மத்தியப்பிரதேச மாநிலம் ரட்லாம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சூரஜ் பாட்டி என்பவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். கோமா நிலையில் இருக்கும் அவருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சூரஜ் மீண்டும் நலமுடன் திரும்பிவருவார் என அவரின் குடும்பத்தினர் காத்திருக்கின்றனர். இந்த நிலையில், மருத்துவமனையில் நடந்த சம்பவம் அவர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

சூரஜ் இருந்த பெட்டில் ரத்தக்கரை தென்பட்டுள்ளது. இதைக்கண்ட அவரின் தந்தை என்னவென்று பார்த்துள்ளார். சூரஜின் வலது காலில் ரத்தம் வடிந்ததைக் கண்டு பதறியவர் வார்டு பாய் மற்றும் செவிலியர்களிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். ``மருத்துவமனையில் இருக்கும் எலிகள் உங்கள் மகனின் காலைக் கடித்திருக்கும். அந்த எலிகளை விரட்ட முயற்சிசெய்கிறோம். ஆனால், அவை மீண்டும் வந்துவிடுகிறது. நோயாளிகளை இந்த எலிகள் தாக்கும் என்று நினைக்கவில்லை'' என அலட்சியமாகப் பதிலளித்துள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஊழியர்களின் இந்தப் பதிலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரின் குடும்பத்தினர், இந்தச் சம்பவம் தொடர்பாக மருத்துவரிடம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தி அலட்சியமாக நடந்துகொண்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவர் உறுதியளித்துள்ளார்.

மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியமே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் உள்நோயாளிகளைக் காணவரும் பார்வையாளர்கள் கொண்டுவரும் உணவுப் பொருள்களில் மீதமுள்ளவை முறையாக அப்புறப்படுத்தாததும் பிரச்னைக்குக் காரணமாக அமைகிறது. இதுபோன்ற சம்பவங்கள் அரசு மருத்துவமனைகளில் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது ஒவ்வோர் அரசின் கடமை!