கடந்த டிசம்பர் மாதம் இரண்டு கட்டங்காளாக நடைபெற்ற குஜராத் மாநில சட்டசபைத் தேர்தலில் இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜாம்நகர் வடக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தற்போது தேர்தல் சமயத்தில் ஆர்.எஸ்.எஸ் குறித்து தனது மனைவி ரிவாபா பேசிய வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்த ரவீந்திர ஜடேஜா, அதனுடன் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைப் புகழ்ந்து தனது கருத்துக்களையும் பதிவிட்டுள்ளார்.
அப்பதிவில், “ ஆர்.எஸ்.எஸ் பற்றிய உங்கள் புரிதலைப் பார்க்க மிகவும் நன்றாக இருக்கிறது. இந்திய கலாசாரம் மற்றும் சமூகத்தின் மதிப்புகளை நிலைநிறுத்துவதற்கான இலட்சியங்களை ஊக்குவிக்கும் ஒரு அமைப்புதான் ஆர்.எஸ்.எஸ். உங்கள் அறிவும் கடின உழைப்பும்தான் உங்களைத் தனித்துவமாகக் காட்டுகிறது. இதனைத் தொடர்ந்து கடைபிடியுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பதிவிற்கு கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் தங்கள் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். உங்கள் மனைவியை ஊக்குவிப்பதும், ஆதரிப்பதும் புரிந்துகொள்ளத்தக்கதுதான் ஆனால் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மனைவியின் அரசியல் கருத்துக்களை ஆமோதிப்பதற்கு, நீங்கள் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறும் வரை காத்திருந்திருக்கலாம் என்றும் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு ஆர்.எஸ்.எஸ் புகழ் பாடுங்கள் என்றும் சமூக வலைதளங்களில் ரவீந்திர ஜடேஜாவை விமர்சித்து வருகின்றனர்.