Published:Updated:

பீகார் மாணவரின் வங்கிக் கணக்கில் ரூ.900 கோடி; குளறுபடிக்குப் பின்னால் இருப்பது என்ன?

பீகார் மாநிலத்தில், ஏழைகள் சிலரின் வங்கிக் கணக்குகளில் லட்சக்கணக்கிலும் கோடிக்கணக்கிலும் திடீர் திடீரெனப் பணம் கிரெடிட் ஆனதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்தக் குளறுபடிகளுக்கு பின்னால் இருப்பது என்ன?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பீகார் மாநிலத்தில் ஏழைகள் சிலரின் வங்கிக் கணக்குகளில் லட்சக்கணக்கிலும் கோடிக்கணக்கிலும் பணம் வந்து கொட்டியிருக்கிறது. கடந்த சில நாள்களாக இது பற்றித்தான் பீகார் மக்கள் மத்தியில் பேச்சாக இருக்கிறது.

பீகார் மாநிலம், ககாரியா மாவட்டத்திலுள்ள பக்தியார்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார் தாஸ். 30 வயதான அவருக்கு, அங்குள்ள கிராம வங்கிக் கிளையில் கணக்கு இருக்கிறது. இவரது வங்கிக் கணக்கில் திடீரென ரூ.5.5 லட்சம் கிரெடிட் ஆகியிருக்கிறது. அதைக் கண்டு ரஞ்சித் குமார் தாஸுக்கு ஒரே மகிழ்ச்சி. அந்தப் பணத்தை எடுத்து அவர் தாராளமாகச் செலவு செய்திருக்கிறார்.

வங்கி
வங்கி

ரஞ்சித் குமார் தாஸின் மகிழ்ச்சி நீண்டநாள் நீடிக்கவில்லை. தவறுதலாக ரஞ்சித் குமார் தாஸ் வங்கிக் கணக்குக்குப் பணம் சென்றுவிட்டதை வங்கி அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அதைத் தொடர்ந்து, அந்தப் பணத்தை வங்கியிடம் திருப்பிக் கொடுக்குமாறு ரஞ்சித்குமார் தாஸிடம் வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர். இது தொடர்பாக, வங்கியிலிருந்து பல நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டன. ஆனால், பணத்தைத் திருப்பிக் கொடுக்க அவர் மறுத்துவிட்டார்.

மேலும், `எனது வங்கிக் கணக்கில் ரூ. 5.5 லட்சம் கிரெடிட் ஆகியிருப்பதாக மொபைல்போனுக்கு மெசேஜ் வந்தது. அதைக் கண்டு எனக்குப் பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. என்னைப் போன்ற ஓர் ஏழைக்கு அது மிகப்பெரிய தொகை. தேர்தலில் வெற்றிபெற்றால் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக பீகாரில் தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி கூறியிருந்தார். அந்தப் பணத்தைத்தான் பிரதமர் எனக்கு அனுப்பியிருக்கிறார் என்று நினைத்தேன்’ என்று வங்கி அதிகாரிகளிடம் ரஞ்சித் குமார் தாஸ் கூறியிருக்கிறார்.

பல முறை நோட்டீஸ் அனுப்பியும் பணத்தை ரஞ்சித் குமார் தாஸ் திருப்பிக் கொடுக்காததால், காவல் நிலையத்தில் வங்கி அதிகாரிகள் புகார் செய்தனர். அதையடுத்து, அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்திருக்கிறார்கள். அந்தப் பணத்திலிருந்து நிறைய செலவுசெய்துவிட்டதால், மீதியிருந்த பணத்தை மட்டும் அந்த நபர் திருப்பிக் கொடுத்திருக்கிறார். மீதிப் பணத்தை அவரிடமிருந்து வசூலிக்கும் முயற்சியில் வங்கி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

பணம்
பணம்

ஆச்சர்யமான இன்னொரு சம்பவம்... பீகாரில் கட்டிஹர் மாவட்டத்திலுள்ள பஸ்டியா கிராமத்தைச் சேர்ந்த குருசந்திர விஸ்வா, அசித் குமார் என்ற இரண்டு மாணவர்கள் தங்கள் பள்ளிச் சீருடைக்கான பணத்தை வங்கிக் கணக்கில் மாநில அரசு போட்டுவிட்டதா என்பதைப் பார்ப்பதற்காக ஏ.டி.எம் சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்குப் பெரும் அதிர்ச்சி. அவர்களின் வங்கிக் கணக்குகளில் மிகப்பெரிய தொகை கிரெடிட் ஆகியிருப்பதாக ஏ.டி.எம்-மில் காட்டியிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதாவது, விஸ்வாவின் வங்கிக் கணக்கில் ரூ.60 கோடியும், குமாரின் வங்கிக் கணக்கில் ரூ. 900 கோடியும் கிரெடிட் ஆகியிருந்தன. உடனடியாக வங்கி அதிகாரிகளுக்குத் தகவல் போனது. எப்படி இவ்வளவு பெரிய தொகை பள்ளி மாணவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு வந்தது என்பது குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் பின்னணி என்னவாக இருக்கும் என்பது குறித்து முன்னாள் வங்கி அதிகாரியும், மூத்த பத்திரிகையாளருமான ஜென்ராமிடம் கேட்டோம்.

ஜென்ராம்
ஜென்ராம்

``பீகாரில் ஒருவரது வங்கிக் கணக்கில் ரூ.5.5 லட்சம் கிரெடிட் ஆனது, தவறான என்ட்ரியின் காரணமாக இருக்கும். பெயர், கணக்கு எண் ஆகியவற்றைச் சரியாகப் பார்க்காமல், வேறு யாருக்கோ போகவேண்டிய பணம், தவறுதலாக இவரது கணக்கில் சேர்ந்திருக்கலாம். இது எப்போதாவது நடக்கக்கூடிய ஒன்றுதான். இது போன்ற தவறு கண்டுபிடிக்கப்பட்டுவிட்டால், உடனடியாக அது சரிசெய்யப்பட்டுவிடும்.

அந்த ரூ.5.5 லட்சத்தை அந்த நபர் கணக்கிலிருந்து எடுத்துவிட்டார் என்பதுதான் பிரச்னை. பிரதமர் மோடி வாக்குறுதியின்படி அரசிடமிருந்து வந்த பணம் என்று அவர் கூறியிருக்கிறார். அந்தப் பணத்தைச் செலவு செய்துவிட்டதாகவும் அவர் கூறுகிறார். அவரிடமிருந்து பணத்தை வசூலிப்பதற்கான முயற்சியை வங்கி மேற்கொள்ளும். அதற்கு முன்பாக, அந்தப் பணம் யாருடையதோ, அவர்களிடம் அந்தப் பணத்தை வங்கி கொடுத்துவிட வேண்டும்.

அரசுப் பணிகளில் பெண்களுக்கு 40 சதவிகித இடஒதுக்கீடு - நடைமுறை குழப்பத்தால் ஆண்களுக்கு பாதிப்பா?

தினமும் வங்கியில் வாடிக்கையாளர் சேவை நேரம் முடிந்த பிறகு, கணக்கு சரிபார்க்கும் அதிகாரி, இப்படி ஏதாவது தவறு நடந்திருப்பதைக் கண்டுவிட்டால் உடனடியாக அதைச் சரிசெய்துவிடுவார். ஒட்டுமொத்தமாக தானியங்கி முறைக்கு வங்கிகள் மாறிய பிறகு, ஒருவரின் வங்கிக் கணக்கில் இருக்கும் பணம் மற்றொருவரின் கணக்குக்கு மாறுவது என்ற தவறு குறைந்திருக்கிறது. ஒப்பீட்டளவில் அதற்கு முன்பு அது கொஞ்சம் அதிகமாக இருந்திருக்கும்.

வங்கிக் கணக்கு புத்தகம்
வங்கிக் கணக்கு புத்தகம்

பீகாரில் பள்ளி மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.900 கோடி, ரூ.60 கோடி கிரெடிட் ஆனது என்று சொல்லப்படும் பிரச்னையைப் பொறுத்த அளவில், அந்த மாணவர்கள் ஏ.டி.எம்-மில் பார்த்தபோது அந்தத் தொகை தெரிந்திருக்கிறது. ஆனால், வங்கியில் கணக்குப் புத்தகத்தில் அப்படி எதுவும் இல்லை. எனவே, இது தொழில்நுட்பப் பிரச்னையா அல்லது வேறு ஏதாவது பிரச்னையா என்பது தெரியவில்லை. இது பற்றிய விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார்கள். விசாரணையில் காரணம் தெரியவரும்” என்றார். ஆக, இது ரூ.15,00,000 விவகாரம் அல்ல!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு