Election bannerElection banner
Published:Updated:

ஊரடங்கிலும் கட்டுக்குள் வராத கொரோனா! - கடும் கட்டுப்பாடுகளை அறிவித்த மகாராஷ்டிரா அரசு

வாகன சோதனை
வாகன சோதனை

மகாராஷ்டிராவில் கொரோனாவைக் கட்டுப்படுத்த மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. புறநகர் ரயில்களில் பயணம் செய்ய மீண்டும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் அதிகப்படியான கொரோனா பரவல் இருந்துவருகிறது. இதைக் கட்டுப்படுத்த மாநில அரசு ஏற்கெனவே பொதுமுடக்கம் போன்ற கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்திருக்கிறது. ஆனாலும் கொரோனா கட்டுக்குள் வரவில்லை. இதையடுத்து முழுமையான பொதுமுடக்கத்தைக் கொண்டுவர வேண்டும் என்று அனைத்து அமைச்சர்களும் முதல்வர் உத்தவ் தாக்கரேயிடம் கேட்டுக்கொண்டனர். உத்தவ் தாக்கரேயும் முழுமையான பொதுமுடக்கத்தை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

வெறிச்சோடிய ரயில் நிலையம்
வெறிச்சோடிய ரயில் நிலையம்

ஆனால், `பொது முடக்கம் கொரோனாவைக் கட்டுப்படுத்த இறுதித் தீர்வாக இருக்க வேண்டும்’ என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டதையடுத்து உத்தவ் தாக்கரே தனது முடிவை மாற்றிக்கொண்டிருக்கிறார். அதேசமயம் கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்கியிருக்கிறார். மாவட்டங்களிடையேயான வாகனப் போக்குவரத்துக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவசரத் தேவைகள் இருந்தால் மட்டுமே மாவட்டம்விட்டு மாவட்டத்துக்கு கார்களில் செல்ல முடியும்.

மருத்துவ அவசரம், இறுதிச்சடங்கு போன்ற தவிர்க்க முடியாத நிகழ்வுகள், உறவினர்களின் உடல்நலமின்மை போன்ற காரணங்களைக் காட்டி மட்டுமே மாவட்டம்விட்டு மாவட்டத்துக்கு கார்களில் செல்ல முடியும். காரில் 50 சதவிகிதம் பேர் மட்டுமே பயணம் செய்ய வேண்டும். இதை மீறுபவர்களுக்கு 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். தனியார் பஸ்களும் 50 சதவிகித பயணிகளுடன் மட்டுமே இயக்கப்பட வேண்டும். ஒரு நகரத்தில் இரண்டு இடங்களில் மட்டுமே தனியார் பஸ்கள் நிற்க வேண்டும். நிற்கும் இடம் குறித்து உள்ளூர் நிர்வாகத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும். தனியார் பஸ்ஸிலிருந்து இறங்குபவர்கள் கையில் முத்திரை குத்தப்பட்டு 15 நாள்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். பஸ் ஆபரேட்டர்கள்தான் பயணிகளுக்குக் கையில் முத்திரை குத்த வேண்டும். உள்ளூர் நிர்வாகம் பஸ்களில் வரும் பயணிகளுக்குக் கையில் முத்திரை குத்துவது குறித்து இறுதி முடிவு எடுத்துக்கொள்ளலாம்.

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே

மெட்ரோ ரயில், மோனோ ரயில், புறநகர் ரயில்களில் மத்திய மாநில அரசு ஊழியர்கள், மருத்துவ ஊழியர்கள், மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர். அப்படிப்பட்டவர்களுக்கு மட்டுமே டிக்கெட் வழங்கப்படும். அரசு மற்றும் மாநகராட்சி பஸ்களில் 50 சதவிகிதப் பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். மாவட்டங்களுக்கு இடையே இயக்கப்படும் ரயில்களில் பயணம் செய்பவர்களும் 14 நாள்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். அத்தியாவசியத் தேவைக்கான அரசு அலுவலகங்கள் தவிர்த்து பிற அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள் 15 சதவிகிதம் அல்லது ஐந்து பேர் இதில் எது அதிகமோ அதைக்கொண்டு இயங்கலாம். திருமண நிகழ்ச்சிகளில் 25 பேர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும். அதுவும் இரண்டு மணி நேரத்துக்குள் முடித்துக்கொள்ள வேண்டும். அதை மீறினால் 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இந்தக் கட்டுப்பாடுகள் வரும் மே 1-ம் தேதி காலை வரை நடைமுறையில் இருக்கும் என்று மாநில அரசு வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு