Published:Updated:

`தேசம் குறித்த அவர்களின் நிலைப்பாடு?!’- ராஜினாமா செய்த ஐஏஎஸ் கண்ணன் கோபிநாதனின் ஆர்.எஸ்.எஸ் நாள்கள்

கண்ணன் கோபிநாதன் ஐ.ஏ.எஸ்
கண்ணன் கோபிநாதன் ஐ.ஏ.எஸ்

சீருடையில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி கேந்திரமான ஷாகா சென்றேன். ஒரு முறை ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தில் கலந்துகொள்வதற்காக ராஞ்சி வரை சென்றேன்.

கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் கண்ணன் கோபிநாதன். 33 வயதான இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரியான இவர் தாத்ரா நகர் - ஹவேலி கலெக்டராக இருந்தார். கேரளம் 2018-ம் ஆண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது மக்களோடு மக்களாக இறங்கி மீட்பு பணிகளில் ஈடுபட்டார். அதிகாரிகள் சிலர் அடையாளம் கண்ட பிறகுதான் அவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி என தெரியவந்தது. இந்த நிலையில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது பி.ஜே.பி-க்கு ஆதரவான வேட்பாளர் தேர்தல் விதிமுறையை மீறியதாக நோட்டீஸ் வழங்கினார் கண்ணன் கோபிநாதன். இதன் காரணமாக அவர் தாத்ரா நகர் - ஹவேலி கலெக்டர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு மின்சார வாரிய செயலர் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுச் செயலர் பொறுப்புக்கு மாற்றப்பட்டதாக கூறப்பட்டது.

பதவியை ராஜினாமா செய்த கண்ணன் கோபிநாதன்
பதவியை ராஜினாமா செய்த கண்ணன் கோபிநாதன்

இந்த நிலையில், காஷ்மீர் மாநிலத்தில் 370, 35 ஏ சட்டப் பிரிவுகளை நீக்கி மத்திய அரசு சட்டம் இயற்றியதைத் தொடர்ந்து மக்களுக்கு கருத்து சுதந்திரம் மறுக்கப்படுவதாக கூறி தனது பதவியை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ராஜினாமா செய்து அதிரடித்தார் கண்ணன் கோபிநாதன். ``சட்டப்பிரிவை ரத்து செய்ய அரசுக்கு உரிமை இருக்கிறது. அதுபோல அரசின் நிலைபாட்டுக்கு எதிராக கருத்து சொல்லவும், போராடவும் மக்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால், மக்களின் உரிமையை இந்த அரசு மறுக்கிறது. எனவேதான் எனது பணியை ராஜினாமா செய்துவிட்டேன்" என அப்போது அவர் விளக்கம் அளித்தார்.

பதவிக்கு வந்து 7 ஆண்டுகளே ஆன நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்த இளம் ஐ.ஏ.எஸ் கண்ணன் கோபிநாதனின் செயல் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இன்னும் 27 வருடம் சர்வீஸ் இருந்தும் அவர் ராஜினாமா கொள்கையில் உறுதியாக இருந்தார். அதே சமயம், `அரசு கொடுத்த பணிகளை அவர் உரிய காலத்தில் செய்து முடிக்கவில்லை' என அரசு நோட்டீஸ் அனுப்பியது. அதற்குப் பதில் அளிக்காமல் தப்பிப்பதற்கே ராஜினாமா நாடகம் ஆடுவதாக பா.ஜ.க தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ். பயிற்சி
ஆர்.எஸ்.எஸ். பயிற்சி
மாதிரி படம்

சிறிதுகாலம் அமைதியாக இருந்த கண்ணன் கோபிநாதன் இப்போது மீண்டும் கேரள மாநிலம் வந்துள்ளார். இந்த நிலையில், மலையாள தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறுகையில், ``நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருந்தேன். சீருடையில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி கேந்திரமான ஷாகா சென்றேன். ஒரு முறை ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தில் கலந்துகொள்வதற்காக ராஞ்சி வரை சென்றேன். தேசம் குறித்த அவர்களின் நிலைப்பாடு வேறு என்பதை உணர்ந்துகொண்டதால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிலிருந்து விலகிவிட்டேன். நான் ஏமாற்றங்களுடன் சர்வீஸில் இருந்து ராஜினாமா செய்தேன். இப்போது மிகுந்த எதிர்பார்ப்புடன் நான் இருக்கிறேன்" என்றார்.

பின் செல்ல