Published:Updated:

முடிவுக்கு வந்த குழப்பம்..!- கொரோனா பரவல் அச்சம் காரணமாக ரத்தானது `ராம நவமி மேளா’

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

உச்ச நீதிமன்றம் ராமர் கோயில் கட்ட அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, இந்த வருடம் ராம நவமி விழாவைக் கோலாகலமாக நடத்த திட்டமிட்டிருந்தது யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப்பிரதேச அரசு.

கொரோனா வைரஸ், சீனாவில் தொடங்கி பல்வேறு நாடுகளுக்குப் பரவி வருகிறது. இந்த நோய்த் தொற்று உலகம் முழுவதும் பல்வேறு பாதிப்புகளை நிகழ்த்தி வருகிறது. நம் நாட்டிலும் கொரோனா நோய்த் தொற்று வேகமாகவே பரவிவருகிறது, மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, மொத்த கொரோனா வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கை இன்று 298 ஆக உள்ளது.

corona
corona

இந்த நோய்த் தொற்றுகளைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க உலக சுகாதார நிறுவனம் ஒரே இடத்தில் மக்கள் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாகத்தான் பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள், மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சங்கடங்கள் தீர்க்கும் சனி மஹாபிரதோஷம்... பிரச்னைகள் தீர்க்கும் எளிய பரிகாரங்கள்!

மேலும் பல தனியார் நிறுவனங்கள், தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் படி உத்தரவிட்டுள்ளன. மேலும் ஷீர்டி, திருப்பதி, காஞ்சிபுரம், பழநி உள்ளிட்ட முக்கியத் திருத்தலங்களிலும் பக்தர்கள் வர தடைவிதிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில், ராமர் பிறந்த அயோத்தி நகரில் ராம நவமி விழா மார்ச் 25 முதல் ஏப்ரல் 2 தேதி வரை நடக்கவிருந்தது.

உச்ச நீதிமன்றம் ராமர் கோயில் கட்ட அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, இந்த வருடம் ராம நவமி விழாவைக் கோலாகலமாக நடத்தத் திட்டமிட்டிருந்தது யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப்பிரதேச அரசு.

ராம நவமி
ராம நவமி

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவியதையடுத்து நிகழ்வை ரத்து செய்யுமாறு அயோத்தியின் தலைமை மருத்துவ அதிகாரி அரசிடம் கோரியிருந்தார். தலைமை மருத்துவ அதிகாரி கன்ஷ்யம் சிங் 'இவ்வளவு மக்கள் திரண்டால் அனைவரையும் சோதனை செய்யவேண்டும்; ஆனால் அந்த அளவிற்கு வசதிகள் தற்போது இல்லை' என்று கூறியுள்ளார். அயோத்தி நிர்வாகம் ராம நவமி மேளாவை ரத்து செய்வதுகுறித்து எந்த ஒரு முடிவும் வெளியிடாமல் மௌனம் காத்து வந்தது.

ராம நவமி மேளா ரத்து செய்யப்படாமல் இருந்தது மக்களை ஒரு விதக் குழப்பத்தில் ஆழ்த்தியிருந்தது. ராம நவமி விழாவைக் காணவரும் பக்தர்களுக்குக் கொரோனா தொற்று ஏற்பட அதிக வாய்ப்புகள் இருப்பதால், தற்போது இந்த ராம நவமி விழாவை ரத்து செய்ய இருப்பதாக விஸ்வ இந்து பரிஷத்தின் மூத்த தலைவர் மஹந்த் கல்யாண் தாஸ் லக்னோவில் தெரிவித்துள்ளார்.

ராம நவமி
ராம நவமி

அயோத்திக்குள் செல்லத் தடையேதும் விதிக்கப்படவில்லை என்றாலும் கூட்டம் கூடவும் அனுமதி இல்லை. மேலும் அயோத்தியில் உள்ள ராமர் சிலை மார்ச் 25ஆம் தேதி காலை 4 மணிக்கு உத்தரப்பிரதேச முதல்வர் அவர்கள் தலைமையில் மனஸ் பவனிற்கு மாற்றப்படும், பின்னர் ராம் மந்திர் கட்டடப் பணிகள் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு