`நாங்கள் ஒரு தம்பதி போல் வாழ்ந்தோம்!' சுஷாந்த் சர்ச்சைகளுக்கு ரியா சொன்ன விளக்கம்

தன்னைப் பற்றிய சர்ச்சைகளுக்கு இந்தப் பேட்டியின் மூலம் பதிலளித்திருக்கிறார் ரியா.
இரண்டரை மாதங்களுக்கு முன்னால் தற்கொலை செய்துகொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் தொடர்பான சந்தேகங்கள், சர்ச்சைகள் இந்தியா முழுக்க இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆரம்பத்தில் சுஷாந்த்தின் மரணத்துக்கு `டிப்ரெஷன்'தான் காரணம் என்று சொல்லப்பட்டது. பின்னர் அது `கொலை' என்றும், பாலிவுட்டில் நிலவும் `நெப்போட்டிஸம்'தான் காரணம் என்று நடிகை கங்கணா உள்ளிட்ட சக திரைத்துறையினரால் குற்றம் சாட்டப்பட்டது.
இதற்கிடையில், சுஷாந்த் சிங்கின் அப்பா கிருஷ்ண குமார் சிங், ``என் மகனுடைய மரணத்துக்கு அவனுடைய காதலி ரியா சக்ரபர்த்திதான் காரணம். என் மகனுடைய பணத்தை ரியா மோசடி செய்திருக்கிறார். என் மகன் அருந்திய பானங்களில் கொஞ்சம் கொஞ்சமாக போதை மருந்தைக் கலந்து கொன்றிருக்கிறார்" என்று காவல்துறையில் புகார் அளித்தார். இதேபோல, ``சுஷாந்த்துக்கு `கிளாஸ்ட்ரோபோபியா' எனப்படும் மூடிய இடங்களின் மீதான பயம் இருக்கிறது, எனவே விமானத்தில் செல்ல அவர் பயந்தார்" என்று ரியா சொன்னதை, சுஷாந்த்தின் முன்னாள் காதலியான அங்கிதா மறுத்தார். சுஷாந்த் விமானம் ஓட்டுகிற ஒரு படத்தை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். சுஷாந்த்தின் மரணம் தொடர்பான விசாரணை தற்போது சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டதோடு, ரியாவிடமும் சி.பி.ஐ விசாரணை நடத்திக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு ரியா சக்ரபர்த்தி தன் தரப்பு நியாயங்களை முன்னிறுத்தி, பேட்டி கொடுத்திருக்கிறார்.

``உண்மையை மட்டும் பேசுவதால் எந்த விசாரணை குறித்தும் நான் பயப்பட மாட்டேன். சுஷாந்த்தின் மரணத்தின் பின்னணியில் இருக்கிற உண்மையை நானும் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். சுஷாந்த்தின் மரணத்துக்கான காரணத்தை சி.பி.ஐ கண்டுபிடித்துவிடும் என்பதில் எனக்கும் நம்பிக்கை இருக்கிறது'' என்ற ரியா, சுஷாந்த்தின் மரணத்துக்கு முன்னால் தானும் சுஷாந்தும் சென்ற ஐரோப்பா டிரிப் பற்றி அந்தப் பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.
``நாங்கள் விமானத்துக்குள் ஏறியதும் `கிளாஸ்ட்ரோபோபியா'வுக்கு அவர் மாத்திரை போட்டுக்கொண்டார். அன்றைக்குதான் அதைப்பற்றி எனக்கு முதன்முதலாகச் சொன்னார். பாரிஸ் சென்ற பிறகு மூன்று நாள்கள் ஹோட்டல் அறையைவிட்டு அவர் வெளியே வரவேயில்லை. அது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஆனால், சுவிட்சர்லாந்து சென்றபிறகு மகிழ்ச்சியாக இருந்தார். இத்தாலி சென்ற பிறகு மறுபடியும் ஹோட்டல் அறையைவிட்டு வெளியே வருவதற்கு பயந்தார். அவருடைய அறையில் ஏதோ உருவங்கள் தெரிவதாகச் சொன்னார். அவையெல்லாம் மனபிரமை என்று சமாதானப்படுத்தினேன். அப்போதுதான், அவர் இந்தப் பிரச்னைக்காக 2013-ல் இருந்தே தான் மருந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிற தகவலைச் சொன்னார். நான் பயந்துவிட்டேன். உடனே டிரிப்பை கேன்சல் செய்துவிட்டு இந்தியா வந்துவிட்டோம்.'' எனச் சொல்லியிருக்கிறார் ரியா.

