Published:Updated:

`இனி மரங்களை வெட்டக்கூடாது!' - ஆரே மெட்ரோ விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அதிரடி

மும்பை ஆரே பகுதியில் உள்ள மரங்கள் வெட்டப்படுவது தொடர்பான விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு வழங்கியுள்ளது.

ஆரே போராட்டம்
ஆரே போராட்டம் ( twitter )

மும்பையின் ஆரே வனப்பகுதிக்கு அருகில் பணிமனைகள் அமைக்கும் பணிகளில் தீவிரம் காட்டிவருகிறது, மும்பை மெட்ரோ நிர்வாகம். ஆனால், இந்தப் பணிமனைகளுக்காக ஆரே வனப்பகுதியில் உள்ள 2,702 மரங்களை வெட்டவேண்டிய நிலை ஏற்பட்டது. மரங்களை வெட்டுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Aarey  colony
Aarey colony
Twitter

ஆனால், அதையும் மீறி மெட்ரோ பணிகள் தொடர்ந்து நடைபெற்றதால், இதுதொடர்பாக ஆரே பகுதி மக்கள் மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தனர். வழக்கு விசாரணையில், `மெட்ரோ ரயில் கட்டுமானத்துக்கு மும்பை மாநகராட்சி நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற்றுத்தான் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. எனவே, மரங்களை வெட்டத் தடைவிதிக்க முடியாது. மேலும், ஆரே பகுதியை வனப்பகுதியாக அறிவிக்கும் உரிமை இந்த நீதிமன்றத்துக்கு இல்லை. இந்த விவகாரத்தில், பசுமை தீர்ப்பாயம்தான் முடிவெடுக்க வேண்டும்’ எனத் தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம்.

தீர்ப்பு வெளியான அடுத்த சில மணி நேரங்களில், ஆரேவில் மரம் வெட்டும் பணிகளில் அதிகாரிகள் தீவிரம் காட்டினர். இதை அப்பகுதி மக்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு, தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மூன்றாவது நாளாக இன்றும் ஆரே பகுதி பரபரப்பாகக் காணப்படுகிறது.

Aarey Protest
Aarey Protest
Twitter

ஆரே வனப்பகுதியில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு மும்பை மட்டுமல்லாது, மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மக்களும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சிறிய அளவில் தொடங்கிய இந்தப் போராட்டம், தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இந்நிலையில், ஆரே பகுதியில் மரங்கள் வெட்டப்படுவது தொடர்பாக, மும்பையைச் சேர்ந்த சில மாணவர்கள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு நேற்று கடிதம் எழுதியுள்ளனர். இதைப் பரிசீலித்த நீதிமன்றம், தாமாக முன்வந்து இந்த வழக்கை ஏற்று நடத்த முடிவுசெய்தது. உச்ச நீதிமன்றத்துக்கு தொடர் விடுமுறைகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று சிறப்பு அமர்வு முன்பு அவசர வழக்காக விசாரிக்கப்பட்டது.

Aarey  colony
Aarey colony
Twitter

நீதிபதி அருண் மிஸ்ரா அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், ‘ஆரே நகர்ப் பகுதி முக்கிய சூழ்நிலை மண்டலமாக இருந்ததா இல்லையா என மகாராஷ்டிரா அரசு கூறவேண்டும். அது சூழ்நிலை மண்டலம் இல்லை என்பதற்கான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

ஆரே பகுதியில், இனி மரங்களையும் வெட்டக் கூடாது. இந்த விவகாரம் தொடர்பாகக் கைதுசெய்யப்பட்டவர்களின் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். அவர்களில் இன்னும் விடுதலை செய்யப்படாமல் உள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” என நீதிபதி உத்தரவிட்டார். இவை அனைத்தையும் ஏற்றுக்கொண்ட மகாராஷ்டிரா மாநில அரசின் வழக்கறிஞர், `இனி மரங்களை வெட்ட மாட்டோம்' என நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்தார்.

Supreme Court
Supreme Court

`இந்த வழக்கில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தையும் சேர்க்க வேண்டும். மேலும், ஆரே பகுதியில் நடக்கும் நிலவரங்களைத் தொடர்ந்து கவனிக்க வேண்டும்' எனக் கூறி வழக்கை வரும் அக்டோபர் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.