Published:Updated:

`ஒரு போலி என்கவுன்டர்; சர்ச்சையான மரணம்!’ -ராகுல் காந்தி நினைவுகூரும் நீதியரசர் லோயா யார்?

ராகுல் காந்தி, அமித் ஷா
ராகுல் காந்தி, அமித் ஷா

சிபிஐ சிறப்பு நீதிபதியான லோயா விசாரித்து வந்தது ஷோராபுதீன் ஷேக் போலி என்கவுன்டர் வழக்கு. அரசியல் சாணக்கியன் என சமீபகாலமாக அறியப்படும் அமித் ஷாவின் தூக்கத்தைக் கெடுத்த வழக்கு அது.

டெல்லி வன்முறை சம்பவம் தொடர்பாக காவல்துறை துணை ஆணையர் ராஜேஷ் ராவை நேற்று டெல்லி நீதிமன்ற நீதிபதி முரளிதர் லெஃப்ட் ரைட் வாங்கினார். வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய கபில் மிஸ்ரா, அனுராக் தாக்கூர், ப்ரவேஷ் வர்மா, அபே வர்மா போன்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இந்த அதிரடியான நடவடிக்கையின் மூலம் லைம் லைட்டுக்கு வந்தார் முரளிதர்.

மத்திய அரசோ முரளிதரை டெல்லி உயர் நீதிமன்றத்திலிருந்து பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்துக்கு பணியிடை மாற்றம் செய்து அறிவிப்பு வெளியிட்டது. முரளிதரை வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற கடந்த 12-ம் தேதியே உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியம் மத்திய அரசுக்குப் பரிந்துரைத்திருந்தாலும் திடீரென வெளியான இந்த அறிவிப்பு சந்தேகத்தை ஏற்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.

நீதிபதி முரளிதர்
நீதிபதி முரளிதர்

இது பா.ஜ.க-வின் வழக்கமான ஸ்டன்ட் என்றே எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில் நீதிபதி முரளிதர் மாற்றம் குறித்து ராகுல் காந்தி தட்டிவிட்ட ட்வீட் பேசுபொருளாகியுள்ளது.

`துணிச்சலான நீதிபதி லோயாவை நினைவுகூர்கிறேன். அவர் இடமாற்றம் செய்யப்படவில்லை’ என்பதே அந்த ட்வீட். ராகுல் காந்தி குறிப்பிட்ட நீதிபதி லோயா 2014-ம் ஆண்டு மாரடைப்பால் காலமானார். சிபிஐ சிறப்பு நீதிபதியாக லோயா இருந்தபோது விசாரித்து வந்தது சொராபுதீன் ஷேக் போலி என்கவுன்டர் வழக்கு.

அரசியல் சாணக்கியன் என சமீபகாலமாக அறியப்படும் அமித் ஷாவின் தூக்கத்தைக் கெடுத்த வழக்கு அது. அமித் ஷா - மோடி அதிரடி கூட்டணியில் பா.ஜ.க பல மாநிலங்களில் வெற்றிக்கனியைப் பறித்து வருகிறது. சமீபத்தில் சில சறுக்கல்கள் இருந்தாலும் பெரிய பின்னடைவு ஏற்படவில்லை. இந்த அரசியல் சாணக்கியன் தன் சொந்த மாநிலமான குஜராத்துக்குள் காலடி வைக்க முடியாமல் தலைமறைவாக இருந்த காலம் உண்டு. அப்போது அவர் குஜராத்தின் உள்துறை அமைச்சர் என அதிகாரமிக்க பொறுப்பில் இருந்தார். மோடிதான் அப்போதைய முதலமைச்சர்.

மோடி தேசிய அரசியலுக்குள் நுழைவதற்கான காய்கள் நகர்த்தப்பட்டுக்கொண்டிருந்த சமயம். குஜராத் முதலமைச்சர் அரியணையை அமித் ஷா எதிர்நோக்கி காத்திருந்தார். சொராபுதீன் ஷேக் போலி என்கவுன்டர் விவகாரம் அமித் ஷாவின் முதலமைச்சர் கனவை நிர்மூலமாக்கியது. லோயாவுக்கு முன்பாக இந்த வழக்கை விசாரித்து வந்தது ஜே.டி.உத்பத். அவர் அமித் ஷாவுக்கு நெருக்கடி கொடுத்ததால் மாற்றப்பட்டார். இதையடுத்துதான் இந்த வழக்கில் லோயா வந்தார். லோயா நேர்மைக்குப் பெயர்போனவர். இவரும் அமித் ஷாவுக்கு நெருக்கடி கொடுத்தார்.

ஷோராபுதீன் ஷேக் அவரின் மனைவி
ஷோராபுதீன் ஷேக் அவரின் மனைவி

போலி என்கவுன்டர்

2005-ம் ஆண்டு குஜராத்தைச் சேர்ந்த சொராபுதீன் ஷேக் மற்றும் அவரின் மனைவி கவுசர் பீ ஆகியோர் குஜராத் மற்றும் ராஜஸ்தான் போலீஸாரால் கைது செய்யப்பட்டு என்கவுன்டர் செய்யப்பட்டனர். இதற்கு போலீஸ் தரப்பு அளித்த விளக்கம் சொராபுதீனுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாகவும் மோடியைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியதாகக் கூறப்பட்டது.

