Published:Updated:

கொரோனா பரவல்: இந்தியாவிலிருந்து தனி விமானங்களில் படையெடுக்கும் செல்வந்தர்கள்?!

விமானப் போக்குவரத்து
விமானப் போக்குவரத்து

பல்வேறு நாடுகளில் இந்தியர்களுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளதால் இந்தியர்கள் இணையத்தில் தடை விதிக்கப்படாத நாடுகளின் பட்டியல்களை ஆராய்ந்து உடனடிப் பயணத்துக்கான 'விரைவு பயணச்சீட்டை' பெற்றுவருகின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக மிகவும் மோசமான உயிர்ச்சேதங்களையும், பாதிப்புகளையும் சந்தித்துவரும் நாடாக இந்தியா இருக்கிறது. இந்தியாவில் நிலைமை மோசமடைந்திருப்பதை அடுத்து சர்வதேச நாடுகள் பலவும் இந்தியாவிலிருந்து பயணிகள் வருவதற்குத் தடைவிதித்துள்ளன.

கடந்த வாரம், நியூசிலாந்து அரசு இந்தியாவுடனான விமானப் போக்குவரத்து சேவையை சில காலங்களுக்கு ரத்துசெய்வதாக அறிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து இங்கிலாந்து அரசும் இந்தியாவுடனான விமானப் போக்குவரத்துக்குத் தற்காலிகத் தடை உத்தரவு பிறப்பித்தது. இந்தநிலையில், ஐக்கிய அரபு அமீரகமும் இந்தியாவுடனான விமானப் போக்குவரத்துக்குத் தடை விதித்துள்ளது.

விமானப் போக்குவரத்து
விமானப் போக்குவரத்து

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் காரணமாக விமானப் போக்குவரத்தை முடக்கியுள்ள ஐக்கிய அமீரகம், இந்தியா - துபாய் இடையேயான விமான போக்குவரத்து சேவையைக் கடந்த 25-ம் தேதி முதல் அடுத்த 10 நாள்களுக்கு ரத்துசெய்தது.

இந்தியாவில் கொரோனா தாக்கம் மிகுதியாக இருப்பதால் பல்வேறு மாநிலங்களில் மருத்துவமனைகள் நிரம்பிவழிகின்றன. மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க, படுக்கைகள் போதுமான அளவில் இல்லாததாலும், உயிர் காக்கும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையாலும் நோயாளிகள் கொத்துக் கொத்தாகச் செத்து மடிந்துகொண்டிருக்கின்றனர். இடுகாடுகளில் இரவு பகலாக எரியும் பிணங்களின் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி மக்களுக்குக் கூடுதல் அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன.

இந்தநிலையில், இந்திய செல்வந்தர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் இந்தியாவில் கொரோனா பரவல் மிகவும் மோசமடைந்திருப்பதால் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்ல தீவிரம் காட்டிவருகின்றனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. பல நாடுகளில் இந்தியாவிலிருந்து வரும் பயணிகள் விமானிகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதால், தனி விமானங்கள் மூலமாக இந்தியச் செல்வந்தர்கள் வெளிநாடுகளுக்கு விரைந்துகொண்டிருக்கின்றனராம்.

மாலத்தீவு
மாலத்தீவு

குறிப்பாக, இந்தியர்கள் கொரோனா தாக்கம் மிகவும் குறைவான அளவிலுள்ள மத்திய கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்ல அதிக அளவில் முனைப்பு காட்டிவருகின்றனர். கோடைக்காலம் வந்துவிட்டால் வழக்கமாக மாலத்தீவுக்குப் பறந்துவிடும் திரைப் பிரபலங்கள் அதையே சாக்காகவைத்து இந்தியாவிலிருந்து கிளம்பிக்கொண்டிருக்கின்றனர். கனடா, ஹாங்காங், இங்கிலாந்து மற்றும் ஐக்கிய அமீரகத்தைத் தொடர்ந்து மாலத்தீவிலும் இந்தியர்கள் அதிக அளவில் படையெடுத்து வருவதால் மாலத்தீவில் ஒரு சில ரிசார்ட்டுகளைத் தவிர்த்து மற்ற அனைத்து இடங்களிலும் இந்தியர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக, திரைப் பிரபலங்கள் மற்றும் செல்வந்தர்கள் அடித்துப் பிடித்து முன்பதிவு செய்துவருகின்றனர்.

பொது விமான போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள பல நாடுகளில் தனி விமானங்கள் இந்தியாவிலிருந்து வந்து தரை இறங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஐக்கிய அமீரகத்தில் தனி விமானம் மூலம் வருவதற்கு இந்தியர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதால் இந்தியர்கள் அதிக அளவில் துபாய்க்குத் தனி விமானங்களில் விரைந்துகொண்டிருக்கின்றனராம். தோராயமாக டெல்லியிலிருந்து துபாய்க்குத் தனி விமானம் மூலம் செல்வதற்கு இந்திய மதிப்பில் 14,94,690 ரூபாய் வசூலிக்கப்படுவதாக கத்தார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

துபாய் விமான நிலையம்
துபாய் விமான நிலையம்

கடந்த ஆண்டு இந்தியாவிலிருந்து பிற நாடுகளுக்குப் பலர் பொய்யான மருத்துவச் சிகிச்சை காரணங்களை முன்வைத்து வணிக விமானங்களில் சென்றதால், இந்த முறை அரசாங்கம் அதற்கும் தடை விதித்துள்ளது. இந்தியாவில் தனியார் நிறுவனங்கள் வழக்கமாகவே அதிக கட்டணத்தை வசூலித்துவரும் நிலையில், தற்போது இந்தச் சூழலைப் பயன்படுத்தி தங்கள் விமான கட்டணங்களைப் பல மடங்கு அதிகரித்துள்ளன.

பல்வேறு நாடுகளில் இந்தியர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் இந்தியர்கள் இணையத்தில் தடை விதிக்கப்படாத நாடுகளின் பட்டியல்களை ஆராய்ந்து உடனடி பயணத்துக்கான 'விரைவு பயணச்சீட்டை' பெற்றுவருகின்றனர். வரும் நாள்களில் இன்னும் பல்வேறு நாடுகள் இந்தியர்களுக்குத் தடை விதிக்க நேரிடும் என்பதால், எவ்வளவு தொகை வேண்டுமானாலும் பரவாயில்லை என்று இந்தியாவிலிருந்து செல்லும் மனநிலையில் சிலர் இருக்கின்றனர்.

குறிப்பாக, கொரோனா பாதிப்பு மிகவும் குறைவாக உள்ள துபாய்க்கு ஒருவழிப் பயண மார்க்கமாகச் செல்வதற்கு வழக்கத்தைவிடவும் 10 மடங்கு அதிகமாகக் கட்டணம் வசூலிக்கப்பட்டுவருகிறதாம்.

அடுத்த கட்டுரைக்கு