Published:Updated:

`அந்தத் தட்டில் அனைவரும் உண்பார்களே..!’ - உ.பி பள்ளியில் சாதிப் பாகுபாடு? #Shocking

சத்யா கோபாலன்

உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஒரு பள்ளியில், மாணவர்களிடையே பாகுபாடு இருப்பது பெரும் சர்சையாகியுள்ளது.

Ballia school
Ballia school ( ANI )

கல்வியறிவு, மன வளர்ச்சி, நல்லொழுக்கம், பாகுபாடின்மை, திறமை போன்ற பலவற்றை குழந்தைகளுக்கு கற்பிக்கத் தொடங்கப்பட்டதுதான் பள்ளிக்கூடங்கள். அந்தக் காலத்தில் சாதிகளுக்கிடயேயான ஏற்றத்தாழ்வு, பள்ளிகளிலும் கடுமையாகப் பிரதிபலித்தது. பட்டியலினத்தைச் சேர்ந்த குழந்தைகள் மாற்று சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள் படிக்கும் பள்ளியில் படிக்கக் கூடாது. அப்படி படித்தாலும் தரையில் அமர்ந்துதான் படிக்க வேண்டும். இந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றப்பட்டு, தற்போது அனைத்து சமூகத்தினரும் சமமாகக் கல்வி பயின்றுவருகின்றனர் என நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம்.

Ballia school
Ballia school
ANI

ஆனால், நாம் தற்போது வாழ்ந்துகொண்டிருக்கும் 21-ம் நூற்றாண்டிலும் ஆரம்ப, நடுநிலைப் பள்ளி மாணவர்கள் மத்தியிலும் சாதியப் பாகுபாடு காணப்படுகிறது. யாரோ ஒருவர் குழந்தைகளுக்கு இந்தப் பாகுபாடுகளைக் கற்பித்துக்கொண்டுதான் உள்ளனர். இதேபோன்ற ஒரு சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. அந்தக் குழந்தைகளின் வீடியோ இப்போது வைரலாகிவருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் பாலியா மாவட்டம் ராம்பூரில் உள்ள ஓர் அரசு ஆரம்பப் பள்ளியில், பட்டியலின மற்றும் பிற மாணவர்களுக்கு இடையே பாகுபாடு நிலவிவருகிறது. பிற மாணவர்கள், தங்கள் வீட்டில் இருந்து தட்டுகள் கொண்டுவந்து சத்துணவை வாங்கி தனியாக அமர்ந்து உண்கின்றனர். பட்டியலின மாணவர்கள், பள்ளியில் வழங்கும் தட்டில் உணவு வாங்கி தனியாக அமர்ந்து உண்கின்றனர். இந்தக். காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகி சர்ச்சையாகியுள்ளது.

Ballia school
Ballia school
ANI

``பள்ளியில் வழங்கப்படும் தட்டில் யார் வேண்டுமானாலும் உணவு உண்ணலாம். அதனால்தான், நாங்கள் தனியாக வீட்டில் இருந்து தட்டு கொண்டுவந்து உண்கிறோம்” எனப் பிற மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக நேற்று அம்மாவட்ட முதன்மை நீதிபதி நேரடியாக பள்ளிக்குச் சென்று ஆய்வு நடத்தியுள்ளார். இதுபற்றி நீதிபதி, ``பள்ளியில் பாகுபாடு இருபதற்கு எந்த அடிப்படை ஆதாரமும் கிடைக்கவில்லை. இருந்தாலும் இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Vikatan

ராம்பூர் ஆரம்பப் பள்ளி முதல்வர் குப்தா இது பற்றி பேசும்போது, ”குழந்தைகள் அனைவரும் இணைந்து இருக்க வேண்டும் என்றுதான் நாங்கள் அறிவுறுத்திவருகிறோம். ஆனால், நாங்கள் சென்ற அடுத்த நொடியே அவர்கள் மீண்டும் தனித்தனியாகச் சென்றுவிடுகிறார்கள். ஒருவேளை அந்த மாணவர்களின் வீட்டில் இப்படி கற்பித்திருக்கலாம். அனைவரும் சமம் என்றுதான் நாங்கள் கற்பிக்க முயல்கிறோம். ஆனாலும் பட்டியலின மாணவர்களுடன் பிற மாணவர்கள் இணைய மறுக்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.

மாணவர்கள் விவகாரம் சர்ச்சையானதைத் தொடர்ந்து, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பாலியா அரசுப் பள்ளியில் மாணவர்களுகிடையே பாகுபாடு நிலவுவதாக வெளியாகும் செய்தி வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இது, கண்டனத்துக்குரியது. இத்தகைய அருவருப்பான பாகுபாடு பார்பவர்கள்மீது மாநில அரசு உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கையினால் மற்றவர்கள் பாடம் கற்க வேண்டும். இந்த நிலை மீண்டும் வராமல் தடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.