Published:Updated:

‘6 வங்கிகள்; ரூ.411 கோடி கடன்; தப்பியோட்டம்’ - 4 வருடங்களுக்குப் பின் புகார் கொடுத்த எஸ்.பி.ஐ

எஸ்.பி.ஐ
எஸ்.பி.ஐ

பல வங்கிகளில் ரூ.411 கோடி கடன் பெற்றுத் திருப்பிச் செலுத்த முடியாத ராம்தேவ் நிறுவனத்தின் மீது 4 ஆண்டுகளுக்குப் பின் எஸ்.பி.ஐ புகார் கூறியுள்ளது.

ஒரு வங்கியில் கோடிக்கணக்கில் கடன் வாங்கிவிட்டு அதைத் திருப்பிச் செலுத்த முடியாமல் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லும் இந்தியத் தொழிலதிபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது ராம்தேவ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் இயக்குநர்களும் இணைந்துள்ளனர். இவர்கள் கடன் மோசடி செய்த 4 ஆண்டுகளுக்குப் பிறகு இது தொடர்பாக எஸ்.பி.ஐ வங்கி சிபிஐ அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அரிசி
அரிசி

டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த, ராம்தேவ் நிறுவனம் பாஸ்மதி அரிசியை மேற்கு ஆசிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்துள்ளது. இதற்காக சவுதி அரேபியா, துபாய் போன்ற பல நாடுகளில் தங்கள் அலுவலகத்தை நடத்தி வந்துள்ளனர். இந்த நிறுவனத்தின் இயக்குநர்களான நரேஷ் குமார், சுரேஷ் குமார் மற்றும் சங்கீதா ஆகியோர் தொழில் வளர்ச்சிக்காகக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் எஸ்.பி.ஐயிடம் ரூ.173 கோடி பெற்றுள்ளனர்.

`மல்லையா உள்ளிட்ட 50 தொழிலதிபர்களின் ரூ.68,607 கோடி வாராக்கடன் தள்ளுபடி’ -ஆர்டிஐ மூலம் வெளியான தகவல்

இதுமட்டுமல்லாமல் கனரா வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, ஐடிபிஐ, கார்ப்பரேஷன் வங்கி மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா போன்ற பல வங்கிகளும் மொத்தமாக ரூ.411 கோடி கடன் பெற்றுள்ளனர். இந்த நிறுவனத்துக்குச் சொந்தமாக 3 பெரிய ஆலைகள் மற்றும் 8 சிறிய அளவிலான ஆலைகள் உள்ளன. ராம்தேவ் நிறுவனம் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் 2016-ம் ஆண்டு, அந்தக் கடனைச் செயல்படாத சொத்துகள் (non performing assets) எனும் வரையறைக்குள் கொண்டுவந்துள்ளது எஸ்.பி.ஐ.

எஸ்.பி.ஐ
எஸ்.பி.ஐ

பின்னர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கடன் கொடுத்த அனைத்து வங்கிகளும் இணைந்து ராம்தேவ் நிறுவனத்தில் ஆய்வு செய்துள்ளனர். ஆனால் அதற்கு முன் தங்கள் தொழிற்சாலையில் இருந்த அனைத்து எந்திரங்களையும் பலருக்கு விற்று தங்கள் பேலன்ஸ் ஷீட்டைச் சரி செய்து வங்கிகளுக்குப் போலிக் கணக்குக் காட்டியுள்ளது ராம்தேவ் நிறுவனம் . போலிக் கணக்குகள் உறுதியான பிறகுதான் அந்நிறுவனம் தொடர்பாக வங்கிகள் விரிவான விசாரணை நடத்தத் தொடங்கி கடந்த பிப்ரவரி மாதம் சிபிஐயிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏப்ரல் 28-ம் தேதி ராம்தேவ் நிறுவனத்துக்கு எதிராக ஏமாற்றுதல், பணமோசடி, ஊழல் போன்ற பல பிரிவுகளில் அதிகாரபூர்வமாக வழக்கு தொடர்ந்துள்ளது சிபிஐ.

Vikatan

இந்த விவகாரம் தொடர்பாக எஸ்.பி.ஐ வங்கி சிபிஐயிடம் அளித்துள்ள புகாரில், ‘ ராம்தேவ் நிறுவனம் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாததால் அந்தக் கடன் 2016-ம் ஆண்டு என்பிஏ- வாக அறிவிக்கப்பட்டது. பல வங்கிகளிலிருந்து பெற்ற கடனை அந்நிறுவனம் முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளது. கடன் திருப்பிச் செலுத்தப்படாதது தொடர்பாக பீகார் போலீஸார் நடத்திய விசாரணையிலும் ராம்தேவ் நிர்வாகிகள் ஆஜராகவில்லை. எங்கள் விசாரணையில் அவர்கள் தப்பியோடியதாகத் தெரியவந்துள்ளது. இந்தத் தகவல் கடந்த வருடம்தான் உறுதிசெய்யப்பட்டது. அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிபிஐ
சிபிஐ

ராம்தேவ் நிறுவனத்தினர் நாட்டை விட்டுத் தப்பி ஓடுவதற்கு முன் தங்கள் அனைத்துச் சொத்துகளையும் விற்றுள்ளனர். இதனால் கடனைத் திரும்பப் பெறுவது சாத்தியமில்லை என்பதை அறிந்த எஸ்.பி.ஐ இறுதியாக வேறு வழியில்லாததால் சிபிஐயின் உதவியை நாடியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்த கட்டுரைக்கு