Published:Updated:

`ஒரே இடத்தில் குவிந்த இரு தரப்பினர்; பாடல் மூலம் எதிர்ப்பு!’ - டெல்லியில் நடந்தது என்ன?

டெல்லிக் கலவரம்
டெல்லிக் கலவரம் ( AP )

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் முதல்முறையாக தன் குடும்பத்தினருடன் இந்தியா வந்துள்ள இந்தச் சூழலில் டெல்லியில் இவ்வளவு பெரிய கலவரம் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடியுரிமை சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் அமல்படுத்தப்பட்டதிலிருந்து தலைநகர் டெல்லி தொடங்கி பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. குடியுரிமை திருத்தச் சட்டத்தை முன்வைத்து டெல்லியில் கடந்த இரண்டு மாதங்களாகப் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மாணவர்கள், பெண்கள், பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் சாலையில் இறங்கி கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

டெல்லிக் கலவரம்
டெல்லிக் கலவரம்
AP

இதே குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஷாகின்பாக் பகுதியில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நூற்றுக்கணக்கான பெண்கள் இணைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது இருந்தும் தற்போது வரை அந்தப் பெண்களின் போராட்டம் தொடர்ந்துகொண்டுதான் உள்ளது. இதன் அடுத்தகட்டமாகக் கடந்த சனிக்கிழமை இரவு முதல், ஜாஃப்ராபாத் மெட்ரோ நிலையத்துக்கு அருகில் கூடிய வடகிழக்கு டெல்லியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்களும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர்.

பெண்களின் போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும் குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அதே ஜாஃப்ராபாத் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த ட்விட்டரில் அழைப்பு விடுத்திருந்தார் பா.ஜ.க மூத்த தலைவர் கபில் மிஸ்ரா. ஞாயிற்றுக்கிழமை மாலை 4:30 மணிக்குக் குடியுரிமை திருத்த சட்ட ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் ஒரே இடத்தில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அவர்கள் கூடிய அடுத்த சில மணி நேரங்களில் இரு குழுவினருக்கும் இடையே கலவரம் வெடித்தது. இரு தரப்பினரும் மாறி மாறி கற்கள் வீசியும், வாகனங்களை எரித்தும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். தொடர்ந்து தகவல் அறிந்த காவல்துறையினர், கலவரக்காரர்களைக் கட்டுப்படுத்த கண்ணீர் புகைக்குண்டுகள் வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தைக் கலைத்தனர்.

ஜாமியா, அலிகர், ஷாகின் பாக் - பி.ஜே.பி அரசின் மீது வைக்கப்படுகிற குற்றச்சாட்டு என்ன?

அதே ஞாயிற்றுக்கிழமை மாலை கபில் மிஸ்ரா வீடியோவுடன் மீண்டும் ஒரு ட்விட்டர் பதிவு வெளியிட்டார். அதில் அவர் வடக்கிழக்கு டெல்லியின் துணை கமிஷனர் அருகில் நின்று பேசுகிறார், `என் ஆதரவாளர்கள் அமெரிக்க அதிபரின் வருகைக்காக மட்டுமே அமைதி காக்கிறார்கள்; இல்லையென்றால் டெல்லி போலீஸ் உட்பட யாருடைய பேச்சையும் நாங்கள் கேட்கமாட்டோம். சி.ஏ.ஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட அனைத்துச் சாலைகளையும் நாங்கள் விடுவிப்போம்” என்று பேசியிருந்தார். இவரின் பேச்சு சமூகவலைதளங்களில் கடும் விமர்சனங்களைப் பெற்றது.

டெல்லிக் கலவரம்
டெல்லிக் கலவரம்
AP

பின்னர் திங்கள்கிழமை காலையிலேயே ஜாஃப்ராபாத் மற்றும் மஜ்பூர் ஆகிய இரண்டு பகுதிகளிலும் திரண்ட சி.ஏ.ஏ ஆதரவாளர்கள், `சுதந்திரம் கேட்பவர்களைப் பாகிஸ்தானுக்கு அனுப்புங்கள்' என்று ஸ்பீக்கர்களில் பாடல் இசைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். சி.ஏ.ஏ ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் மீண்டும் ஒரே இடத்தில் கூடி போராட்டம் நடத்தினர்.

அமைதியான முறையில் நடந்துகொண்டிருந்த போராட்டத்தில் நேற்று பிற்பகல் 12 மணியளவில் மீண்டும் வன்முறை வெடித்தது. இரு பிரிவைச் சேர்ந்த சிறு குழுக்கள் தங்களுக்குள் மாறி மாறி கற்களை வீசிக்கொண்டனர். இதனால், மீண்டும் போராட்டக்காரர்களை நோக்கிக் காவலர்கள் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

`காவலரை மிரட்டி துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர்!’ - பற்றி எரியும் டெல்லி போராட்டக்களம்

இதையடுத்து அடுத்த இரண்டு மணி நேரத்தில் அதாவது பிற்பகல் 2 மணியளவில் இந்த இரண்டு குழுக்களும் எதிர் எதிர்த் திசையில் ஜாஃப்ராபாத் நகரை நோக்கி நடந்து வந்தனர். அப்போதே பெரும் கலவரம் நடக்கப்போவதாகக் காவலர்கள் யூகித்தனர். கலவரக்காரர்களைத் தடுப்பதற்குப் போதுமான காவலர்கள் சம்பவ இடத்துக்கு வருவதற்குள் இரு பிரிவினருக்கும் இடையே மீண்டும் பெரும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த முறை பெரிய பெரிய கற்களால் இரு தரப்பினரும் தாக்கிக்கொண்டுள்ளனர்.

டெல்லிக் கலவரம்
டெல்லிக் கலவரம்
AP

ஆனால், நிலைமை காவலர்களின் கட்டுக்குள் இல்லாததால் அவர்களின் கண்ணீர்ப் புகைக் குண்டுகளாலும் கலவரத்தைத் தடுக்க முடியவில்லை. அந்தப் பகுதியிலிருந்த வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. அந்தச் சமயத்தில்தான், சிவப்பு நிற டி -சர்ட் அணிந்திருந்த ஒரு இளைஞர், அங்கு இருந்த காவலரை நோக்கித் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. அங்கு மேலும் சிலரும் துப்பாக்கியுடன் இருந்ததாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. நேற்று மாலை ஐந்து மணி வரை கல்வீச்சு சம்பவங்கள் தொடர்ந்துள்ளன.

இறுதியாக ஆயிரக்கணக்கான காவலர்கள் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டு கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். ஜாஃப்ராபாத் மற்றும் மஜ்பூர் ஆகிய இரண்டு பகுதிகளிலும் தற்போது வரை ஆயிரக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு டெல்லியில் நடந்த கலவரத்தில் ஒரு காவலர் உட்பட 5 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நேற்று முதல் வடகிழக்கு டெல்லி முழுவதும் கலவரத்தால் பற்றி எரிந்துகொண்டுள்ளது. இதனால் அந்தப் பகுதியில் உள்ள கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 9 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

ட்ரம்ப்
ட்ரம்ப்
AP

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் முதல்முறையாக தன் குடும்பத்தினருடன் இந்தியா வந்துள்ள இந்தச் சூழலில் டெல்லியில் இவ்வளவு பெரிய கலவரம் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கலவரத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தன் இரங்கலைத் தெரிவித்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அமித் ஷா கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லி போலீஸ் மூலம் தற்போது நடக்கும் நிலைமையைச் சரிசெய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

News Credits : NDTV

அடுத்த கட்டுரைக்கு