Published:Updated:

`40 நாள்கள் தொடர் விசாரணை; 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு?' - அயோத்தி வழக்கில் சனிக்கிழமை தீர்ப்பு

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு நாளை (09-11-2019) தீர்ப்பு வழங்குகிறது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை 3 அமைப்புகள் சொந்தம் கொண்டாடி வருகின்றன. இதுதொடர்பான வழக்கில் அயோத்தி நிலத்தை மூன்றாகப் பிரிக்க வேண்டும் என அலகாபாத் உயர் நீதிமன்றம் 2010-ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது.

அயோத்தி வழக்கு
அயோத்தி வழக்கு

ராம் லல்லா, சன்னி வக்பு வாரியம் மற்றும் நிர்மோகி அஹாரா ஆகிய 3 அமைப்புகளுக்கும் அந்த நிலத்தை சரிசமமாகப் பிரித்து வழங்க வேண்டும் என்று சொன்னது அலகாபாத் உயர் நீதிமன்றம். இந்தத் தீர்ப்பை எதிர்த்து 14 அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் மத்தியஸ்தம் செய்ய உச்ச நீதிமன்றம் நியமித்த குழுவின் முயற்சி தோல்வியடைந்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, இந்த வழக்கை 40 நாள்கள் தொடர் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. பல்வேறு தரப்பு வாதங்களையும் கேட்டநிலையில், கடந்த அக்டோபர் 16-ம் தேதி தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

`நெருங்கும் அயோத்தி தீர்ப்பு!’ - மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மோடி பேசியது என்ன?

இந்தநிலையில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு நாளை காலை 10.30 மணிக்குத் தீர்ப்பளிக்கிறது. இதனால், உத்தரப்பிரதேச மாநிலம் மட்டுமல்லாது நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது.