Published:Updated:

லக்கிம்பூர், நாகாலாந்து சம்பவங்கள் முதல் குன்னுர் ஹெலிகாப்டர் விபத்து வரை..! - 2021 India Rewind

2021 ரீவைண்ட்
News
2021 ரீவைண்ட்

2021-ம் ஆண்டில் இந்தியாவில் நடந்த கவனிக்கத்தக்க சம்பவங்களின் தொகுப்பு..!

வன்முறையில் முடிந்த விவசாயிகள் போராட்டம்!

மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரி, தலைநகர் டெல்லியின் எல்லைப் பகுதிகளான சிங்கு, டிக்ரி உள்ளிட்ட இடங்களில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணியை நடத்தப்போவதாக அறிவித்தனர். அன்று நடைபெற்ற பேரணியில், ஒரு பகுதியினர் டெல்லி செங்கோட்டைக்குள் நுழைந்ததுடன், செங்கோட்டை மீது ஏறி கொடியேற்றினர். அனுமதி அளிக்கப்பட்ட பகுதியைத் தாண்டி டிராக்டர்களில் விவசாயிகள் பலர் நகருக்குள் நுழைந்ததால், விவசாயிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. காவல்துறையினர் தடியடி நடத்தி, கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

அமைதிவழியில், அறவழியில் டிராக்டர் பேரணி நடக்கும் என்று விவசாய சங்கத் தலைவர்கள் வாக்குறுதி அளித்ததற்கு மாறாக, போராட்டத்தில் பங்கேற்றவர்களில் ஒரு பகுதியினர் அத்துமீறி நடந்துகொண்டனர். நங்கோலி சாலையில் போலீஸார் வாகனங்களை போராட்டத்தில் ஒரு பகுதியினர் சிதைத்தனர். போராட்டத்தை ஒடுக்க வந்த Riot Control வாகனமும் அதில் அடங்கும். விவசாயிகளின் போராட்டம் தொடங்கிய நாளிலிருந்தே களத்திலிருந்த குர்பிரீத் சிங் வாசி சமூக வலைதளத்தில், போராட்டத்தை திசை திருப்பி வன்முறையை தூண்டியது மத்திய அரசுதான் என்றும், அதற்கு தேசிய ஊடகங்கள் துணை போனதாகவும், இவற்றை கண்கூடாக காணமுடிந்ததாகவும் பகிர்ந்திருந்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உத்தரகாண்டை உலுக்கிய வெள்ளம்!

உத்தரகாண்ட் மாநிலம், ரிஷி கங்கா நகரத்தின் அருகில் ஓடும் தவுளிகங்கா நதி, அலக்நந்தா ஆற்றின் கிளை நதி. ஆற்றை ஒட்டிய மலைப் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவின் காரணமாக, பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், தவுளிகங்கா நதியில் நீர்மின் நிலையக் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இந்த வெள்ளத்தால் 203 பேர் வரை மாயமாகியிருப்பதாகக் கூறப்பட்டது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தேசியப் பேரிடர் மீட்புப் படை உள்ளிட்ட மீட்புப் படைகள் அங்கு முகாமிட்டு மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியும், வெள்ளத்தில் சிக்கிக் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிதியுதவியும் வழங்கப்படுமென பிரதமர் மோடி அறிவித்தார்.

வெள்ளம்
வெள்ளம்

'பனிப்பாறைகள் திடீரென எப்படி உருகின' என்பதற்கு 'சீனாவை உளவு பார்ப்பதற்காக இமயமலைச் சிகரத்தில் அமெரிக்கா கொண்டுவந்து வைத்த அணுசக்திக் கருவியே இந்தப் பேரழிவுக்குக் காரணம்' என்று குற்றம்சாட்டினார்கள் அந்தப் பகுதி மக்கள். சீனாவை உளவுபார்க்க அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ உடன் இந்திய உளவுத்துறையும் சேர்ந்து நந்தாதேவி சிகரத்தில் உளவுக்கருவிகளையும், அவை இயங்க தேவையான அணுசக்தி பொருள்கள் முதலியவற்றை பொறுத்தப்போய் , முடியாமல் பின்னர் அவற்றை அங்கேயே விட்டுவிட்டு வந்தனர். அந்த அணுமின் பொருள்களே பனிப்பாறை உருகக் காரணம் என அந்தப் பகுதி மக்கள் கருதுகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரூ.100-ஐ தாண்டிய பெட்ரோல் விலை!

இந்திய வரலாற்றில் முதல்முறையாக ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 100 ரூபாயைத் தாண்டி பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதிகபட்சமாக மும்பையில் 112 ரூபாயைத் தொட்டது. மீம்ஸ்களிலும், விளையாட்டாக வசனங்களிலும் கேட்டு வந்தது, நடைமுறையில் வந்தபின் சாமான்ய மக்களால் ஜீரணிக்க முடியவில்லை. கண்ணீரும் போராட்டங்களுமே மக்களின் நிலையாக இருந்தது. தமிழகத்தில் மோட்டார் சைக்கிள்களுக்கு பாடைக்கட்டி ஒப்பாரி வைத்து மாதர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். கொல்கத்தாவில் அரைமணிநேரம் பெட்ரோல் டீசல் விற்பனையை நிறுத்தி, மின்விளக்கை ஒளிரவிட்டு போராட்டம் நடத்தினர்.

பெட்ரோல் விலை  உயர்வு
பெட்ரோல் விலை உயர்வு

பெட்ரோல் மட்டுமன்றி டீசலும் 100 ரூபாயைத் தாண்டியது. அதிக வரி விதிகப்படுவதே இதற்கு காரணம் என்றும், வரியை குறைப்பதே இதற்கு தீர்வு என்றும் பொருளாதார நிபுணர்கள் கூறுகிறன்றனர்.

மும்பையில் கொரோனா நோயாளிகளுக்கு நேர்ந்த கொடூரம்!

மும்பையில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது . மும்பை ட்ரீம்ஸ் மால் சன்ரைஸ் மருத்துவமனையில், தீ விபத்து ஏற்பட்டு பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்ட தகவல் அறிந்ததும் மும்பையின் பல்வேறு பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் பந்தூப் பகுதிக்கு விரைந்தன. சுமார் 22 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்தன.

தீ விபத்து
தீ விபத்து

இந்தத் தீ விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று எம்.எல்.ஏ ஜிதேந்திர அவாட் தெரிவித்தார். இந்த தீ விபத்துக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்ததோடு, சம்பவம் தொடர்பாக மன்னிப்பும் கோரினார். தீ விபத்து சம்பவம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டரில், மும்பை மருத்துவமனையில் உயிரிழந்தவர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்தார்.

ஆக்ஸிஜனுக்காக அலைக்கழிந்த கொடூரம்!

2021 ஏப்ரல் மாதம் , யாராலும் மறக்கமுடியாது . தமிழ்நாட்டில் கொரோனா முதல் அலையைவிட, இரண்டாவது அலை தீவிரமாகப் பரவத் தொடங்கிய நேரம் அது. தினசரி பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது. நாட்டில், கொரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமடைந்து, தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது. பல்வேறு மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு காப்பாற்ற முடியாமல் ஏராளமானோர் உயிரிழந்தார்கள். முதல் அலையை விட இரண்டாம் அலை அதிதீவிரமாக பரவி மக்களை அச்சுறுத்தியது. குறிப்பாக, தலைநகர் டெல்லியில் பல மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு இடமில்லாமலும், அனுமதிக்கப்பட்ட நோயாளிகளைக் காப்பாற்ற போதிய அளவில் ஆக்ஸிஜன் இல்லாமலும் பலபேர் உயிரிழந்தார்கள் .

ஆக்ஸிஜன் பற்றாக்குறை
ஆக்ஸிஜன் பற்றாக்குறை

டெல்லியில், ஆக்ஸிஜன் முக்கிய பிரச்னையாக இருந்தது. அனைத்து மருத்துவமனைகளிலிருந்தும் ஆக்ஸிஜன் தேவை என அறிக்கை வந்தது. தினமும் 976 டன் ஆக்ஸிஜன் தேவைப்படும் நிலையில், 490 டன் ஆக்ஸிஜன் மட்டுமே ஒதுக்கப்பட்டது . டெல்லியுடன் சேர்ந்து பல மாநிலங்கள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை சந்தித்தன. இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலைக்கு ஒரு முக்கியக் காரணம் டெல்டா திரிபு. சார்ஸ், இபோலா, சீசன் ஃபுளு, ஆகியவற்றுக்கு காரணமான வைரஸை காட்டிலும் இது அதிகம் பரவக் கூடியது என்றும் அம்மை நோயின் அளவுக்கு இது பரவக்கூடியது என்றும் செய்திகள் வெளியாகின.

பாலியல் வன்கொடுமை!

நாட்டின் தலைநகரான டெல்லியில் உள்ள காண்ட் மயானத்தில், 9 வயது பட்டியலினத்தைச் சேர்ந்த சிறுமி மயானத்தில் உள்ள பூசாரியால் சிறார் வதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதுடன், அவரின் தாய் கண் முன்னரே சிதையில் வைத்து எரித்துக் கொலைசெய்யப்பட்டார். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை
சித்தரிப்புப் படம்

இது தொடர்பாகப் பூசாரி மற்றும் 3 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

லக்கிம்பூர் விவகாரம்!

மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா அளித்திருந்த ஒரு பேட்டியில், ``டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தை அவர்களாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். அப்படி முடிக்காவிட்டால் நான் இரண்டு நிமிடங்களில் முடிவுக்குக் கொண்டு வருவேன்” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இதனால் கொந்தளித்த விவசாயிகள், உத்தரப்பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத், மத்திய இணையமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா ஆகியோர் லக்கிம்பூர் பகுதிக்கு, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வரவிருப்பதாக விவசாயிகளுக்குத் தகவல் கிடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

லக்கிம்பூர்
லக்கிம்பூர்

அப்போது, அந்த வழியாக வந்த இரண்டு கார்கள், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மீது மோதின. இந்த கொடூர சம்பவத்தில் நான்கு விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயமடைந்தனர். விவசாயிகளை மோதிய காரில் மத்திய இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன் இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், காருக்கு தீவைத்து எரித்தனர். அதோடு விடாமல் பா.ஜ.க பிரமுகர்களைப் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் பா.ஜ.க பிரமுகர்கள் நான்கு பேர் உயிரிழந்தனர். கலவரத்தைக் கட்டுப்படுத்த போலீஸாரால் தடியடி நடத்தப்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காயமடைந்ததுடன் மொத்தம் இந்தக் கலவரத்தில் ஒன்பது பேர் பலியாகினர்.

100 கோடி தடுப்பூசி!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி 2021 ஜனவரி 16-ம் தேதி தொடங்கப்பட்டது. தொடக்கத்தில், மருத்துவத்துறைப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் போன்ற ஒருசில பிரிவினருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுவந்தது. தடுப்பூசி மருந்துகளை மனிதர்களுக்கு 3 கட்டமாக செலுத்தி சோதனை நடத்தியதற்கு பிறகே அனுமதிப்பது வழக்கம். அதன்படி 2 மருந்துகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவை வெற்றிகரமாக செயல்பட்டன. மார்ச் 1-ந்தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அன்றைய நாளில் பிரதமர் நரேந்திரமோடி கோவேக்சின் தடுப்பூசி செலுத்திக்கொண்டார். அதன் பின்னர் ஏப்ரல் 1-ந் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், மே 1-ந் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.

கொரோனா தடுப்பூசி - பிரதமர் மோடி
கொரோனா தடுப்பூசி - பிரதமர் மோடி

கடந்த அக்டோபர் 21, 2021 தேதி அன்று மொத்தம் 100 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு ஒரு புதிய மைல்கல்லை இந்தியா எட்டியது. ``257 நாள்களில் 100 கோடி தடுப்பூசிகளை செலுத்தி இந்தியா கடினமான இலக்கை எட்டியுள்ளது. நாட்டு மக்கள் அனைவரின் கூட்டு முயற்சியால்தான் இது சாத்தியமானது. 100 கோடி டோஸ் தடுப்பூசி என்பது ஒரு புதிய சாதனையின் தொடக்கம். அனைவருக்கும் இலவச தடுப்பூசி என்ற திட்டத்தை கொண்டுவந்து இந்த சாதனையை எட்டியுள்ளோம். தற்போது இந்தியாவின் தடுப்பூசித் திட்டம் உலக அளவில் ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது. உலக அளவில் மருந்து தயாரிப்பில் இந்தியாவுக்கு சிறப்பு இடம் கிடைத்துள்ளது. இந்தியாவின் தடுப்பூசித் திட்டம் முற்றிலும் அறிவியல் அடிப்படையில் வகுக்கப்பட்டது” என்று பிரதமர் மோடி பெருமிதம் கொண்டார் .

