Published:Updated:

`சிறப்பான அரசியல் விளையாட்டுகள் நடக்கின்றன..!' - கட்டாய ஓய்வால் கொந்தளிக்கும் ரெஹானா பாத்திமா

ரெஹானா பாத்திமா
ரெஹானா பாத்திமா

எனது நடவடிக்கை பி.எஸ்.என்.எல்லின் மரியாதையை குறைத்துள்ளதாகவும் அதன் வருவாயைப் பாதித்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

சபரிமலை சந்நிதானத்துக்கு, அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவைத் தொடர்ந்து 2018-ம் ஆண்டு சபரிமலைக்குச் செல்ல முயன்ற சமூக செயற்பாட்டாளர் ரெஹானா பாத்திமா மீது போலீஸ் வழக்கு பதிவு செய்தது.

இதையடுத்து, எர்ணாகுளம் போர்ட் பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் டெலிகாம் டெக்னீஷியனாகப் பணிபுரிந்த அவர் பாலாரிவட்டம் அலுவலகத்துக்கு மாற்றப்பட்டார். இதற்கிடையில் 2018 நவம்பர் 27-ம் தேதி அவர் பணியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டார். அதுதொடர்பாக, ரெஹானா பாத்திமா சட்ட நடவடிக்கை எடுத்துவந்த நிலையில் அவருக்குக் கட்டாய ஓய்வு கொடுத்துள்ளது பி.எஸ்.என்.எல். இதனால் கொந்தளித்த ரெஹானா பாத்திமா, அடுத்ததாக நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும். எதற்கும் கலங்க மாட்டேன் எனவும் கூறியுள்ளார்.

ரெஹானா பாத்திமா
ரெஹானா பாத்திமா

பி.எஸ்.என்.எல் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து ரெஹானா பாத்திமா, "கட்டாய ஓய்வு என பி.எஸ்.என்.எல் எனக்கு ஆர்டர் தந்துள்ளது. சபரிமலைக்குச் செல்ல முயன்றதாகவும் ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்டதும் இதற்குக் காரணமாகக் கூறப்பட்டுள்ளது. எனது நடவடிக்கை பி.எஸ்.என்.எல்லின் மரியாதையைக் குலைத்துள்ளதாகவும், அதன் வருவாயைப் பாதித்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. சிறப்பான அரசியல் விளையாட்டுகள் நடக்கிறது என்பது எனக்குப் புரிகிறது.

`மத உணர்வைப் புண்படுத்திவிட்டார்!’ - பிஎஸ்என்எல் பணியிலிருந்து நீக்கப்பட்ட ரெஹானா ஃபாத்திமா

எனக்கு எதிரான நடவடிக்கைக்கு டெல்லியில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் வரும் என நான் எதிர்பார்த்தேன். ஒருவருடைய வழிபாட்டு சுதந்திரத்தைப் பறிப்பது எந்தவகையில் நியாயம். இந்த விஷயத்தில் சங்பரிவாரின் விளையாட்டும் உண்டு என்பது தெரிகிறது. இதை நான் சட்ட ரீதியாக அணுக உள்ளேன்.

சபரிமலைக்குச் சென்றது தவறு என நான் நினைக்கவில்லை. அது எல்லோருடைய உரிமை. நான் ஏற்கெனவே சஸ்பெண்டில் இருக்கிறேன். அதுகுறித்து வழக்கு தொடர்ந்துள்ளேன். சட்டத்துக்கு எதிராக நான் எதுவும் செய்யவில்லை. நான் சபரிமலை செல்ல முயன்ற வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. இந்தநிலையில்தான் கட்டாய ஓய்வு என அறிவித்துள்ளார்கள்.

ரெஹானா பாத்திமா
ரெஹானா பாத்திமா

இதற்காக நான் அழப்போவதில்லை. வாழ வழியில்லை என அழக்கூடிய ஆள் நான் இல்லை. நான் அழுவதைப் பார்க்கும் ஆசை எதிரிகளுக்கு இருந்தால் அது நிராசையாக முடியும். பி.எஸ்.என்.எல் பணியில் இருந்து நீக்கினால் எனக்கு வாழ வழியில்லை என நினைக்க வேண்டாம். எனக்குப் பல வழிகள் உள்ளன. அடுத்ததாக டிஜிட்டல் மார்க்கெட்டிங் செய்ய உள்ளேன். எனக்கு உறுதுணையாக இருக்கும் ஆதரவாளர்களின் பக்கபலம் என்றும் வேண்டும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு