Published:Updated:

டோல் கட்டணம் போதவில்லை... அதிகரிக்கும் கடன் சுமை... சிக்கலில் நெடுஞ்சாலைத் திட்டங்கள்!

தெ.சு.கவுதமன்

நெடுஞ்சாலைப் பணிகளுக்கான கடனுக்காக ஆண்டு வட்டியாக ரூ.14,000 கோடி செலுத்த வேண்டியுள்ளது. ஆனால், சுங்கக்கட்டணமாக ஆண்டுக்கு 10,000 கோடி மட்டுமே வசூலாகிறது. எனவே, கடன் சுமை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

தேசிய நெடுஞ்சாலை
தேசிய நெடுஞ்சாலை

மோடி தலைமையில் கடந்த முறை ஆட்சிக்கு வந்ததும் மேக் இன் இந்தியா திட்டத்துக்காக உள்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்குவதில் தீவிர கவனம் செலுத்தப்பட்டது. அதன்படி தேசிய நெடுஞ்சாலைகள் விரிவாக்கப்பணி முடுக்கிவிடப்பட்டது. ஆனால், விரிவாக்கப்பணியை முறையாக, தேவைக்கேற்ப திட்டமிட்டு செயல்படுத்தாததால், செலவுக்கேற்ப சுங்க வரி வசூல் அமையவில்லை. தற்போது இதுவே மத்திய அரசுக்குப் பெரிய சிக்கலாக உருவெடுத்துள்ளது.

Vikatan
தேசிய நெடுஞ்சாலை
தேசிய நெடுஞ்சாலை

முறையான திட்டமிடலின்றி தேசிய நெடுஞ்சாலைகளை அதிகப்படியாக விரிவாக்கம் செய்ததால் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டிருப்பதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு பிரதமர் அலுவலகத்திலிருந்து கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைக்காகக் கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு, தற்போதுள்ள சட்டப்படி, அதன் மதிப்பீட்டு விலையைவிடக் கூடுதலாகத் தரவேண்டியுள்ளது. சாலைக் கட்டுமானத்துக்கான செலவுகளும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. எனவே, இதற்கு நிதி ஒதுக்குவது சாத்தியமற்றதாகி வருகிறது என்று தெரிவித்துள்ளது. அதனால், தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணிகளைத் தொடர மாற்று யோசனையைத் தெரிவிக்கும்படி தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் கேட்டுள்ளதாகத் தெரிகிறது.

தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகளுக்காக, பெறப்பட்ட கடன் தொகை ரூ.1.8 லட்சம் கோடியாக உள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் கடன் தொகை ஏழு மடங்கு உயர்ந்துள்ளது. இதற்கான ஆண்டு வட்டியாக ரூ.14,000 கோடி செலுத்த வேண்டியுள்ளது. ஆனால், சுங்கக்கட்டணமாக ஆண்டுக்கு 10,000 கோடி மட்டுமே வசூலாகிறது. எனவே, கடன் சுமை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

சுங்கச்சாவடி
சுங்கச்சாவடி

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் செலுத்த வேண்டிய கடன் சுமை நடப்பு நிதியாண்டில் ரூ.5,600 கோடியாகவும், 2020-21 நிதியாண்டில் ரூ.6,600 கோடியாகவும் இருக்குமெனக் கணக்கிடப்பட்டுள்ளது. நிலத்தைக் கையகப்படுத்துவதற்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத்தொகையும் ஹெக்டேருக்கு ரூ.90 லட்சத்திலிருந்து ரூ.2.5 கோடியாக அதிகரித்துள்ளது. எனவே முறையாகத் திட்டமிடாமல் தொடங்கப்பட்ட நெடுஞ்சாலைத் திட்டங்கள் பெரிய நிதிச்சிக்கலுக்கு ஆளாகியுள்ளன.

சமூகப் பொருளாதார மாற்றங்கள் நடைபெற வேண்டுமென்றால் நெடுஞ்சாலைத் திட்டங்களின் வளர்ச்சியும் அவசியமானதாகும். இதில் பாதிப்பு ஏற்பட்டால் இதைச் சார்ந்திருக்கும் மற்ற துறைகளிலும் இது பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். எனவே, நெடுஞ்சாலைப் பணிகளில் தற்போதுள்ள முறையில் ஏதேனும் மாற்றம் கொண்டுவரும்படி தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. தற்போதுள்ள நடைமுறைப்படி தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நேரடியாகச் சாலை போடும் பணியில் ஈடுபடுவதில்லை. சாலைப்பணிகளுக்கான உரிமையை ஏலத்தின்மூலம் தனியார்வசம் ஒப்படைக்கிறது. அவற்றுக்கான சுங்கக் கட்டணத்தையும் அவர்களே வசூலிக்கிறார்கள். குறிப்பிட்ட காலத்துக்குப் பின் அந்தச் சாலைகளுக்கான உரிமை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கே அளிக்கப்படும்.

தேசிய நெடுஞ்சாலை
தேசிய நெடுஞ்சாலை
vikatan

சாலைகளுக்கான நிலம் கையகப்படுத்துதல், கட்டுமானப்பணிகள் போன்றவற்றில் தனியார் துறை திறம்பட செயலாற்றாததே இத்தகைய நிதிச்சிக்கலுக்குக் காரணமெனத் தெரிகிறது. கடன் தொகை அதிகரிப்பின் விளைவாக, நெடுஞ்சாலை விரிவாக்கப்பணிகள் குறைக்கப்படலாம் எனத் தெரிகிறது.