Published:Updated:

மும்பை மாநகராட்சி மருத்துவமனையில் நோயாளியைக் கடித்துக் குதறிய எலிகள்! - அதிர்ச்சி சம்பவம்

மும்பை மருத்துவமனையில் நோயாளி
மும்பை மருத்துவமனையில் நோயாளி

மும்பை மாநகராட்சி மருத்துவமனையில், நோயாளியை எலிகள் கடித்துக் குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மும்பையில், மாநகராட்சி நிர்வாகம் காட்கோபரில் ராஜாவாடி என்ற மருத்துவமனையை நடத்திவருகிறது. இந்த மருத்துவமனைக்கு கிழக்குப் புறநகர் பகுதியைச் சேர்ந்த ஏழை நோயாளிகள் அதிக அளவில் வருவதுண்டு. இந்த மருத்துவமனையில் குர்லாவைச் சேர்ந்த ஸ்ரீனிவாஸ் எல்லப்பா (24) என்ற நோயாளி கல்லீரல் தொடர்பான பிரச்னைக்காக சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டிருந்தார். மயக்கநிலையில் இருந்த அவரை ஊழியர்கள் கீழ்த்தளத்திலுள்ள அவசர சிகிச்சை பிரிவு வார்டில் சேர்த்திருந்தனர். அவர் மயக்கநிலையில் இருந்தபோது உள்ளே வந்த சில எலிகள் அவரது கண்ணுக்குக் கீழே கடித்துக் குதறின. அதிர்ஷ்டவமாக இதில் எலிகள் கண்ணைக் கடிக்கவில்லை. கண்ணைக் கடித்திருந்தால் கண் பார்வையே பறிபோயிருக்கும்.

எலி கடித்த இடத்தில் டாக்டர்கள் மருந்துவைத்து கட்டியிருந்தனர். நோயாளியின் சகோதரி அதைப் பார்த்து, என்ன ஆனது என்று கேட்டபோது, `எலி கடித்திருக்கலாம்’ என்று ஊழியர்கள் சர்வ சாதாரணமாகத் தெரிவித்ததாகத் தெரிகிறது. தற்போது நோயாளியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. கண்ணுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று மருத்துவமனையின் டீன் டாக்டர் வித்யா தாக்கூர் தெரிவித்தார். ``நோயாளி சேர்க்கப்பட்டிருந்த வார்டு கீழ்த்தளத்தில் இருக்கிறது. வார்டுக்கு வெளியிலுள்ள பகுதியில் பொதுமக்கள் குப்பைகளைப் போட்டுள்ளனர். இதனால் எலிகள் வந்திருக்கலாம்” என்று தெரிவித்தார்.

மருத்துவமனைl
மருத்துவமனைl

இந்தச் சம்பவம் குறித்து மேயர் கிஷோரி அளித்த பேட்டியில், ``எலிகள் கடித்த நோயாளியின் நிலை சரியில்லை. இந்தச் சம்பவம் நடந்திருக்கக் கூடாது. இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்துக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். மருத்துவமனையில் நோயாளியை எலிகள் கடித்துக் குதறிய சம்பவம் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்யிருக்கிறது.

இதற்கு முன்பு மும்பை காந்திவலியிலுள்ள பாபாசாஹேப் அம்பேத்கர் மருத்துவமனையில் மூன்று நோயாளிகளை எலிகள் கடித்துக் குதறின. அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 2 லட்சம் ரூபாய் வழங்க மனித உரிமை கமிஷன் உத்தரவிட்டது. மும்பையில் மாநகராட்சி நிர்வாகம் லோக்மான்ய திலக் மருத்துவமனை, கே.இ.எம் உட்பட சில மருத்துவமனைகளை சொந்தமாக நடந்திவருகிறது.

அடுத்த கட்டுரைக்கு