபராதமாக விதிக்கப்படுவது இதுவே முதல்முறை.