Published:Updated:

`2 முறை தொடர்புகொண்டோம்; யாரும் வரவில்லை!’ - தாயின் உடலை வாங்க மறுத்த மகன் #Corona

இறப்பு
இறப்பு

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தாயின் உடலை மகன் வாங்க மறுத்துள்ள சம்பவம் பஞ்சாபில் நடந்துள்ளது.

கொரோனா வைரஸ் இந்தியா உள்பட மொத்த உலகத்தையும் ஆட்டுவித்துக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் மட்டும் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,856 - ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 133 -ஆகவும் உள்ளது. இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு அதிகாரிகள் முன்னிலையில் மிகுந்த பாதுகாப்புடன் இறுதிச் சடங்கு செய்யப்படுகிறது. இந்த நிலையில் பஞ்சாபில் இறந்த ஒரு மூதாட்டியின் உடலை அவரது மகன் வாங்க மறுத்துள்ளார்.

கொரோனா
கொரோனா

பஞ்சாப் மாநிலம் லுதியானா பகுதியைச் சேர்ந்த 69 வயதான மூதாட்டி ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு கடந்த மார்ச் 31-ம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்துள்ளார். மருத்துவமனையின் அனைத்து நடைமுறைகளும் முடிந்த பிறகு மாவட்ட நிர்வாகம் தரப்பிலிருந்து உயிரிழந்தவரின் உடலைக்கொண்டு செல்லும்படி அவரது குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

`9.25-க்கு அட்மிட்; 11.45-க்கு மரணம்... இறந்தபிறகு கொரோனா உறுதி’- அரசு மருத்துவமனையில் நடந்தது என்ன?

ஆனால் இறந்த தாயின் உடலை ஏற்க மறுத்த மகன் அனைத்து இறுதிச் சடங்குகளையும் அரசு அதிகாரிகளையே செய்யச் சொல்லியுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தாயால் தன் குடும்பத்தில் உள்ள பிறருக்கும் வைரஸ் பரவ வாய்ப்புள்ளது என்று அச்சமடைந்த மகன் தாயின் உடலை வாங்க மறுத்துள்ளார். இது பற்றிப் பேசியுள்ள அந்நகரின் கூடுதல் துணை ஆணையர் இக்பால் சிங் சந்து, “கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மூதாட்டியின் உடலை வாங்க உறவினர்கள் யாருமே, ஏன் மகன் கூட வரவில்லை. இது எங்களுக்குப் பெரும் அதிர்ச்சியாக உள்ளது.

வைரஸ்
வைரஸ்

இறந்தவரின் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு இறுதிச் சடங்கு செய்யத் தேவையான அனைத்துப் பாதுகாப்பு உடைகள், கவசங்கள் போன்றவற்றை நாங்கள் வழங்குகிறோம் எனத் தெரிவித்தோம். இருந்தும் மூதாட்டியின் மகன் அதை ஏற்கவில்லை. நோயாளி இறந்த பிறகு இரண்டு முறை அவரது குடும்பத்தினரைத் தொடர்புகொண்டு பேசினோம். ஆனால் ஒருவரும் முறையாகப் பதில் கூறவில்லை. ‘அனைத்துச் சடங்குகளையும் நீங்களே செய்துவிடுங்கள்’ என மூதாட்டியின் மகன் கூறிவிட்டார். இறுதியாக நேற்று நள்ளிரவு மாவட்ட அதிகாரிகளே பணியாட்களின் உதவியுடன் மூதாட்டிக்கு இறுதிச் சடங்கு செய்தனர். இதை இறந்தவரின் குடும்பத்தினர் சிலர் 100 மீட்டர் தொலைவிலிருந்து வேடிக்கை பார்த்தனர்” எனத் தெரிவித்துள்ளார். வைரஸ் தொற்றுக்குப் பயந்து இறந்த தாயின் உடலை மகனே பெற மறுத்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு