Published:Updated:

`31-ம் தேதிக்குள் தூக்கில் போடுங்கள்!' - ஹைதராபாத் குற்றவாளிகளுக்கு எதிராகச் சீறிய பெண் எம்.பி-க்கள்

ஹைதராபாத்தில் நடந்த சம்பவம் பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. குற்றத்தில் ஈடுபட்டவர்களை பொதுமக்கள் முன்னிலையில் அடித்துக் கொல்ல வேண்டும்.

ஜெயாபச்சன்
ஜெயாபச்சன்

ஹைதராபாத் கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என நாடெங்கும் ஒருமித்த குரலில் ஒலித்த வண்ணம் உள்ளன. நிர்பயா வழக்கு தாமதமானதுபோல் இந்த வழக்கும் தாமதம் ஆகிவிடக் கூடாது என்று கோரிக்கைகள் எழுந்தவண்ணம் உள்ளன. அதற்கேற்ப இந்த வழக்கை விரைவாக விசாரிக்கும் வண்ணம் விரைவு நீதிமன்றத்துக்கு வழக்கை மாற்றி தெலங்கானா முதல்வர் சந்திரசேகர்ராவ் உத்தரவிட்டுள்ளார். இந்தநிலையில், பெண் மருத்துவர் கொலைச் சம்பவம் இன்று மாநிலங்களவையில் எதிரொலித்தது.

ஹைதராபாத் குற்றவாளிகள்
ஹைதராபாத் குற்றவாளிகள்

இந்தக் கொடூர குற்றத்தை செய்தவர்களுக்குக் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் எனப் பல்வேறு கட்சிகளை பெண் உறுப்பினர்களும் மற்ற உறுப்பினர்களும் பேசினர். சமாஜ்வாதி கட்சியின் பெண் எம்.பி ஜெயாபச்சன் பேசுகையில், ``நிர்பயா தொடங்கி இதுபோன்று எத்தனையோ சம்பவங்கள் நடந்துவிட்டன. இருந்தும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர் கதையாக மாறி வருகிறது. மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு என்ன பதில் சொல்லப்போகின்றன. ஹைதராபாத்தில் நடந்த சம்பவம் பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. குற்றத்தில் ஈடுபட்டவர்களை பொதுமக்கள் முன்னிலையில் அடித்துக் கொல்ல வேண்டும்.

`இரவு 12 மணிக்கு வந்து 3 மணிக்கு சென்றுவிட்டான்!’ - ஹைதராபாத் வழக்கில் கைது செய்யப்பட்டவரின் தாய்

இந்தத் தருணத்தில் அரசு தகுந்த திட்டவட்டமான பதிலை அளிக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்" என ஆவேசமாகப் பேசினார். தொடர்ந்து பேசிய அ.தி.மு.க எம்.பி விஜிலா சத்தியானந்த், ``நாட்டில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் போதிய பாதுகாப்பு இல்லை. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு டிசம்பர் 31-ம் தேதிக்குள் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும். தாமதமாகக் கிடைக்கும் நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம்" என்றார்.

விஜிலா சத்தியானந்த்
விஜிலா சத்தியானந்த்

அவர்களுக்குப் பதிலளித்து பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், ``ஹைதராபாத் சம்பவம் ஒட்டுமொத்த தேசத்துக்கும் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடூர குற்றத்தைக் கண்டிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. 2012-ல் நிர்பயா கொலை சம்பவத்துக்குப் பிறகு, நாட்டில் பெண்களுக்கு எதிராக நிகழும் குற்றங்களைத் தடுக்கும் வகையில் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டன. ஆனால், அவை எதிர்பார்த்த அளவு பலனளிக்கவில்லை. எனினும், தற்போது பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கு எடுக்க வேண்டிய சட்டத்திருத்தங்கள் குறித்து விவாதித்து, நடவடிக்கை மேற்கொள்ள மத்திய அரசு தயாராக இருக்கிறது" என்றார்.

`அவள் பேசிய கடைசி வார்த்தை; அதிர்ச்சி கொடுத்த போலீஸ்!' 
-கலங்கும் ஹைதராபாத் பெண் மருத்துவரின் தாய்