Published:Updated:

`கேரளா தங்கம் கடத்தல்; பாலபாஸ்கர் கார் விபத்து’ - பகீர் கிளப்பும் தந்தை சோபி

பாலபாஸ்கர் - ஸரித்
பாலபாஸ்கர் - ஸரித்

கேரள தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸரித்தை, தன் மகன் விபத்தின்போது பார்த்ததாக பாலபாஸ்கரின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.

கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் பாலபாஸ்கர் 2018-ம் ஆண்டு தன் குடும்பத்தினருடன் வடக்குநாதர் கோயிலுக்குச் சென்று திரும்பும் வழியில் இவரது கார் விபத்துக்குள்ளானது. அதில் பாலபாஸ்கரின் குழந்தை அதே நாளில் உயிரிழந்தது, பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட இசையமைப்பாளர் ஒரு வார தீவிர சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்தார். அவரின் மனைவியும் கார் ஓட்டுநரும் காயங்களுடன் சிகிச்சை பெற்றுக் குணமடைந்தனர்.

பாலபாஸ்கர்
பாலபாஸ்கர்

முதலில் இந்தச் சம்பவம் விபத்தாக மட்டுமே பார்க்கப்பட்டது, அடுத்த 7 மாதங்களுக்குப் பின்னர் தங்கம் கடத்தல் தொடர்பாகத் திருவனந்தபுரம் விமானநிலையத்தில் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் பிரகாஷன் தம்பி மற்றும் விஷ்ணு ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர் பிரகாஷன் தம்பியிடம் நடந்த விசாரணையில், தான் முன்னதாக இசையமைப்பாளர் பாலபாஸ்கரிடம் மேலாளராகப் பணிபுரிந்ததாகவும் விஷ்ணு பாலபாஸ்கருக்கு நண்பர் என்றும் கூறியுள்ளார். இதனால் அவரது உயிரிழப்பு விபத்து இல்லை கொலை எனப் பாஸ்கரின் தந்தை சோபி தெரிவித்திருந்தார்.

Vikatan

அப்போது, ``பாலபாஸ்கர் விபத்தில் உயிரிழந்தார் என்றுதான் அனைவரும் நம்பிக்கொண்டு இருக்கிறோம். ஆனால், அவனுடன் பணிபுரிந்தவர்கள் தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதைப் பார்த்தால் என் மகன் கொலை செய்யப்பட்டானா எனச் சந்தேகம் எழுகிறது. பாஸ்கர் இறுதியாக பிரகாஷனுடன்தான் போனில் பேசியுள்ளார். விபத்துக்குப் பிறகு சம்பவ இடத்தை முதலில் அடைந்தது பிரகாஷின் தம்பியும் விஷ்ணுவும்தான். பணத்துக்காக இவர்கள் என் மகனைக் கொலை செய்திருப்பார்களோ எனத் தோன்றுகிறது’ எனக் கூறி தன் மகன் விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்தார் பாலபாஸ்கரின் தந்தை. இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தங்க கடத்தல்
தங்க கடத்தல்
மாதிரி புகைப்படம்

இந்நிலையில் சமீபத்தில் கேரளாவின் திருவனந்தபுரம் யு.ஏ.இ தூதரக பார்சல் வழியாகத் தங்கம் கடத்தப்பட்ட வழக்கு இந்தியா முழுவதும் பெரும் கிளப்பியுள்ளது. முதன்முதலில் திருவனந்தபுரம் விமானநிலையத்தில் பார்சலை பெற வந்த ஸரித் கைது செய்யப்பட்டார். பின்னர், இதில் தொடர்புடைய பல முக்கிய புள்ளிகள் சிக்கியதால் இந்த வழக்கு பெரும் சர்ச்சைக்குள்ளானது.

கேரளா: யு.ஏ.இ தூதரகப் போலி எம்பளம், சீல்; தீவிரவாத லிங்க்! என்.ஐ.ஏ கஸ்டடியில் ஸ்வப்னா

இதற்கிடையில் இந்தத் தங்கம் கடத்தல் கும்பலுக்கும் தன் மகனின் இறப்புக்கும் தொடர்பு இருப்பதாக பாலபாஸ்கரின் தந்தை சோபி தற்போது குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாகப் பேசியுள்ள அவர் , ``என் மகன் உயிரிழப்புக்குப் பிறகு தங்கக் கடத்தலில் இருவர் கைது செய்யப்பட்டனர். அப்போதே பாலபாஸ்கர் மரணத்தில் எங்களுக்குச் சந்தேகம் வந்தது. அந்த வழக்கு விசாரணையில் தங்கம் கடத்தலில் தொடர்புடைய சிலரின் புகைப்படங்களை எங்களிடம் காண்பித்தனர், அதில் விபத்து நடந்தபோது அங்கு இருந்தவர்களை நாங்கள் அடையாளம் காட்டினோம்.

ஸரித்
ஸரித்

ஆனால், பாலபாஸ்கர் கார் விபத்து நடந்தபோது அந்த இடத்தில் ஸரித்தும் (தற்போதைய தங்கக் கடத்தலில் கைது செய்யப்பட்டுள்ளவர்) இருந்தார். முன்னதாக காவலர்கள் காட்டிய புகைப்படங்களில் ஸரித் படம் இல்லை தற்போது அவர் கைது செய்யப்பட்டு அவரது முகம் பிரபலமாகத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானபோதுதான் ஸரித்தை நாங்கள் அடையாளம் கண்டோம். எனவே, என் மகன் இறப்புக்கும் தங்கக் கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. பணத்துக்காக சிலர் என் மகனை கொலை செய்திருக்கலாம். இது தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

யு.ஏ.இ தங்கக் கடத்தல் விவகாரத்தில் நாளுக்கு நாள் புதிய தகவல் வெளியாகி கேரளா உட்பட மொத்த இந்தியாவையும் கவனம் ஈர்த்து வரும் இந்த நேரத்தில் பாலபாஸ்கரின் தந்தை தெரிவித்துள்ள குற்றச்சாட்டு அனைவரையும் அதிர வைத்துள்ளது.

கேரளா தங்கம் கடத்தல்: `மலப்புரம் கனெக்‌ஷன்; பயணிகள் விமானம்!’ - அதிரவைக்கும் பின்னணி
அடுத்த கட்டுரைக்கு