Published:Updated:

‘இந்தியாவுக்கு உதவ தயார்!’ - கொரோனா நெருக்கடி பற்றி ரகுராம் ராஜன் கருத்து

ரகுராம் ராஜன்
ரகுராம் ராஜன்

நெருக்கடியான இந்த நேரத்தில், இந்தியாவுக்கு உதவ தயாராக இருப்பதாக ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

ஒரு தனியார் தகவல் அலைவரிசை, ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரான ரகுராம் ராஜனிடம் ,"இந்தியாவிற்கு கோவிட்-19னால் ஏற்படும் பொருளாதார சரிவைச் சீராக்க, தங்களது ஆளுமை தேவைப்பட்டால் இந்தியா வருவீர்களா? "என்று கேட்டது. அதற்கு அவர், ''வருவேன்'' என்று கூறினார். செப்டம்பர் 2016 வரை மூன்று ஆண்டுகளுக்கு ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த 57வயது ராஜன், தற்போது சிகாகோவிலுள்ள ஒரு புகழ்பெற்ற பல்கலைகழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்துவருகிறார். ராஜன், ஏற்கெனவே ஐ.எம்.ஏஃப் அமைத்த, கொரோனாவால் ஏற்படும் பாதிப்புகளைக் களைவதற்கான சட்டதிட்டங்களைப் பரிந்துரைக்கும் 11 நபர்கள் கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுவருகிறார்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

மேலும் அவர்,"உலகமே ஆழமான பொருளாதார மந்தநிலையில் உள்ளது. இதைச் சரிசெய்ய அடுத்த வருடம் ஆகிவிடும் என எதிர்பார்க்கிறேன். இந்தியாவில், முதல் சிரமம் அந்நியச் செலாவணியில்தான் உள்ளது. இதுவரை மற்ற பங்குச் சந்தையை விட இந்திய பங்குச் சந்தையின் விகிதம் சற்று நிலையானதாக இருந்தது. பிரேஸில் போன்ற நாடுகள் 25% -க்கு கீழே சென்றுவிட்டது. நாம் இன்னும் அந்த நிலைக்குச் செல்லவில்லை.

இந்திய அரசு எதிர்க்கட்சிகளில் இருந்தும்கூட ஆளுமையும், செயல்திறனும் மிக்க நபர்களைத் தேர்ந்தெடுத்து, இந்த அவசர நிலையைச் சமாளிக்க வேண்டும். எல்லாவற்றையும் பிரதமரின் அலுவலகத்து ஊழியர்களே செய்து முடிக்க முடியாது. இத்தருணத்தில், ஏற்கெனவே பல பொருளாதார நெருக்கடிகளை சந்தித்த, அனுபவம் மிக்க எதிர்க்கட்சி ஆளுமைகளையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.

ரகுராம் ராஜன்
ரகுராம் ராஜன்

பொருளாதார அடிப்படையில், இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு மிகப்பெரிய அவசர நிலையை தற்போது சந்தித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். 2008-09 ல் உலக அளவில் நடந்த பொருளாதார நெருக்கடியே மிகவும் மோசமானது. அப்போதுகூட நமது பணியாளர்கள் வேலைக்குச் சென்றனர். அலுவலகங்கள் செயல்பட்டுவந்தன. அரசாங்க நிதி சிறப்பாக இருந்தது. ஆனால், தற்போதைய நிலை அதுவல்ல. எனினும், சரியான முறையில் முன்னுரிமைகளை வைத்து, மீளும் வலிமையைக் கொண்டுவந்தால், இந்தியா இந்த வைரஸை துரத்திவிட்டு,மேம்பட்ட நாளையை உருவாக்க முடியும் என்றார்.

அடுத்த கட்டுரைக்கு