Published:Updated:

`சுவர் ஏறிக் குதித்த கும்பல்; 40 மணி நேரம் அடைக்கப்பட்ட காவலர்!’ -டெல்லியில் சூறையாடப்பட்ட பள்ளிகள்

சூறையாடப்பட்ட பள்ளி
சூறையாடப்பட்ட பள்ளி ( Twitter )

டெல்லியில் கடந்த திங்கள்கிழமை நடந்த கலவரத்தில் அந்தப் பகுதியில் உள்ள மூன்று பள்ளிகளைக் கலவரக்காரர்கள் சூறையாடியுள்ளனர்.

மொத்த இந்தியாவையும் உலுக்கிக்கொண்டிருக்கும் டெல்லி கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38-ஐத் தொட்டுள்ளது. குடியுரிமைச் சட்டத்திருத்த ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடந்த மோதலில் இவை எதற்குமே தொடர்பில்லாத பலர் தங்கள் குடும்பத்தின் அன்புக்குரியவர்களை இழந்து தவித்து வருகின்றனர். இந்த கலவரம் தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும் இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சூறையாடப்பட்ட டெல்லி பள்ளி
சூறையாடப்பட்ட டெல்லி பள்ளி
Twitter

டெல்லி கலவரத்தில் ஈடுபட்டவர்கள் கண் மண் தெரியாமல் அனைத்தின் மீதும் கண்ணில் பட்ட அனைவர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். அமைதியாக இருக்கும் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு, கடைகள் எரிப்பு, கற்களால் தாக்குதல் என்று வடகிழக்கு டெல்லியையே போர்க்களமாக மாற்றியிருக்கிறார்கள். அப்படிச் சிலரால் கலவரப் பகுதியில் பூட்டப்பட்டிருந்த பள்ளி ஒன்று முற்றிலும் எரிந்து சாம்பலாகியுள்ளது.

டெல்லியில் கலவரம் நடந்த திங்கள்கிழமை அனைத்துப் பள்ளிகளிலும் தேர்வுகள் நடைபெற்றுள்ளன. கலவரம் தொடங்கும் முன்னரே மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாகத் தங்களின் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அன்றைய நாள் மாலை 4 மணிக்குப் பூட்டப்பட்டிருந்த பள்ளியின் கதவுகளை உடைத்துக்கொண்டு நுழைந்த நூற்றுக்கணக்கானவர்கள் மொத்தப் பள்ளிக்கும் தீவைத்து எரித்துள்ளனர். மாணவர்கள் அமரும் பலகைகளை உடைத்து அங்கிருந்த அவர்களின் புத்தகங்கள், கரும்பலகைகள், மின்விசிறிகள், மின் விளக்குகள் போன்ற அனைத்தையும் கொளுத்தியுள்ளனர்.

சூறையாடப்பட்ட பள்ளி
சூறையாடப்பட்ட பள்ளி
Twitter

தொடர்ந்து ஆசிரியர்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் லாக்கர்களை உடைத்து அதிலிருந்த ஃபைல்கள், மாணவர்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டர்கள், தலைமை ஆசிரியர் அறையில் இருக்கும் ஃபைல்கள் மாணவர்களின் மாற்றச் சான்றிதழ், பல முக்கிய கோப்புகள் போன்ற அனைத்தையும் ஒன்றுவிடாமல் எரித்து நாசமாக்கியுள்ளனர். இந்தச் சம்பவத்தினபோது பள்ளியில் காவலர் மட்டுமே அங்கு இருந்துள்ளார். நூற்றுக்கணக்கானவர்கள் அங்கு வந்ததைக் கண்டு அவர் பின் வாசல் வழியாகத் தப்பியோடியுள்ளார்.

`ஒரே இடத்தில் குவிந்த இரு தரப்பினர்; பாடல் மூலம் எதிர்ப்பு!’ - டெல்லியில் நடந்தது என்ன?

``சுமார் 250 முதல் 300 பேர் அனைத்துப் பகுதியிலிருந்தும் சுவரைத் தாண்டிக் குதித்து பள்ளிக்குள் நுழைந்தனர். காவலர் செய்வதறியாது அங்கிருந்து தப்பியுள்ளார். உள்ளே நுழைந்தவர்கள் மாணவர்கள் பயன்படுத்தும் அனைத்துப் பொருள்களையும் எரித்துச் சேதப்படுத்திவிட்டனர். இது மாணவர்களுக்கான தேர்வு நேரம், கலவரத்தன்று நடந்த தேர்வுத்தாள்களும் மொத்தமாக எரிந்துவிட்டன. பள்ளி எரியும் தகவல் அறிந்த நாங்கள் காவலர்களுக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் விஷயத்தைத் தெரிவித்தோம். ஆனால், யாரும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை. பள்ளிக்குத் தீவைக்கப்பட்டு நான்கு மணி நேரம் கழித்துதான் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். பள்ளியின் சுவர், கூரை ஆகியவையும் கடுமையாகச் சேதமடைந்துள்ளது. பள்ளி வளாகத்திலிருந்த மாணவர்களின் பேருந்துகளும் எரிக்கப்பட்டுள்ளன” என வேதனையுடன் தெரிவித்துள்ளார் பள்ளியின் காசாளர் நீது சதுர்த்தி.

சூறையாடப்பட்ட பள்ளி
சூறையாடப்பட்ட பள்ளி
Twitter

அருண் மார்டன் சீனியர் மேல்நிலைப் பள்ளியில் 3,000 மாணவர்கள் படித்துவந்துள்ளனர். மூன்று நாள்களாகப் பள்ளியிலிருந்து தொடர்ந்து புகை வந்துள்ளது, சேதமடையாமல் இருக்கும் பொருள்களைச் சேகரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பள்ளிக்கும் புத்தகங்களை இழந்த மாணவர்களுக்கும் தகுந்த நிதியுதவி வழங்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இது மட்டுமல்லாது அதே வடகிழக்கு டெல்லியில் உள்ள ராஜ்தானி மேல்நிலைப் பள்ளி மற்றும் டி.பி.ஆர் மேல்நிலைப் பள்ளி ஆகிய மேலும் இரண்டு பள்ளிகளும் கலவரக்காரர்களால் சூறையாடப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில் வடகிழக்கு டெல்லியில் மட்டும் அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதிலும் சேதமடைந்த இந்தப் பள்ளிகளை மீண்டும் திறக்க குறைந்த இரண்டு வாரங்கள் ஆகும் எனக் கூறப்படுகிறது. ``பள்ளி நடைபெற்றுக்கொண்டிருக்கும் நேரத்தில் சிலர் உள்ளே நுழைந்து அனைத்துப் பொருள்களையும் அடித்து நொறுக்கினர். தடுக்கச் சென்ற எங்களைக் கடுமையாகத் தாக்கி ஒரு ரூமில் வைத்துப் பூட்டிவிட்டனர். அந்தக் கும்பல் குழந்தைகளையும் தாக்கியது அனைவரும் பயந்து நடுங்கினர்.

சூறையாடப்பட்ட பள்ளி
சூறையாடப்பட்ட பள்ளி
Twitter

இது தொடர்பாகக் காவலர்களுக்குத் தகவல் தெரிவித்தும் சம்பவம் நடந்த திங்கள்கிழமை யாரும் வரவில்லை. மறுநாள்தான் வந்தனர். நான் மட்டும் சுமார் 40 மணி நேரமாக ரூமிலேயே அடைக்கப்பட்டிருந்தேன். என்னைக் கொன்றுவிடுவேன் என அந்தக் கும்பல் மிரட்டியது” எனக் கண்ணீர் மல்கக் கூறியுள்ளார் ராஜ்தானி பள்ளியின் காவலர். மாணவர்களுக்கான பொதுத் தேர்வுக்கு இன்னும் சில இரண்டு, மூன்று வாரங்களே உள்ள நிலையில் இந்தப் பள்ளிகள் சூறையாடப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு