Published:Updated:

``மலர்போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே..." - ஶ்ரீ அன்னை நினைவுதின சிறப்புப் பகிர்வு!

ஸ்ரீஅன்னையைத் தியானிக்கத் தொடங்கிய பக்தர்கள் தங்களின் துயரிலிருந்து விடுபடுவதை உணர்ந்தனர். பலருக்கும் வாழ்வில் இன்றும் அற்புதங்கள் நிகழ்கின்றன என்று அவரின் பக்தர்கள் சொல்கிறார்கள்.

ஸ்ரீஅன்னை
ஸ்ரீஅன்னை

இந்தியா ஒரு ஞானபூமி. இங்கு ஞானிகள் உருவாவதுபோல உலகெங்கிலும் உள்ள ஞானிகளையும் இந்த ஞானபூமி காந்தம்போலக் கவர்ந்திழுக்கும். இந்தியாவின் ஞானப் புதையல்களான வேதங்கள், இதிகாசங்கள், கீதை போன்றவை தொடர்ந்து மேலை நாட்டவரின் ஞானத் தேடலுக்கு உதவுவனவாகவும் அவர்களை இந்தியாவை நோக்கி இழுப்பவையாகவும் இருந்தன. அப்படி இந்தத் தேசத்தின் ஆன்மிக ஞானத்தால் கவர்ந்திழுக்கப்பட்டவர் ஶ்ரீ அன்னை.

ஸ்ரீஅன்னை
ஸ்ரீஅன்னை

1878-ம் ஆண்டு பாரிஸில் பிறந்தவர் மிரா அல்பாசா. இவரின் தந்தை துருக்கி நாட்டைச் சேர்ந்தவர். தாய் எகிப்து நாட்டவர். மிரா அல்பாசா சிறுவயது முதலே ஆன்மிகத் தேடல் உடையவராக இருந்தார். ஆன்மிக நூல்களை வாசித்து தன் அறிவையும் ஞானத்தையும் பெருக்கிக்கொண்ட மிரா, முதன்முதலாகப் பகவத் கீதையின் பிரெஞ்சு மொழிபெயர்ப்பை வாசிக்கத் தொடங்கினார். அந்த நூல் அவருக்குள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. தான் வாழ்வில் தேடிக்கொண்டிருந்த ஆன்மாவின் தேடலுக்கான பதில் பாரத தேசத்தில் உள்ளது என்று எண்ணத்தொடங்கினார். எனவே, இந்தியா நோக்கிய பயணத்துக்கான நாளை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.

அன்னை பாரிஸில் வாழ்ந்த காலத்தில் அவர் கனவில் தாடி வைத்த யோகி ஒருவர் தோன்றுவார். மிரா கண் விழித்ததும் அந்த ஞானியின் முகத்தை வரைந்து வைத்தார். அவர் பாரத தேசம் வரும் நாளும் வந்தது. பாரத தேசத்தின் ஆன்மிகக் கல்வியை மிக விரைவிலேயே அன்னை கற்றுத் தேர்ந்தார். குறிப்பாக, யோகக் கலைகளில் அவரின் ஆர்வமும் பயிற்சியும் அபரிமிதமாக இருந்தது. அன்னை புதுவையை அடைந்தபோது அங்கு ஒரு ஞானியைக் கண்டார். அவர்தான் கனவில் கண்ட மகான் என்பதை அறிந்துகொண்டார். அவர் பிரம்மத்தை உணர்ந்தவர் என்பதை அறிந்துகொண்ட மிரா அவரின் திருவடிகளிலேயே தங்கிவிட முடிவு செய்தார். அந்த மகான் ஶ்ரீ அரவிந்தர்.

ஸ்ரீஅரவிந்தர்
ஸ்ரீஅரவிந்தர்

மிராவின் ஆன்மிக சாதனைகளைக் கண்ட அரவிந்தர் அவரை அன்னை என்று அழைக்கத் தொடங்கினர். அதன்பின் அங்கு வரும் பக்தர்கள் அன்னை என்றே அவரை அழைக்கத் தொடங்கினர். அன்னையின் தரிசனம் மாத்திரமே தங்களின் குறைகளைப் போக்கும் என்று நம்பினர். அன்னையின் அருளும் அதை நிகழ்த்தியது. அன்னை, தன் பக்தர்களுக்குச் சொல்லிய ரகசியம் நம்பிக்கை. நம்பிக்கையோடு செய்யும் எந்தப் பிரார்த்தனையும் வீணாகாது என்பதுதான். தினமும் பக்தர்கள் வந்து அன்னைக்கு மலர்களைச் சமர்ப்பித்து ஆசி பெற்றுச் செல்லத் தொடங்கினர்.

அன்னை மலர்களின் மீது அபார பிரியம் கொண்டவர். மலர்கள் இயற்கை அன்னையின் எழில் மிகு வடிவங்கள் என்பார். மனிதமனமும் மலர்போல தூய்மையாய் மலர வேண்டியது என்பார். மலர்கள் கொண்டு வழிபடுவதன் மூலம் மனதில் இறைவனின் கருணையைப் பெறலாம் என்று உபதேசித்தார். மலர்கள், தூய்மையானவை என்றும், அதன் அழகு மனிதர்களுக்குப் புத்துணர்ச்சி அளிப்பவை என்று அவற்றைப் புகழ்வார். தன் ஆசிரமத்தில் அழகான தோட்டம் ஒன்றை உருவாக்கி அதில் பல மலர்ச் செடிகளை வளர்த்து வந்தார்.

ஸ்ரீஅன்னை
ஸ்ரீஅன்னை

எந்த மலர் கொண்டு வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும் என்று ஆய்வு செய்து தம் பக்தர்களுக்கு அவர் தெரிவிப்பார். குறிப்பாக, ரோஜா மலர்கொண்டு துதிக்க குறைகள் விலகும் என்றும் மல்லிகை மலர்கள் கொண்டு துதிக்க சோதனைகள் நீங்கும் என்றும், ஒவ்வொரு மலருக்கும் ஒவ்வொரு பலனை அன்னை குறித்துச் சொல்லியிருக்கிறார். அதனால்தான் அன்னையின் பக்தர்கள் இன்றும் அன்னைக்கு மலர் அலங்காரமே உயர்ந்த பூஜையாகக் கொண்டு செய்கிறார்கள்.

"மனித வாழ்வின் எத்தகைய சிக்கலையும் தீர்க்க வல்லது பிரார்த்தனைகளே. எல்லா பிரார்த்தனைகளும் பலிக்குமென்றாலும், இறைவன் நோக்கத்துக்கெதிரான எந்த பிரார்த்தனையும் எப்போதுமே பலிக்காது. கவனமான பார்வையை நமது லட்சியத்தின் மீது வைக்க வேண்டும். அந்தப் பார்வைதான் லட்சியத்தைத் தெளிவோடு அடைவதற்குத் துணை செய்யும். இதை இச்சா சக்தி பயிற்சியின் வழியாக எளிதாக்கலாம். ஞானம் பெறலாம்" என்பது ஸ்ரீஅன்னையின் பரம தீர்க்கமான உபதேசம்.

ஸ்ரீஅன்னை
ஸ்ரீஅன்னை

ஸ்ரீஅரவிந்தரின் மறைவுக்குப் பிறகு அந்த ஆசிரமத்தில் ஒரு பள்ளிக்கூடம் நிறுவினார். சாதி, சமயம், மொழி, இனம் என எந்த வேறுபாடுகளும் இன்றி மக்கள் வாழ்வதற்கான அடிப்படை கருத்துகளோடு செயல்படும் வகையில் 'ஆரோவில்' எனும் தன்னாட்சி நகரம் ஒன்றை உருவாக்கினார். இன்றும் அந்தக் கிராமம் குளோபல் வில்லேஜ் என்று போற்றப்படுகிறது. உலகெங்கிலும் இருந்து பக்தர்கள் வந்து தங்கத் தொடங்கினர். அன்னையின் புகழ் பரவத் தொடங்கியது.

அன்னை, 1973-ம் ஆண்டு நவம்பர் 17 அன்று உலக வாழ்வை நீத்தார். அன்னை, ஸ்தூல உடல் மறைந்துவிட்ட பின்னும் சூட்சும உடலால் அவரின் அடியவர்களுக்கு அருள ஆரம்பித்தார். அன்னையைத் தியானிக்கத் தொடங்கிய பக்தர்கள் தங்களின் துயரிலிருந்து விடுபடுவதை உணர்ந்தனர். அன்னையின் படத்துக்கும் சமாதிக்கும் பக்தர்கள் மலர் அலங்காரங்கள் செய்து வழிபடத் தொடங்கினர். பலருக்கும் வாழ்வில் இன்றும் அற்புதங்கள் நிகழ்கின்றன என்று அவரின் பக்தர்கள் சொல்கிறார்கள்.

ஸ்ரீஅன்னை
ஸ்ரீஅன்னை

நாளை அன்னையின் நினைவுநாள். அந்த நாளில் மலர்கொண்டு அன்னையைத் தொழுது மலர்போல மலரும் மனம் வேண்டுவோம்.