கடந்த ஆண்டு, பீகார் மாநிலம் சசாரத்தில் உள்ள சதார் மருத்துவமனையில், கர்சேருவா பகுதியைச் சேர்ந்த ரிங்கு குமாரி (22) என்ற நோயாளிக்கு மொபைல் ஃபிளாஷ் வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுவது முழுவதையும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் வீடியோவாகப் பதிவுசெய்து வலைதளங்களில் பதிவிட்டனர்.
அப்போது அது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அப்போதே மருத்துவர்களிடம் விளக்கம் கேட்டபோது ,"சிகிச்சையின்போது திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஜெனரேட்டர் ஆபரேட்டரால் உடனடியாக ஜெனரேட்டரை இயக்க முடியவில்லை. அதனால் மொபைலின் ஃபிளாஷ் வெளிச்சத்தைப் பயன்படுத்தி மருத்துவம் பார்க்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இது மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தினரின் தவறு இல்லை. அதன் பிறகு, சிறிது நேரம் கழித்து ஜெனரேட்டர் இயக்கப்பட்டது" என விளக்கமளித்தனர்.

ஆனால் அதே போன்ற சம்பவம், அதே மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் மீண்டும் நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், நோயாளிக்குச் சிகிச்சை அளிக்க, மொபைல் ஃபிளாஷ் ஒளியைப் பயன்படுத்தவேண்டிய நிலைக்கு மருத்துவர்கள் தள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாகப் பிரபல செய்தி நிறுவனத்திடம் பேசிய சதார் மருத்துவமனையின் மருத்துவர் பிரிஜேஷ், "மருத்துவமனையில் மின்சாரம் இல்லாத நிலையில் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க மொபைல் ஃபிளாஷ் பயன்படுத்தப்பட்டது. இங்கே மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்படுகிறது. என்ன பிரச்னை என்று தெரியவில்லை. நாங்கள் மின்சாரமின்மையால் கடும் பிரச்னைகளை எதிர்கொள்கிறோம்" என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மருத்துவமனையில் மின்சாரம் இன்மையால் நோயாளிகள் அசௌகரியங்களைச் சந்தித்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மக்களின் உயிரைக் காக்கக்கூடிய மருத்துவமனையில் மின்சாரம் இல்லாத நிலை என்பது பொறுப்பற்ற தன்மையைப் பிரதிபலிக்கிறது என சமூக வலைதளங்களில் மக்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.