Published:Updated:

`நீதி கிடைத்தால் ஏன் கேள்வி கேட்கிறார்கள்?’- நாடாளுமன்றத்தில் எதிரொலித்த தெலங்கானா என்கவுன்டர்

ஸ்மிரிதி இரானி
ஸ்மிரிதி இரானி ( ANI )

தெலங்கானாவில் நடந்த என்கவுன்டர் தொடர்பாக நாடாளுமன்றத்தில் காரசார விவாதம் நடந்தது.

தெலங்கானாவில் நவம்பர் 27-ம் தேதி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொல்லப்பட்டார். இந்த வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட நான்கு பேரும் இன்று காலை என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக காரசார விவாதம் நடந்தது.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி, ராய் பேசுகையில், ``ஹைதராபாத்தில் நடந்ததை என்கவுன்டர் என அழைக்கிறார்கள். ஃபேஸ்புக்கில் மக்கள் இதைக் கொண்டாடுகிறார்கள். நான் என்கவுன்டர்களை ஆதரிக்கவில்லை. ஆனால், பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்வது குறித்து மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். நாம் உடனடியாக நீதி வழங்கினால் மக்கள் இதுபோன்ற கேள்விகளைக் கேட்கமாட்டார்கள்” என்றார். சிவ சேனாவைச் சேர்ந்த அரவிந்த் சாவந்த் பேசுகையில், ``தெலங்கானா போலீஸாருக்குப் பலர் பாராட்டுகளைத் தெரிவித்தனர். நம்முடைய சட்ட அமைப்பு இவ்வளவு மெதுவாக இல்லாமல் இருந்திருந்தால் இது நடந்திருக்காது. நிர்பயா வழக்கு 7 வருடங்களைக் கடந்து விட்டது'' என்றார்.

`அதிகாலை விசாரணை; சம்பவ இடத்தில் நடந்தது என்ன?' -என்கவுன்டரை விவரித்த சஜ்ஜனார் ஐ.பி.எஸ் #DishaCase

பா.ஜ.கவைச் சேர்ந்த மீனாட்சி லெகி பேசுகையில், ``போலீஸாருக்கு ஒரு காட்சிப்பொருளாக ஆயுதங்களை வழங்கவில்லை” என்றார். எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு பா.ஜ.க எம்.பி ஸ்மிரிதி இரானி,``நான் இங்கு யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. ஆனால், மேற்கு வங்கத்தில் ஒரு கட்சி பாலியல் வன்கொடுமையை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துகிறது. அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் இங்கு பிரசங்கம் செய்கிறார்கள். உன்னவோ, ஹைதராபாத்தில் நடந்தது வெறுக்கத்தக்கது. ஆம், கடுமையான தண்டனைகள் இருக்க வேண்டும். ஆனால், இதுபோன்ற குற்றங்களை வைத்து அரசியல் செய்வது மன்னிக்க முடியாதது. மேற்கு வங்கத்தில் பாலியல் வன்கொடுமையை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்திய போது நீங்கள் அமைதியாகத்தானே இருந்தீர்கள்?” எனக் கொந்தளித்தார்.

ஸ்மிர்தி இராணி
ஸ்மிர்தி இராணி

உத்தரப்பிரதேச எம்.பி அனுப்பிரியா படேல்,``உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண், 90 சதவிகித காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். அந்தப் பெண்ணைக் கடத்திய 5 பேர் கொண்ட கும்பல் தீ வைத்துள்ளனர். இது உத்தரப்பிரதேசம் அல்லது தெலங்கானாவின் கேள்வி அல்ல. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு இந்த சிஸ்டத்தின் மீது எந்தப் பயமும் இல்லை. நிர்பயா வழக்கில் இதுவரை யாரும் தூக்கிலிடப்படவில்லை" என வேதனையை வெளிப்படுத்தினார்.

அடுத்த கட்டுரைக்கு