நாட்டை உலுக்கிய நாகாலாந்து சம்பவம்!

நாகாலாந்து மாநிலம், மோன் மாவட்டம், ஓடிங் பகுதியில், செயல்பட்டு வரும் நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றும் ஊழியர்கள், பணியை முடித்துக்கொண்டு தங்கள் சொந்த ஊர்களுக்கு வேனில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, அஸ்ஸாம் ரைபிள்ஸ் பாதுகாப்புப் படையினர், வேனில் வந்தவர்களை, தீவிரவாதிகள் எனச் சந்தேகித்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில், வேனில் பயணித்த 13 அப்பாவி தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அளித்த விளக்கத்தில், ``கடந்த டிசம்பர் 4-ம் தேதி, நாகாலாந்தின் மோன் மாவட்டத்திலிருக்கும் ஒடிங் கிராமத்தில் பயங்கரவாதிகள் சிலர் ஊடுருவியிருப்பதாகப் பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. அதன்படி, பயங்கரவாதிகளை எதிர்பார்த்து ஒடிங்-டிரு சாலையில் காத்திருந்தனர் ராணுவ வீரர்கள். அதே சமயத்தில், வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த சுரங்கத் தொழிலாளர்களின் வாகனமும் வந்திருக்கிறது.

நாகாலாந்து தாக்குதல்
நாகாலாந்து தாக்குதல்

ராணுவ வீரர்கள், அந்த வாகனத்தை நிறுத்தச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அந்த வாகனம் நிற்காமல் செல்லவே, அது பயங்கரவாதிகளின் வாகனம் என்று தவறுதலாக நினைத்துத் துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கிறார்கள்." என்று கூறியிருந்தார். ஆனால், அமித் ஷா அளித்த விளக்கமும், களத்திலிருந்து வந்த தகவல்களும் முரணாக இருந்தன . ராணுவத்தினர் நடத்திய முதல் தாக்குதலில் உயிர்பிழைத்த இரண்டு பேரில் ஒருவரான ஷெய்வாங் (Sheiwang) ஆங்கில ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்திருக்கிறார். அதில், ``எங்கள் வாகனத்தை யாரும் நிறுத்தச் சொல்லி சிக்னல் தரவில்லை. அவர்கள் எங்களை நேரடியாகச் சுடத் தொடங்கிவிட்டனர். எவ்வளவு நேரம் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள் என்று சரியாகத் தெரியவில்லை. ஆனால், சிறிது நேரம் துப்பாக்கிச் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. மதியம் 3 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்தது. அப்போது இருட்டாகக்கூட இல்லை. இருந்தும், எங்களை நோக்கி அவர்கள் சுட்டுக்கொண்டேயிருந்தார்கள். நாங்கள் அனைவரும் வாகனத்துக்குக் கீழ்ப்பகுதியில் குனிந்துகொண்டோம். என் சகோதரர் உட்படச் சிலர் உயிரிழந்துவிட்டார்கள் என்பது எனக்குத் தெரிந்தது. பின்னர், எங்கள் அனைவரையும் வேறொரு வாகனத்துக்கு (டிரக்) மாற்றினார்கள்'' என்றிருக்கிறார் ஷெய்வாங். இதனால் வலுத்த எதிர்ப்பும், போராட்டங்களும் வெடித்தன.

ரோஹினி நீதிமன்றம்!

டெல்லியிலுள்ள ரோஹினி நீதிமன்றம் எப்போதும் பரபரப்பாகவே இருக்கும். அண்மையில் எதிர்பாராதவிதமாக சக்தி குறைந்த டிபன் பாக்ஸ் வெடிகுண்டு ஒன்று நீதிமன்றத்தில் வெடித்துச் சிதறியது. இதில் பாதுகாப்புக்கு வந்திருந்த கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்தார். வெடித்த குண்டைச் சோதித்தபோது வெடிகுண்டு தயாரிக்கத் தெரியாத ஒருவர் தயாரித்திருப்பது தெரியவந்தது. இது குறித்து டெல்லி போலீஸ் கமிஷனர் ராகேஷ் அளித்த பேட்டியில், ``இதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டு சம்பவம் நடந்த அன்று நீதிமன்றத்துக்குள் வந்த வாகனங்கள் குறித்து முழுமையாக ஆய்வு செய்தோம். நீதிமன்றம், அதைச் சுற்றியிருக்கும் பகுதிகள், குடியிருப்புக் கட்டடங்களில் பொருத்தப்பட்டிருந்த 100-க்கும் அதிகமான கண்காணிப்பு கேமராப் பதிவுகளை ஆய்வு செய்தோம். வெடிகுண்டை நீதிமன்ற வளாகத்துக்குள் கொண்டுவரப் பயன்படுத்திய பேக் பறிமுதல் செய்யப்பட்டது.

டெல்லி ரோஹினி கோர்ட்
டெல்லி ரோஹினி கோர்ட்

அதிலிருந்த தயாரிப்பாளரின் லோகோவை வைத்து அந்த பேக் எங்கு தயாரிக்கப்பட்டது என்பதைக் கண்டுபிடித்தோம். பேக் தயாரிக்கும் கம்பெனி மும்பையில் இருந்தது. அந்த கம்பெனி, பேக்கை 2006-ம் ஆண்டு தயாரித்திருந்தது. அந்த கம்பெனி டெல்லிக்கு பேக் சப்ளை செய்யும் கம்பெனிகளைக் கண்டுபிடித்து அதன் மூலம் அந்த பேக் யாருக்கு விற்பனை செய்யப்பட்டது என்பதைக் கண்டுபிடித்தோம்” என்று தெரிவித்தார். தொடர்ந்து, மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றும் பூஷண் கதாரியா என்பவரை விசாரணைக்கு வரவழைத்து விசாரித்தபோது அவர்தான் இந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தை நடத்தியிருந்தார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. வக்கீல் ஒருவரின்மீது இருந்த தனிப்பட்ட பகையே , அவரை வெடிகுண்டு தயாரிக்க தூண்டியதாக அவர் தெரிவித்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர். மிகவும் பலத்த பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கும் ரோஹினி நீதிமன்றத்தில், சமீபத்தில் நடந்த நிகழ்வுகள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து!

இந்திய மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்திய சம்பவமொன்று டிசம்பர் 8-ம் தேதி நிகழ்ந்தேறியது. குன்னூர் வெல்லிங்டன் ராணுவப் பயிற்சிக் கல்லூரியில் நடைபெறவிருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்காக, டிசம்பர் 8-ம் தேதி டெல்லியிலிருந்து கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்துக்கு ராணுவ விமானத்தில் வந்தார் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத். அவருடன் அவர் மனைவி மதுலிகா ராவத், பிபின் ராவத்தின் ராணுவ ஆலோசகர் பிரிகேடியர் லிட்டர், அவரின் உதவியாளர் கர்னல் ஹர்ஜிந்தர் சிங் உள்ளிட்டோரும் வந்திருந்தார்கள். மொத்தம் 14 பேருடன் கிளம்பிய அந்த ஹெலிகாப்டர் 12:15 மணிக்கு வெல்லிங்டன் ராணுவ உயரதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியான ஜிம்கானா மைதானத்தில் தரையிறங்க வேண்டும்.

ஹெலிகாப்டர் விபத்து
ஹெலிகாப்டர் விபத்து

ஆனால், தரையிறங்குவதற்கு ஏழு நிமிடங்கள் இருந்தபோது, 12:08 மணிக்கு ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி வெடித்துச் சிதறியது. ஹெலிகாப்டரில் பயணம் செய்த 14 பேரில், 13 பேர் உயிரிழந்தனர் . விபத்து நடைபெற்ற இடத்திலிருந்து அனைவருமே அருகிலிருக்கும் வெலிங்டன் ராணுவ மருத்துமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். தீவிர அவசர சிகிச்சை அளித்தபோதும், துர்திஷ்டவசமாக அவர்களில் 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டனர். குரூப் கேப்டன் வருண் சிங் மட்டும் பலத்த தீக்காயங்களுடன் உயிர்பிழைத்தார். சுமார் ஒருவாரகாலம் தீவிர சிகிச்சைப் பெற்றுவந்த அவரும், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.