Published:Updated:

கொரோனாவால் ஒரே நாளில் இந்தியாவில் பதிவான 2,003 மரணங்கள்! -என்ன காரணம்?

கொரோனா உயிரிழப்பு
கொரோனா உயிரிழப்பு

``முதல் 5000 இறப்புகள் பதிவாக சுமார் 80 நாள்கள் ஆனது. ஆனால், அடுத்த 5000 இறப்புகள் வெறும் 17 நாள்களில் நிகழ்ந்துள்ளன என்பது கவனிக்கத்தக்கது.”

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,43,091 -லிருந்து 3,54,065 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில், 24 மணி நேரத்தில் 10,974 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. வைரஸால் பாதிப்படைந்தவர்களில், இறந்தவர்களின் எண்ணிக்கை 9,900-லிருந்து 11,903 ஆக அதிகரித்துள்ளது. அதாவது, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,000-க்கும் மேற்பட்டவர்கள் இறந்ததாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,409 பேரும், டெல்லியில் 437 பேரும் இந்த வைரஸ் தொற்றுக்கு பலியானதாகத் தகவல் தெரிவிக்கிறது. இந்தியாவில் வைரஸ் பாதிப்பால் உயிரிழப்பவர்களின் ஒருநாள் எண்ணிக்கை நாளுக்கு 200, 300 என நூற்றுக்கணக்கில் இருந்துவந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை ஆயிரமாக உயர்ந்துள்ளது அதிர்ச்சியையும் கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா - கொரோனா
இந்தியா - கொரோனா

டெல்லியில் இறப்பு எண்ணிக்கை தொடர்பான சர்ச்சைகள் ஏற்கெனவே எழுந்து வந்தன. மருத்துவமனை படுக்கைகள், வென்டிலேட்டர் எனப் பல மருத்துவ வசதிகள் குறைவாக இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் டெல்லி மீது தொடர்ந்து எழுந்தன. இந்த நிலையில், இறப்பு எண்ணிக்கை சர்ச்சை தொடர்பாக டெல்லி சுகாதாரத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் பேசும்போது, ``கொரோனா வைரஸால் முந்தைய நாள்களில் இறந்தவர்களின் எண்ணிக்கையைச் சேர்க்காமல் தவறுதலாக விடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கைகளைத் தற்போது சேர்த்துள்ளதால், இறப்பு எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. அலுவலகர்களின் தவறுகள் மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக, இறப்பு எண்ணிக்கையில் சேர்க்காமல் தவறவிடப்பட்டுள்ளது” என்று கூறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இறப்புகள், பெரும்பாலும் ஜூன் மாதத்தில் நிகழ்ந்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால், டெல்லியில் இறப்பு விகிதம் 3.3 சதவிகிதத்தில் இருந்து 4.1 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

கொரோனா அச்சம்: துரத்திய காம்பவுண்டு வாசிகள்; காட்டில் தஞ்சமடைந்த தேனி பெண்!

கொரோனா வைரஸால் கடுமையாக பாதிப்படைந்த மாநிலங்களில் முதன்மையானது மகாராஷ்டிரா. கடந்த 24 மணி நேரத்தில் 1,400-க்கும் அதிகமான இறப்புகள் அங்கு பதிவானதாக தகவல்கள் வெளியானது. இதனால், அம்மாநிலத்தில் இறப்பு எண்ணிக்கை 5,500-ஐ கடந்துள்ளது. இந்த மாநிலத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட இறப்பு எண்ணிக்கையில், மும்பையில் மட்டும் 800-க்கும் அதிகமான இறப்புகள் கூடுதலாகப் பதிவானது தெரியவந்துள்ளது. மீதமுள்ள சுமார் 500 இறப்புகள் மாநிலம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் நிகழ்ந்துள்ளன இந்த இறப்புகள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் அதிகமாக நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இறப்பு எண்ணிக்கையால் மகாராஷ்டிராவின் இறப்பு விகிதம், 3.7 சதவிகிதத்தில் இருந்து 4.9 சதவிகிதம் ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகமான பின்னர் அமைக்கப்பட்ட மாநில இறப்பு எண்ணிக்கையை தணிக்கை செய்யும் குழுவினர், நிலுவையில் இருந்த எண்ணிக்கைகளை தற்போது சேர்த்ததால் இந்த எண்ணிக்கை அதிகமானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தக் குழுவினர், அவர்களின் இறப்புக்கான காரணம் குறித்த முடிவுகளை அறியும் பணியில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறுகின்றனர். இந்த இறப்பு எண்ணிக்கைகளை வகைப்படுத்துவதில் தாமதம் ஏறப்பட்டதாகக் கூறப்படுகிறது. எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு, இந்த எண்ணிக்கையைத் தற்போது அவர்கள் வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

கொரோனா
கொரோனா

இந்தியாவில் தற்போது இறந்தவர்களின் எண்ணிக்கை 11,903 ஆக அதிகரித்துள்ளது. இதில், முதல் 5,000 இறப்புகள் பதிவாக சுமார் 80 நாள்கள் ஆனது. ஆனால், அடுத்த 5,000 இறப்புகள் வெறும் 17 நாள்களில் நிகழ்ந்துள்ளன என்பது கவனிக்கத்தக்கது. கடந்த வாரத்தில் மட்டும் சுமார் 2,500-க்கும் அதிகமான வைரஸ் தொற்று நோயாளிகள் இறந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கைகள் அதிகரிப்பு, ஒட்டுமொத்த இந்தியாவின் இறப்பு விகிதத்தை 2.9 சதவிகிதத்தில் இருந்து 3.4 சதவிகிதம் ஆக உயர்த்தியுள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸால் கடுமையாகப் பாதிப்படைந்த நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. எனினும், மற்ற நாடுகளின் மக்கள் தொகை, பாதிப்பு எண்ணிக்கை மற்றும் இறப்பு எண்ணிக்கை ஆகியவற்றை இந்தியாவுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, பாதிப்புகள் மிகவும் குறைவாக உள்ளதாகவே சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

`WHO-வுக்கு எச்சரிக்கை; மொத்த எண்ணிக்கையை வெளியிட்ட பிரேசில்!’ - ட்ரம்ப்பை பின்பற்றும் பொல்சனாரோ?
அடுத்த கட்டுரைக்கு