Published:Updated:

மகாராஷ்டிரா: அமைச்சர் நவாப் மாலிக்மீது சமீர் வான்கடே தந்தை தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தின் கீழ் புகார்

மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக்மீது, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடேயின் தந்தை தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தின் கீழ் போலீஸில் புகார் செய்துள்ளார்.

மும்பையில் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரியாக இருப்பவர் சமீர் வான்கடே. நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான், மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் மருமகன் சமீர் கான் ஆகியோரைக் கைதுசெய்தவர். இந்தக் கைதுச் சம்பவங்களால் சர்ச்சையிலும் சிக்கியிருக்கிறார். அதிகாரி சமீர் வான்கடேமீது, அமைச்சர் நவாப் மாலிக் அடுக்கடுக்கான புகார்களைத் தெரிவித்துவருகிறார். அதோடு, சமீர் வான்கடேயின் மைத்துனர் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டதாகவும் நவாப் மாலிக் தெரிவித்திருக்கிறார். மேலும் சமீர் வான்கடே பிறப்பால் முஸ்லிமாக இருந்துவிட்டு, தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் வேலைவாய்ப்பு பெற்றதாகவும் நவாப் மாலிக் குற்றம்சாட்டியிருந்தார்.

சமீர் வான்கடே மீதான தொடர் புகார்கள் காரணமாக ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் தொடர்பான வழக்கு விசாரணையிலிருந்து சமீர் வான்கடே விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

நவாப் மாலிக்
நவாப் மாலிக்

இதற்கிடையே, அமைச்சர் நவாப் மாலிக்மீது, வான்கடேயின் தந்தை தயாதேவ் வான்கடே போலீஸில் புகார் செய்துள்ளார். அதில், `நவாப் மாலிக் எங்களது சாதி குறித்து என்மீதும், என் குடும்பத்தினர் மீதும் தவறான தகவல்களைப் பத்திரிகைகளுக்குக் கொடுத்துவருகிறார். பல சந்தர்ப்பங்களில் பத்திரிகைகள், டி.வி-க்களில் என்னைப் பற்றியும், என் குடும்பத்தைப் பற்றியும் தவறான மற்றும் இழிவான தகவல்களை நவாப் மாலிக் வெளியிடுகிறார். என்னிடம் அதற்கான வீடியோ ஆதாரம் இருக்கிறது.

போதைப்பொருள் விவகாரம்: `சாட்டையைச் சுழற்றும் சஞ்சய் சிங்; சிக்கலில் சமீர்?!' - என்ன நடக்கிறது?

தேவைப்படும் நேரத்தில் அதை விசாரணைக்காக வழங்குவேன். எனவே நவாப் மாலிக் மீது தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தின் கீழ் சட்டப் பிரிவு 503, 508, 499 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய வேண்டும்” என்று உதவி போலீஸ் கமிஷனரிடம் தயாதேவ் புகார் கொடுத்துள்ளார். இது தவிர தன் மகன் சமீர் வான்கடே குறித்து அவதூறாகப் பேசியதற்காக நவாப் மாலிக் மீது தயாதேவ் அவதூறு வழக்கு ஒன்றையும் கோர்ட்டில் தொடர்ந்துள்ளார். அதில் ரூ. 1.25 கோடி மானநஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று தனது மனுவில் குறிப்பிட்டிருக்கிறார். இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி நவாப் மாலிக்குக்கு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு