Published:Updated:

`2019-ல் முடித்து வைக்கப்பட்ட வழக்கு; மறு விசாரணை!’ - அர்னாப்-ஐ அழைத்துச் சென்ற மும்பை போலீஸ்

அர்னாப்
அர்னாப்

அன்வய் நாயக் மகள், அர்னாப் தனது தந்தைக்கு தர வேண்டிய பணம் தொடர்பாக விசாரிக்காமலேயே வழக்கு முடித்து வைக்கப்பட்டதாக உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்-கை சந்தித்து புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த வழக்கின் மறு விசாரணை தொடங்கப்பட்டது.

ரிபப்ளிக் டி.வி தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை மும்பை போலீஸார் இன்று விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். தன்னை வலுக்கட்டாயமாக விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக அவர் போலீஸார் மீது புகார் தெரிவித்திருக்கிறார்.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் ரிபப்ளிக் டி.வி., மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கட்சிக்கு எதிராகப் பல செய்திகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்பட்டது. இந்தநிலையில், டிஆர்பி ரேட்டிங் முறைகேடு தொடர்பான விவகாரத்தில் மும்பை காவல்துறை வழக்கு பதிந்தது அனைவரும் அறிந்ததே. என்றாலும், டிஆர்பி முறைகேடு விவகாரத்தில் அர்னாப், தற்போது போலீஸாரால் அழைத்துச் செல்லப்படவில்லை.

`அனுமதியில்லாமல் விசாரிக்க முடியாது!’- டி.ஆர்.பி வழக்கில் சி.பி.ஐ-க்குக் கடிவாளம்போட்ட மகாராஷ்டிரா

என்ன வழக்கு?

2018-ம் ஆண்டு அலிபாக் பகுதியைச் சேர்ந்த கட்டட உள்வடிவமைப்பாளர் அன்வய் நாயக், அவருடைய தாயாருடன் தற்கொலை செய்துகொண்டார். அவர் எழுதிவைத்திருந்த கடிதத்தில், அர்னாப் உள்ளிட்ட மூவர் தனக்குத் தர வேண்டிய 5.4 கோடி ரூபாயைத் தரவில்லை எனவும், அதனால் தனக்குப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது எனவும், அதுவே தனது தற்கொலைக்கு காரணம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

அர்னாப் கோஸ்வாமி
அர்னாப் கோஸ்வாமி

இந்தநிலையில் 2018-ம் ஆண்டு தற்கொலைக்குத் தூண்டியதாக அர்னாப் மீது வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கு 2019-ல் முடித்தும் வைக்கப்பட்டது. இந்தநிலையில் மகாராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், `கடந்த மே மாதம் இந்த வழக்கு மறு விசாரணை செய்யப்படும்’ என்றார். அன்வய் நாயக் மகள், அர்னாப் தன் தந்தைக்குத் தர வேண்டிய பணம் தொடர்பாக விசாரிக்காமலேயே வழக்கு முடித்துவைக்கப்பட்டதாக உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்-கைச் சந்தித்து புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த வழக்கின் மறு விசாரணை தொடங்கப்பட்டது.

ரிபப்ளிக் டிவி: வீட்டுக்கு மாதம் ரூ.400; `இந்தியா டுடே' பகை - டி.ஆர்.பி விவகாரத்தில் என்ன நடக்கிறது?

தற்போது இந்த வழக்கின் விசாரணைக்காக அர்னாப் போலீஸாரால் அழைத்து செல்லப்பட்டிருக்கிறார். இந்தச் சம்பவத்தின்போது போலீஸார் தன்னைத் தாக்கியதாகவும் அர்னாப் தெரிவித்திருக்கிறார். இந்தநிலையில் அர்னாப் கைதுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு கருத்துகள் பதியப்பட்டுவருகின்றன. மகாராஷ்டிரா அரசு பழிவாங்கும் நடவடிக்கையாக இதைச் செய்துவருவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

சஞ்சய் ராவத்
சஞ்சய் ராவத்

இந்தநிலையில் சிவசேனா கட்சியின் எம்.பி சஞ்சய் ராவத், ``பழிவாங்கலுக்காக எந்த நடவடிக்கையும் மகாராஷ்டிரா அரசு எடுக்கவில்லை. காவல்துறைக்கு ஒருவருக்கு எதிரான ஆதாரங்கள் கிடைத்தால் நடவடிக்கை எடுக்கத்தான் செய்யும்” என்றார். முன்னதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், மகராஷ்டிரா அரசின் இந்த நடவடிக்கை பத்திரிகைச் சுதந்திரத்தை தாக்குவதாகக் குறிப்பிட்டார்.

அடுத்த கட்டுரைக்கு