``நீங்கள் இருவரும் காதலர்கள். நீங்கள் ஒரு டிரிப் செல்லும்போது, உங்கள் சகோதரரையும் ஏன் உடன் அழைத்துச் சென்றீர்கள்?" என்ற கேள்விக்கு, சுஷாந்த்தும் என் சகோதரர் ஷோவியும் நல்ல நண்பர்கள். அதனால், நான்தான் என் சகோதரரையும் உடன் அழைத்துச்சென்றேன். ஆனால், இப்படியொரு பிரச்னை வரும்; இப்படியொரு கேள்வி வரும் என்று நாங்கள் அப்போது எதிர்பார்க்கவில்லை என்றிருக்கிறார் ரியா.
சுஷாந்த்தின் பணத்தை நீங்கள் அனுபவித்தீர்கள். அவருடைய பணத்தில்தான் நீங்கள் ஐரோப்பா டிரிப் சென்றதாகச் சொல்லப்படுகிறதே என்ற கேள்விக்கு, ``என்னுடைய ஐரோப்பா டிரிப்பில் ஒரு ஃபேஷன் ஷோவில் நான் கலந்துகொள்வதாக இருந்தது. அதனால் அந்த நிறுவனம்தான் எனக்கான ஃபிளைட் டிக்கெட், ஹோட்டல் ரூம் புக்கிங் என எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டது. ஆனால், சுஷாந்த் எங்களுடன் வருவதாக பிளான் மாறியதும், அவர் ஏற்கெனவே அந்த நிறுவனம் செய்த புக்கிங் எல்லாவற்றையும் கேன்சல் செய்துவிட்டு ஃபர்ஸ்ட் கிளாஸ் டிக்கெட் புக் செய்தார். அதை சுஷாந்த் விருப்பத்துடன் செய்தார். சில வருடங்களுக்கு முன்னால் அவருடைய நண்பர்கள் 6 பேருடன் தாய்லாந்து டிரிப் சென்றார். அப்போது அவர்களுக்காக 70 லட்சம் செலவு செய்தார். சுஷாந்த் ஒரு ஸ்டார். அவருடைய லைஃப்ஸ்டைல் இப்படித்தான் இருக்கும். என்னை கேள்வி கேட்பதைபோல அந்த ஆறு பேரையும் கேட்பீர்களா?'' என்று எதிர்கேள்வி கேட்டிருக்கிறார் ரியா.
சுஷாந்த்தின் புது நிறுவனம், அதில் ரியா மற்றும் அவரின் சகோதரர் ஷோவியின் பார்ட்னர்ஷிப் பற்றிய கேள்விக்கு, ``ஆமாம், ஐரோப்பா டிரிப் கிளம்புவதற்கு முன்னால் rhealityx என்கிற ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் நிறுவனம் ஒன்றை நாங்கள் மூவரும் ஒன்று சேர்ந்து ஆரம்பித்தோம். என் மீது இருக்கிற காதலில்தான் சுஷாந்த் தன்னுடைய கனவு நிறுவனத்துக்கு என்னுடைய பெயரையும் சேர்த்து வைத்தார் என்று நினைத்தேன். அந்த நிறுவனத்தில், நாங்கள் மூவரும் ஆளுக்கு 33,000 போட்டு பார்ட்னர்ஸ் ஆனோம். என் சகோதரருக்கு வேலையில்லாத காரணத்தால் அவருக்கான தொகையையும் நானே தந்தேன். நான் சுஷாந்த்தின் பணத்தில் வாழவில்லை. நாங்கள் ஒரு தம்பதி போல வாழ்ந்தோம்'' என்று தன்னுடைய பேட்டியை முடித்திருக்கிறார் ரியா சக்ரபர்த்தி.
இப்படி தன்னைப் பற்றிய சர்ச்சைகளுக்கு இந்தப் பேட்டியின் மூலம் பதிலளித்திருக்கிறார் ரியா.