உக்ரைனில் குடியேறிய ரஷ்யரான செர்ஜி நோவிகோவ் (Sergei Novikov), உக்ரைனிய நாட்டைச் சேர்ந்த எலோனா பிரமோகா (Elona Bramoka) இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் காதலித்துவந்திருக்கிறார்கள். இந்த நிலையில், உக்ரைன்-ரஷ்யா இடையே போர் நடைபெற்றாலும், திருமணம் செய்துகொள்வதில் இருவரும் உறுதியாக இருந்திருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து, உக்ரைன் - ரஷ்யா போர் தொடங்கும் முன்பே, இருவரும் கடந்த ஒரு வருடமாக இமாச்சலப்பிரதேசத்தின் தர்மசாலாவுக்கு அருகிலுள்ள தரம்கோட்டில் வசித்துவந்திருக்கின்றனர்.
திருமணம் செய்துகொள்ள முடிவுசெய்தபோது எங்கு எப்படி திருமணம் செய்துகொள்வது எனத் தயங்கியவர்களுக்கு அறிமுகமானது திவ்யா ஆசிரமம். ஆசிரமத்தைத் தொடர்புகொண்டு தங்கள் திருமண விருப்பத்தைத் தெரிவித்தபோது, ஆசிரமம் இருவரையும் வரவேற்றிருக்கிறது.

மேலும், உள்ளூர் மக்கள் திருமணத்துக்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் உள்ளூர்வாசிகள் அனைத்துச் சடங்குகளையும் செய்து, பாரம்பர்ய ஹிமாச்சலி நாட்டுப்புற இசைக்கு நடனமாடி, புதுமணத் தம்பதிக்கும், விருந்தினர்களுக்கும் காங்கிரி தாம் உணவு வகைகளை ஏற்பாடும் செய்திருக்கிறார்கள். இந்தத் திருமணம் தொடர்பாக திவ்யா ஆசிரமம் கரோட்டாவைச் சேர்ந்த பண்டிட் சந்தீப் சர்மா, "எங்கள் பண்டிட் ராமன் ஷர்மா அவர்கள்தான் திருமணத்தை நடத்திவைத்தார், மேலும் சனாதன தர்மத்தின் மரபுகளின்படி திருமணத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி அவர்களிடம் விளக்கினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மேலும், இந்த ஜோடி பாரம்பர்ய இந்திய திருமண ஆடைகளை அணிந்திருந்தது மற்றும் பாராயணம் செய்யப்படுவதில் மிகுந்த ஆர்வம்கொண்டிருந்தனர். அதனால், பண்டிட் ராமன் சர்மா ஒவ்வொரு மந்திரத்தின் அர்த்தத்தையும் மொழிபெயர்ப்பாளரின் உதவியுடன் அந்தத் தம்பதிக்கு விளக்கினார். அதேநேரம், தரம்கோட்டில் வசிக்கும் மக்களும், வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகளும் கலந்துகொண்டு சடங்குகளைச் செய்து மகிழ்ந்தனர்" எனத் தெரிவித்தார்.