Published:Updated:

உச்ச நீதிமன்ற வரலாற்றில் அதிகநாள்கள் விசாரிக்கப்பட்ட 2வது வழக்கு! - முடிவுக்கு வரும் அயோத்தி வழக்கு

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்குகிறது.

அயோத்தி
அயோத்தி ( ANI )

அயோத்தியில் உள்ள நிலத்தை நிர்மோகி அஹோரா, உத்தரப்பிரதேச சன்னி வக்பு வாரியம் மற்றும் ராம்லல்லா விரஜ்மான் ஆகிய 3 அமைப்புகள் சொந்தம் கொண்டாடின. இதுதொடர்பான வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010ம் ஆண்டு செப்டம்பர் 30ல் தீர்ப்பு வழங்கியது. அதில், குறிப்பிட்ட 3 அமைப்புகளும் அந்த நிலத்தை சரிசமமாகப் பிரித்துக்கொள்ள வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷன் மற்றும் எஸ்.அப்துல் நசீர் ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. நிலம் தொடர்பாக மத்தியஸ்தம் செய்ய ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், ஓய்வுபெற்ற நீதிபதி எஃப்.எம்.ஐ.கலிஃபுல்லா மற்றும் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது. ஆனால், அந்தக் குழுவின் மத்தியஸ்தம் செய்யும் முயற்சி தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து, வழக்கு கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி முதல் தினசரி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தொடர்ச்சியாக 40 வேலைநாள்களில் விசாரணை நடைபெற்றது. உச்ச நீதிமன்றம், அக்டோபர் 18ம் தேதிக்குள் அனைத்துத் தரப்பு வாதங்களையும் முடித்துக் கொள்ள வேண்டும் என்று வேகம் காட்டியது. தொடர்ச்சியாக 40 நாள்கள் நடந்த விசாரணை உச்ச நீதிமன்றம் விதித்த கெடுவான அக்டோபர் 18ம் தேதிக்கு 2 நாள்கள் முன்னதாகவே, அதாவது அக்டோபர் 16ம் தேதியே முடிந்தது. அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிந்தநிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்.

அயோத்தி
அயோத்தி

உச்ச நீதிமன்ற வரலாற்றில் அதிக நாள்கள் விசாரிக்கப்பட்ட இரண்டாவது வழக்கு என்ற பெருமையை இந்த வழக்கு பெற்றது. புகழபெற்ற கேசவானந்தா பாரதி வழக்கை உச்ச நீதிமன்றம் 68 நாள்கள் விசாரித்தது. கடந்த 1972ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி தொடங்கிய விசாரணை அடுத்த ஆண்டான 1973ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி வரை நீடித்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல், வேலைநாள்கள் அல்லாத தினத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவது மிகவும் அரிது. அந்தவகையில் வழக்கின் முக்கியத்துவம் கருதி, உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குவதாக அறிவித்திருக்கிறது.

தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நவம்பர் 17ம் தேதி ஓய்வுபெற இருக்கிறார். இதனால், அதற்குள் அயோத்தி வழக்கில் தீர்ப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தநிலையில், உத்தரப்பிரதேச தலைமைச் செயலாளர் ராஜேந்திரகுமார் திவாரி, காவல்துறை டிஜிபி ஓம்பிரகாஷ் சிங் ஆகியோருடன் நேற்று மாலை ஆலோசனை நடத்தினார். தலைமை நீதிபதியிடம் மாநிலத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து இருவரும் விளக்கியதாகக் கூறப்படுகிறது.

`நெருங்கும் அயோத்தி தீர்ப்பு!’ - மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மோடி பேசியது என்ன?

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உத்தரப்பிரதேசத மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்துக் கல்விநிலையங்களும் நவம்பர் 9 முதல் 11ம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதேபோல், ஜம்மு காஷ்மீர், கர்நாடகா மற்றும் மத்தியப்பிரதேசத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியிலும் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும், பல தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது சனிக்கிழமை என்பதால், விடுமுறை அறிவிக்குமாறு தனியார் பள்ளிகளை அரசு அறிவுறுத்தியிருக்கிறது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக அயோத்தி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு வரும் டிசம்பர் 10ம் தேதிவரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. `தீர்ப்பு எதுவாக இருந்தாலும் யாருக்கும் வெற்றியும் இல்லை தோல்வியும் இல்லை' என்று குறிப்பிட்டிருக்கும் பிரதமர் மோடி, நாட்டு மக்கள் அனைவரும் அமைதிகாக்கும்படி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்

அதேபோல், பல்வேறு தலைவர்களும் அமைதிகாக்கும்படி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். ``மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டியது அரசின் கடமை என்று குறிப்பிட்டுள்ள உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருக்கிறார்.