Published:Updated:

`அவரின் முகத்தைக்கூட நாங்கள் பார்த்ததில்லை!' -சஜ்ஜனாரின் மறுபக்கத்தால் நெகிழும் கேரளக் குடும்பம்

சஜ்ஜனார் ஐ.பி.எஸ்
சஜ்ஜனார் ஐ.பி.எஸ்

`` என் மகளுக்கு ஒரு கண்ணில் பார்வை பறிபோனாலும் அவள் வலியில்லாத வாழ்க்கையை வாழ்கிறாள். இதற்கு சஜ்ஜனார் சார்தான் காரணம்.''

தெலங்கானாவில் திஷா கொலை வழக்கில் தொடர்புடைய நான்கு குற்றவாளிகளும் என்கவுன்டர் செய்யப்பட்டனர். இந்த என்கவுன்டர் சம்பவத்துக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் குரல்கள் எழுந்துள்ளன. சைபராபாத் கமிஷனர் சஜ்ஜனார் ஒரு என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட். இதனால், திஷா கொலையாளிகள் திட்டமிட்டு என்கவுன்டரில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால், 'சட்டம் தன் கடைமையைச் செய்தது' என்று சஜ்ஜனார் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, சஜ்ஜனாரின் இளகிய மனம் குறித்த செய்தி ஒன்றும் வெளியாகியுள்ளது.

குழந்தையை செகந்திராபாத்துக்கு அனுப்பி வையுங்கள், நான் பார்த்துக் கொள்கிறேன்.
சஜ்ஜனார் ஐ.பி.எஸ்.

எர்ணாகுளம் அருகே பிரவம் பகுதியைச் சேர்ந்தவர் சிறுமி கிருஷ்ணா. குழந்தையாக இருந்தபோது புற்றுநோய் காரணமாக கிருஷ்ணாவின் வலதுகண்ணின் பார்வை மங்கத் தொடங்கியது. கடந்த வருடம் நோய் தீவிரமானது. செகந்திராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில்தான் இதற்கான சிகிச்சையளிக்க வசதி உள்ளது. எனவே, குழந்தையை அங்கே கொண்டு செல்லும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

கிருஷ்ணாவின் தந்தை பாஜூ, செகந்திராபாத் கொண்டு சென்று சிகிச்சையளிக்கப் பணம் இல்லாமல் தவித்தார். இதுகுறித்த தகவல்கள் வாட்ஸ்அப்பில் பரவியுள்ளன. குழந்தை புற்றுநோயால் அவதிப்படுவது குறித்து எர்ணாகுளம் ஐ.ஜி ஸ்ரீஜித்துக்கும் தகவல் எட்டியது. எர்ணாகுளம் ஐ.ஜி ஸ்ரீஜித் அப்போது செகந்திரபாத் கமிஷனராக இருந்த சஜ்ஜனாரின் பேட்ச்மேட். குழந்தையின் நிலை குறித்து ஸ்ரீஜித், சஜ்ஜனாருக்கு எடுத்துரைத்தார். 'உடனடியாக, குழந்தையை செகந்திராபாத்துக்கு அனுப்பி வையுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன் 'என்று மறுமுனையில் இருந்து பதில் வந்தது.

`அதிகாலை விசாரணை; சம்பவ இடத்தில் நடந்தது என்ன?' -என்கவுன்டரை விவரித்த சஜ்ஜனார் ஐ.பி.எஸ் #DishaCase

தொடர்ந்து, தந்தை பாஜூ குழந்தை கிருஷ்ணாவுடன் செகந்திராபாத் சென்றார். இவர்கள் அங்கு செல்வதற்குள் அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருந்தன. அப்போலோ டாக்டர்களிடமும் சஜ்ஜனார் அனைத்து விவரங்களையும் கூறியிருந்தார். 'முடிந்ததைக் கொடுக்கச் சொல்லுங்கள்' என்று மருத்துவமனை தரப்பில் கூறிவிட்டனர். செகந்திராபாத் ரயில் நிலையத்தில், பாஜூ குழந்தையுடன் இறங்கியதும், அவர்களை அழைத்துச் செல்ல காருடன் டிரைவர் காத்திருந்தார்.

கூடவே, மலையாள மொழி தெரிந்த உதவியாளரையும் சஜ்ஜனார் அனுப்பியிருந்தார். காரில் ஏறி மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் மிகப் பெரிய ஹோட்டல் ஒன்றில் கார் நின்றது. பாஜூவிடம் பேசிய உதவியாளர், 'இந்த ஹோட்டலில் ரெஃப்ரெஷ் செய்துகொண்டு உணவு அருந்திவிட்டுத்தான் செல்ல வேண்டும் எனக் கமிஷனர் கூறியிருக்கிறார், காரைவிட்டு இறங்கி வாருங்கள்' என்று அழைத்துள்ளார். ஹோட்டலின் பிரமாண்டத்தைப் பார்த்து பயந்துபோன பாஜூ தாங்கள் ஏற்கெனவே சாப்பிட்டுவிட்டதாகப் பொய் சொல்லியுள்ளார்.

சஜ்ஜனார்
சஜ்ஜனார்

தொடர்ந்து, மருத்துவமனையில் குழந்தை கிருஷ்ணாவுக்கு அறுவைசிகிச்சை நடந்தது. அதற்குள், அறக்கட்டளை ஒன்றை அணுகி குழந்தையின் மருத்துவச் செலவுகளை ஏற்றுக் கொள்ளுமாறு கமிஷனர் சஜ்ஜனார் கேட்டுக்கொண்டார். குழந்தை அறுவைசிகிச்சை முடிந்து நல்லபடியாக வீடு திரும்பியது. எனினும், சில மாதங்களில் கிருஷ்ணாவின் வலது கண் முற்றிலுமாகப் பார்வை இழந்தது.

தற்போது, மீண்டும் சஜ்ஜனாரின் பெயர் மீடியாக்களில் அடிபட்டுள்ளதால் கிருஷ்ணாவின் தந்தை பாஜூ கேரள மீடியாக்களிடம் இந்த விஷயத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும், 'நாங்கள் அவரின் முகத்தைக்கூட பார்த்ததில்லை. சந்திக்கவில்லையென்றாலும், எங்களை உறவினர்கள்போல அவரின் உதவியாளர்கள் நடத்தினர். என் மகளுக்கு ஒரு கண்ணில் பார்வை பறிபோனாலும் அவள் வலியில்லாத வாழ்க்கையை வாழ்கிறாள். இதற்கு சஜ்ஜனார் சார்தான் காரணம்'' என்று நெகிழ்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு