Published:Updated:

`நோபல் மேடையில் அபிஜித் வேட்டி அணிந்தது ஏன்?' - காரணம் சொல்லும் கொல்கத்தா நண்பர்

இந்தியரான அபிஜித், அவரின் மனைவி எஸ்தர் ஆகியோர் வேட்டி, சேலை அணிந்து நோபல் பரிசு பெற்றனர்.

நோபல் மேடையில் அபிஜித், எஸ்தர்
நோபல் மேடையில் அபிஜித், எஸ்தர்

இந்தியாவைச் சேர்ந்த பொருளாதார மேதை அபிஜித் பானர்ஜி, அவரின் மனைவி எஸ்தர் டஃப்லோ மற்றும் ஹார்வர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் மைக்கேல் க்ரீமர் ஆகியோருக்கு இந்த ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1998-ம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை இந்தியரான அமர்த்தியா சென் பெற்றார். அந்த வகையில், பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை பெற்ற இரண்டாவது இந்தியர் அபிஜித் பானர்ஜி ஆவார்.

விருது விழாவில் வேட்டியுடன் அபிஜித்
விருது விழாவில் வேட்டியுடன் அபிஜித்

1983-ம் ஆண்டு டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்.ஏ பொருளதாரம் முடித்த பிறகு, அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். தற்போது 58 வயதான கொல்கத்தாவைச் சேர்ந்த அபிஜித் அமெரிக்காவின் புகழ்பெற்ற மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணி புரிந்து வருகிறார். இவருடன் சேர்ந்து விருதைப் பெற்ற 46 வயதான எஸ்தர் டஃப்லோ பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை வென்ற இரண்டாவது பெண். இவரும் மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணி புரிகிறார்.

`வேட்டியில் கவனம் ஈர்த்த அபிஜித் பானர்ஜி; பிரமாண்ட விருந்து!’- நோபல் பரிசு வழங்கும் விழா ஹைலைட்ஸ்

ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நேற்று நோபல் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் அபிஜித் பானர்ஜி தமிழர்களின் வேட்டி மற்றும் வட இந்தியாவின் குர்தா அணிந்து விருதைப் பெற்றார். அதேபோல், பானர்ஜியின் மனைவி எஸ்தர் சேலை அணிந்து நோபல் பரிசை பெற்றுக்கொண்டார். இவர்களுக்கு 9 மில்லியன் ஸ்வீடிஷ் க்ரோனா, அதாவது இந்திய மதிப்பில் ரூ.6.7 கோடி ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.

பொருளாதாரத்துக்கான விருது பெற்ற மூவர்
பொருளாதாரத்துக்கான விருது பெற்ற மூவர்

வறுமை ஒழிப்புக்கான வழிமுறைகளை ஆய்வு செய்து, தனித் தனி குழுக்களாக வகைப்படுத்தி ஆய்வு செய்யும் முறைக்காக இவர்கள் மூன்று பேருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டன. 2003-ம் ஆண்டு சவுதி அரேபியா நாட்டைச் சேர்ந்த அப்துல் லத்தீப் ஜமீர் பெயரில் வறுமை ஒழிப்பு மையம் ஒன்றை அபிஜித் மற்றும் எஸ்தர் டஃப்லோ தொடங்கினார்கள். இந்த மையத்தைத் தொடங்க தமிழகத்தைச் சேர்ந்தவரும் சிகாகோ பல்கலைக்கழகப் பொருளதார பேராசியராகப் பணி புரிந்தவருமான முல்லை வேந்தனும் உறுதுணையாக இருந்தார். தமிழக அரசும் இந்த அமைப்புடன் 2014-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்து செயல்பட்டு வருகிறது.

பன்னாட்டு மேடையில் இந்திய பாரம்பர்ய உடை அணிந்து விருது பெற்ற அபிஜித் மற்றும் அவரின் மனைவிக்கு இந்தியர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அபிஜித்தின் நெருங்கிய நண்பர் பப்பா சென் கூறுகையில், ``அபிஜித் சாதனைகள் படைக்க விரும்புவது போல இந்திய பாரம்பர்யத்தையும் நேசிப்பவர். எங்கு சென்றாலும் இந்தியாவை பெருமைப்படுத்த விரும்புவார். இதனால்தான் பன்னாட்டு மேடையில் வேட்டி அணிந்து வந்துள்ளார். இதுபோன்ற குணங்கள்தான் அவரை, மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்துகிறது'' என்றார்.