Published:Updated:

`பாஜக சிவசேனாவை அடிமைபோல் நடத்தியது!'- சிவசேனா எம்.பி.சஞ்சய் ராவத்!

sanjay raut
sanjay raut

சிவசேனாவை பாஜக அடிமைபோல் நடத்தியதாக சிவசேனா எம்.பி.சஞ்சய் ராவத் குற்றம் சாட்டியுள்ளார்.

மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் கூட்டணி அரசு ஆட்சியில் இருக்கிறது. கடந்த 2019-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் சிவசேனாவும், பாஜகவும் கூட்டணி அமைத்துத்தான் போட்டியிட்டன. ஆனால் தேர்தலில் பாஜக சிவசேனாவை விட அதிகப்படியான இடங்களில் வெற்றி பெற்றது. அப்படி இருந்தும் தங்களுக்கு இரண்டரை ஆண்டு முதல்வர் பதவி வேண்டும் என்று சிவசேனா அடம்பிடித்தது. இதனால் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியோடு சேர்ந்து சிவசேனா ஆட்சியமைத்துள்ளது. இதற்கு முன்பு இருந்த ஆட்சி பாஜக தலைமையில் நடந்தது.

sanjay raut
sanjay raut

இதில் கூட்டணி கட்சியாக சிவசேனா இருந்தது. சிவசேனா கேட்ட எந்த முக்கிய அமைச்சர் பதவியும் பாஜக கொடுக்க மறுத்துவிட்டது. இரு கட்சிகளும் ஆட்சியில் இருந்த ஐந்து ஆண்டில் பாஜக தங்களை அடிமைபோல் நடத்தியதாக சிவசேனா குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக சிவசேனா செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் ஜல்காவ் என்ற இடத்தில் சிவசேனா தொண்டர்கள் மத்தியில் பேசுகையில் இதனை தெரிவித்தார். இதில் அவர் மேலும் பேசுகையில் கூறியதாவது:" 2014ம் ஆண்டில் இருந்து 2019ம் ஆண்டு வரை பாஜக அரசில் சிவசேனா பங்கேற்று இருந்த போது சிவசேனாவை பாஜக அடிமை போல் நடத்தியது. அதோடு எங்களது ஆதரவில் ஆட்சி நடத்திக்கொண்டே அரசியல் ரீதியாக சிவசேனாவை அடியோடு ஒழிக்கவும் பாஜக முயற்சி மேற்கொண்டது.

நான் எப்போதும் மகாராஷ்டிராவில் சிவசேனாவை சேர்ந்தவர்தான் முதல்வராக இருக்கவேண்டும் என்று நினைப்பவன். இப்போது மாநில தலைமை சிவசேனாவிடம் இருக்கிறது" என்று கூறினார். பாஜகவின் தேவேந்திர பட்நாவிசுடன் இணைந்து அஜித்பவார் ஆட்சி அமைத்தது குறித்து கூறிய சஞ்சய் ராவத், "அந்த ஆட்சி 80 மணி நேரம்கூட நீடிக்கவில்லை. இப்போது அஜித்பவார் மகாவிகாஷ் அகாடி அரசில் வலுவான செய்தித்தொடர்பாளராக இருக்கிறார். அரசியலில் எதுவும் நடக்கலாம். துணை முதல்வராக இருக்கும் அஜித்பவார் இப்போது முதல்வர் உத்தவ்தாக்கரேயுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார்" என்றும் அவர் குறிப்பிட்டார். சமீபத்தில் உத்தவ்தாக்கரே டெல்லி சென்ற போது பிரதமர் நரேந்திரமோடியை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பை தொடர்ந்து சஞ்சய் ராவத் பிரதமர் நரேந்திரமோடியை வெகுவாக புகழ்ந்து பேசினார். இதனால் மீண்டும் சிவசேனா பாஜகவுடன் இணைந்து ஆட்சியமைக்குமா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் தற்போது இவ்வாறு கூறிள்ளார் சஞ்சய் ராவத்.

அடுத்த கட்டுரைக்கு