Published:Updated:

தீவிரவாதி ரியாஸ் நைகூவைப் போட்டுக்கொடுத்த புதுக்கும்பல்... பழி தீர்த்த ராணுவம்!

கொல்லப்பட்ட தீவிரவாதி ரியாஸ் நைகூ
கொல்லப்பட்ட தீவிரவாதி ரியாஸ் நைகூ

காஷ்மீர் தீவிரவாதி ரியாஸ் நைகூ கதையை முடித்த பின்னணியில் மற்றொரு தீவிரவாதக் கும்பல் இருக்கிறது. அதுதான், காஷ்மீரில் புதியதாக முளைத்துள்ள தி ரெஸிஸ்டன்ஸ் இயக்கம்!

கொரோனா வைரஸ் காலத்திலும் காஷ்மீரில் குண்டுச்சத்தம் ஓயவில்லை. தீவிரவாதிகளுக்கு எதிராக ராணுவமும் துணை ராணுவப்படையினரும் தொடர்ந்து போராட்டத்தை நடத்திக் கொண்டுதான் இருக்கின்றனர். நாடு பேரிடரை எதிர்கொண்டிருக்கும் காலத்திலும், காஷ்மீரில் தீவிரவாதிகளின் குண்டுக்கு ராணுவத்தினர் உயிரைப் பலி கொடுத்து கொண்டிருக்கின்றனர். ராணுவம் நடத்தும் அதிரடி தாக்குதலில் தீவிரவாதிகளும் கொல்லப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர். இந்த முறை ராணுவத்தின் துப்பாக்கிக்குண்டு பறித்தது ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தைச் சேர்ந்த ரியாஸ் நைகூவின் உயிரை.

காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகீதின் தலைமை கமாண்டர் புர்கான் சுட்டுக்  கொலை
காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகீதின் தலைமை கமாண்டர் புர்கான் சுட்டுக் கொலை

கடந்த 2016-ம் ஆண்டு ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தின் கமாண்டர் புர்ஹான் வானி சுட்டுக் கொல்லப்பட்டார். புர்ஹான் வானி நல்ல படிப்பாளி. இந்த புர்ஹான் வானி போல ரியாஸ் நைகூவும் மெத்த படித்தவர்தான். இவர் புல்வாமா மாவட்டத்தில் தன் சொந்த ஊரான பைகோபோராவில் பள்ளி ஒன்றில் கணக்கு ஆசிரியராகப் பணிபுரிந்தவர். தந்தை அசதுல்லா ஒரு டெய்லர். வறுமையான குடும்பம்தான் என்றாலும், ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாக டியூசன் எடுத்து அவர்களின் படிப்பில் அக்கறை காட்டியவர் ரியாஸ். ஆனால், பிறகு தீவிரவாத வழியைத் தேர்வு செய்து அதில் பயணித்த ரியாஸின் உயிரை இப்போது துப்பாக்கிக் குண்டு குடித்துள்ளது. இந்த ரியாஸ் தீவிரவாதியானதற்குப் பின்னணியில் ஒரு கதை சொல்லப்படுகிறது.

கடந்த 2010-ம் ஆண்டு காஷ்மீரில் 17 வயது இளைஞர் துஃபய் அகமது மாட்டோ என்பவர் பாதுகாப்புப்படையினரால் கொல்லப்பட்டார். விளைவாக... காஷ்மீர் பள்ளத்தாக்கில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையின்போது, கைது செய்யப்பட்ட ரியாஸ் சிறையில் அடைக்கப்பட்டார். 2012-ம் ஆண்டு சிறையை விட்டு வெளியே வந்த, ரியாஸின் மனநிலையை சிறை வாழ்க்கை மாற்றியிருந்தது. இதுதான், அவரின் வாழ்க்கையில் நடந்த திருப்பம். தொடர்ந்து, தீவிரவாதியாக மாறிய ரியாஸ் ஹிஸ்புல் முஜாகிதீனில் ஐக்கியமானார்.

Kashmir
Kashmir

காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர், போலீஸாரைக் குறி வைத்து தாக்க முனைப்பு காட்டிய ரியாஸ் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. காஷ்மீரில் குல்காம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 6 புலம் பெயர் தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது, ஷோபியான் மாவட்டத்தில் பழ வியாபாரிகள் மற்றும் பழ டிரக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவங்களில் இவருக்கு தொடர்பு இருந்தது. 2018-ம் ஆண்டு ரியாஸின் தந்தை அசதுல்லாவை போலீஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ரியாஸின் உத்தரவின் பேரில், தெற்கு காஷ்மீர் பகுதியில் போலீஸார் குடும்பங்களைச் சேர்ந்த 12 பேர் ஹிஸ்புல் ஆள்களால் கடத்தப்பட்டனர். பின்னர், ரியாஸின் தந்தை விடுவிக்கப்பட்ட பிறகே, போலீஸாரின் உறவினர்களும் விடுவிக்கப்பட்ட சம்பவமும் நிகழ்ந்தது. இதனால், ரியாஸ் மீது பாதுகாப்புப் படையினர் பிடியை இறுக்கினர்.

இதற்கிடையே, ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்துக்கும் காஷ்மீரில் புதிதாக உருவாகியுள்ள மற்றொரு தீவிரவாத இயக்கமான 'தி ரெஸிஸ்டன்ஸ் ஃப்ரன்ட்' என்ற இயக்கத்துக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு மோதல் வெடித்துள்ளது. இரு குழுவினருமே ஒருவரை ஒருவர் வேட்டையாடத் திட்டமிட்டிருந்தனர். இந்தச் சமயத்தில் தன் குடும்பத்தினரைப் பார்க்க சொந்த ஊரான பைகோபோராவுக்கு புதன்கிழமை (6-ம் தேதி) ரியாஸ் சென்றுள்ளார். சொந்த ஊரில் ரியாஸ் இருக்கும் தகவலை பாதுகாப்புப்படையினருக்கு ரெஸிஸ்டன்ஸ் இயக்கம் கசியவிட்டுள்ளது. ரியாஸை சுற்றிவளைத்த பாதுகாப்புப்படையினர் அவரை சுட்டுக் கொன்றனர்.

kashmir
kashmir
Jagran

பைகோபோராவில் பாதுகாப்புப் படையினருக்கும் ரியாஸ் குழுவினருக்குமிடையே துப்பாக்கி சண்டை நடந்து கொண்டிருந்தபோது, ரியாஸ் உடனிருந்த தீவிரவாதி ஒருவர் போனில் பேசியதை பாதுகாப்புப் படையினர் இடைமறித்து ஒட்டுக் கேட்டுள்ளனர். துப்பாக்கி குண்டடிப்பட்ட அந்தத் தீவிரவாதி, `இதற்கெல்லாம் காரணம் அந்த இயக்கம்தான். நாங்கள் பைகோபோராவில் மாட்டிக்கொண்டுள்ளோம். எனக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ரியாஸ் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறான். நம் மக்களேதான் நம்மை காட்டிக் கொடுத்துள்ளனர். ரெஸிஸ்டன்ஸ் இயக்கம்தான் பாதுகாப்புப்படையினருக்குத் தகவல் கொடுத்துள்ளது. காஷ்மீரிலிருந்து அவர்களை நாம் அழிக்க வேண்டும்' என்று பேசியுள்ளார்.

தி ரெஸிட்டன்ஸ் குரூப் என்பது பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் ஆதரவுடன் காஷ்மீரில் செயல்படும் தீவிரவாத அமைப்பாகக் கருதப்படுகிறது. பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது அமைப்புகளும் அதன் தலைவர்களாக சொல்லப்படும் ஹஃசீப் சயீத், மவுலானா மசூத் அசார் சர்வதேச தீவிரவாதிகள் என ஐ.நா அமைப்பு அறிவித்துள்ளது. ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தின் தலைவர் சயித் சலா உத் தின் என்பவரும் சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். இதனால், காஷ்மீரில் தீவிரவாத செயல்களைப் புரிய `தி ரெஸிஸ்டன்ஸ் குரூப்' என்ற பெயரில் புதிய அமைப்பு ஒன்றை லஷ்கர் இ தொய்பா பின்னணியில் பாகிஸ்தான் உருவாக்கியுள்ளது.

India Pakistan Border
India Pakistan Border
AP Photo/Channi Anand

கடந்த ஏப்ரல் 5-ம் தேதி குப்வாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் மேஜர் உள்ளிட்ட 5 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தில் ரெஸிஸ்டன்ஸ் குழுவினர்தான் ஈடுபட்டுள்ளனர். இந்தக் குழுவில் இருப்பவர்கள் பெரும்பாலும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். குப்வாராவில் இந்திய ராணுவத்தினர் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக இந்திய தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டபோது 5 பேர் கொல்லப்பட்டனர். அதில், இருவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அரசு தீவிரவாதக் குழுக்களுக்கு ஆதரவு கொடுத்து வருவதாக அந்த நாடு மீது சர்வதேச நாடுகள் நெருக்கடி கொடுத்துள்ளன. மேலும், தீவிரவாதக் குழுக்களுக்கு நிதியுதவி அளிப்பதாகவும் சர்வதேச நாடுகள் பாகிஸ்தான் மீது குற்றம்சாட்டியுள்ளன. இதனால், லஷ்கர் இ தொய்பா, ஹிஸ்புல் முஜாகிதீன் போன்ற அமைப்புகளைத் தவிர்த்துவிட்டு, தி ரெஸிட்டன்ஸ் குரூப் என்ற பெயரில் காஷ்மீரில் தீவிரவாதச் செயல்களை கட்டவிழ்த்துவிட பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

`இயக்கப்படாமல் இருந்த டேங்குகள்; கொடிய ஸ்டைரீன் வாயு!' - விசாகப்பட்டினத்தை உலுக்கிய கொடூர சம்பவம்
அடுத்த கட்டுரைக்கு