Published:Updated:

`தாக்கரேவுக்கு கமாண்டோ படை; சச்சினுக்கு கான்ஸ்டபிள்கூட இல்லை!' -பாதுகாப்பு மாற்றப்பட்ட பின்னணி

பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டு வந்த X பிரிவு பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர எம்.எல்.ஏ ஆதித்ய தாக்கரேவின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆதித்ய தாக்கரே - சச்சின்
ஆதித்ய தாக்கரே - சச்சின்

`கிரிக்கெட்டின் கடவுள்' என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்து வருகிறார். உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரான சச்சின், விளையாடிக்கொண்டிருக்கும்போதும் ஓய்வுபெற்ற பின்னரும் அவருக்கு மத்திய, மாநில அரசுகள் சிறப்பு பாதுகாப்புகளை வழங்கி வந்தன.

சச்சின்
சச்சின்

2007-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை போட்டியில் இந்தியா தோல்வியடைந்த பிறகு, மும்பையில் உள்ள சச்சினின் வீடு மீது கிரிக்கெட் ரசிகர்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். அப்போதிலிருந்து சச்சினுக்குக் கூடுதல் சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டது. இதுநாள் வரை சச்சினுக்கு X பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. இதன்படி 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய 2 போலீஸார் சச்சினுடனேயே இருப்பது வழக்கம். ஆனால், இனி அவர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட மாட்டார்கள். சச்சினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளது. இது அவரின் ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவில் புதிதாகப் பதவியேற்றுள்ள சிவசேனா தலைமையிலான ஆட்சியில், அங்கு வாழும் பிரபலமான 90 பேருக்கு வழங்கப்பட்டுவரும் பாதுகாப்பு குறித்து மறுபரிசீலனை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, கடந்த சில ஆண்டுகளாக அச்சுறுத்தல் இல்லாதவர்களுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே சச்சினுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பும் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருந்தும் சச்சினுக்கு காவலர்கள் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆதித்ய தாக்கரே
ஆதித்ய தாக்கரே

அதேபோல் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேயின் மகனும் வோர்லி தொகுதியின் எம்.எல்.ஏ-வுமான ஆதித்ய தாக்கரேவுக்கு வழங்கப்பட்டு வந்த Y+ பாதுகாப்பு Z பிரிவு பாதுகாப்பாக அதிகரிக்கப்பட்டுள்ளது. (Y+ பாதுகாப்பு - 11 ஆயுதம் ஏந்திய பாதுகாவலர்கள் உடன் இருப்பர். Z பாதுகாப்பு - 5 கமாண்டோவுடன் கூடிய 22 ஆயுதம் ஏந்திய பாதுகாவலர்கள் உடன் இருப்பர்) முதல்வர் மகன் மற்றும் முதல்முறையாக எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆதித்ய தாக்கரேவுக்கு நிறைய அச்சுறுத்தல்கள் இருப்பதைக் காரணம் காட்டி அவருக்கு Z பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

முதல் செஞ்சுரி... பிரஸ் மீட்... சக வீரர்கள் அழுத்தம்... சச்சின் பகிர்ந்த நாஸ்டால்ஜியா!

இதையடுத்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருக்கு வழங்கப்பட்ட Z+ பாதுகாப்பும் அவருடைய அண்ணன் மகன் அஜித் பவாருக்கு வழங்கப்பட்ட Z பாதுகாப்பும் அப்படியே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரேவுக்கு வழங்கப்பட்டு வந்த Y+ பாதுகாப்பு Z பிரிவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு
பாதுகாப்பு

முன்னாள் உத்தரப்பிரதேச ஆளுநர் ராம் நாயக்குக்கு வழங்கப்பட்ட Z+ பாதுகாப்பு குறைக்கப்பட்டு தற்போது அவருக்கு X பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பா.ஜ.க-வைச் சேர்ந்த இரண்டு முன்னாள் அமைச்சர்களான ஏக்நாத் காட்சே மற்றும் ராம் ஷிண்டே ஆகியோரின் பாதுகாப்புகள் குறைக்கப்பட்டுள்ளன.

மகாராஷ்டிராவில் முன்னதாக நடந்த பா.ஜ.க ஆட்சியின்போது அந்தக் கட்சியைச் சேர்ந்த பல தலைவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அவை அனைத்தும் வரும் நாள்களில் குறைக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.