அவரின் மனைவி மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. ஆனால், அவரும் கொல்லப்பட்டார். இந்தத் தகவலை போலீஸார் அப்போது வெளியிடவில்லை. கவுசர் பீ கண்டுபிடித்து தருமாறு சொராபுதீன் குடும்பத்தினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அப்போதுதான் கவுசர் பீ இறந்துவிட்டார் அவரது உடலை எரித்துவிட்டதாக குஜராத் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

`பா.ஜ.க தலைவர்கள் மீது எஃப்.ஐ.ஆர்; வன்முறையைக் கண்டித்த நீதிபதி!' - இடமாற்ற  சர்ச்சை #DelhiRiots

2010-ம் ஆண்டு இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். இந்த வழக்கில் அப்போதைய குஜராத் உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராஜஸ்தான் உள்துறை அமைச்சர் குலாப்சந்த் கட்டாரியா மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் 38 பேருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கலானது.

சிபிஐ விசாரணையில் சொராபுதீனுக்கு குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களுடன் தொடர்பு இருப்பதாக தெரியவந்தது. சில போலீஸ் அதிகாரிகளுடன் சேர்ந்து பணப்பறிப்பில் ஈடுபட்டதும் சிபிஐ விசாரணையில் தெரியவந்தது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

இந்த வழக்கில் அமித் ஷாவுக்கு தொடர்பு இருப்பதாக சிபிஐ கூறியதையடுத்து அமித் ஷா எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்பதால் குஜராத்தே பதற்றமடைந்தது. அமித் ஷா சொந்த மாநிலத்தைவிட்டு வெளியேறி தலைமறைவானார்.

பின்னர், அவர் 2010 ஜூலையில் கைது செய்யப்பட்டார். அமித் ஷா ஜாமீன் கேட்டு விண்ணப்பித்தார். குஜராத் சிறப்பு நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவை நிராகரித்தது. 2010 அக்டோபர் மாதம் குஜராத் உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. அதன்பின்னர் அமித் ஷா சைலன்டாக சில மூவ்களை செய்தார். சாட்சிகள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

இந்த வழக்கில் நியாயமான விசாரணை வேண்டும் என சி.பி.ஐ தரப்பில் கோரப்பட்டதையடுத்து வழக்கு குஜராத்தில் இருந்து மும்பைக்கு மாற்றப்பட்டது. 2014-ல் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு மத்தியில் ஆட்சி அமைத்தது. இதன்பின்னர் இந்த வழக்கு மெல்ல பலவீனமடையத் தொடங்கியது. விசாரணை நீதிபதியான ஜே.டி.உத்பத் அமித்ஷா நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தால் வருத்தம் தெரிவித்தார்.

அடுத்தமுறை அமித் ஷா கட்டாயம் ஆஜராக வேண்டும் என்றார் ஜே.டி.உத்பத். அமித் ஷா ஆஜராகும் முன்பாகவே அந்த நீதிமன்றத்தில் இருந்து ஜே.டி.உத்பத் மாற்றப்பட்டார். அவருக்குப் பதிலாக லோயா நியமிக்கப்பட்டார்.

அமித் ஷா
அமித் ஷா

அடுத்தடுத்த விசாரணையின்போது அமித் ஷா ஆஜராகாமல் தவிர்த்தார். இதனால் அதிருப்தியடைந்த நீதிபதி லோயா 2014 டிசம்பர் 15-ம் தேதி அமித் ஷா நேரில் ஆஜராக வேண்டும் என அவரது வழக்கறிஞரிடம் தெரிவித்தார்.

இந்நிலையில்தான் நீதிபதி ஒருவரின் மகளின் திருமணத்துக்குச் செல்லும் வழியில் 2014, டிசம்பர் 1-ம் தேதி லோயா மாரடைப்பால் உயிரிழந்தார் என போலீஸ் தரப்பு கூறுகிறது.

இந்த மரணம் சந்தேகத்துக்குரிய வகையில் இருப்பதாக அவரின் குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். இந்த வழக்கிலிருந்து விலகிக்கொள்ளுமாறு அழுத்தம் தரப்படுவதாகச் சில தினங்களுக்கு முன்பு தன் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்காமல் உடற்கூராய்வு செய்துள்ளனர். அவரது செல்போனில் இருந்த தகவல்கள் அளிக்கப்பட்டு குடும்பத்தினரிடம் கொடுக்கப்பட்டது.

நீதிபதி லோயா
நீதிபதி லோயா

இதுவே அவரது மரணத்தில் சந்தேகத்தை ஏற்படுத்தியது. லோயா மரணமடைந்த சில தினங்களில் இந்த வழக்கில் மூன்றாவது நீதிபதியாக எம்.பி.கோசவி நியமிக்கப்பட்டார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அமித் ஷா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் 2014 டிசம்பர் மாதம் விடுவிக்கப்பட்டனர். லோயாவின் மரணத்துக்கு பிறகு, இந்த வழக்கே தடம் மாறிப்போனது. இதைத்தான் இப்போது ராகுல் மறைமுகமாகக் கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு