Published:Updated:

`ஜாமியாவுக்குத் துப்பாக்கியுடன் வந்த பள்ளி சிறுவன்!' -அதிர்ச்சி கொடுத்த முகநூல் பதிவுகள்

சிறுவன்
News
சிறுவன்

``நான் உங்களுக்குச் சுதந்திரம் வழங்குகிறேன். என்னுடைய இறுதிப் பயணத்தில் என் உடலைக் காவித் துணியால் போர்த்துங்கள்" என்று சிறுவன் முகநூலில் பதிவிட்டுள்ளார்.

டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக வளாகத்துக்குள் நேற்று மர்மநபர் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் நுழைந்ததால் அமைதியான முறையில் நடந்த போராட்டத்தில் திடீரென சலசலப்பு ஏற்பட்டது. அவர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை நோக்கி `இதோ உங்கள் சுதந்திரம்’ என்று கத்தியபடி துப்பாக்கியால் சுட்டார். போராட்டக் களத்தில் பங்கெடுத்த மாணவர் ஒருவர் இந்தத் தாக்குதலில் காயமடைந்தார். சமூக வலைதளங்களிலும் இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோக்களும் அந்த நபரின் புகைப்படங்களும் வைரலானது.

விசாரணையில் அந்த நபர் குறித்து வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கும்விதமாக உள்ளது. அந்த நபர் உத்தரப் பிரதேச மாநிலம், கௌதம புத்தா நகர் மாவட்டத்திலுள்ள ஜியூவர் எனும் பகுதியைச் சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர் 17 வயதுச் சிறுவன் என்றும் அப்பகுதியிலுள்ள பள்ளி ஒன்றில் 11-ம் வகுப்பு படித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் நடைபெற்ற அன்று, வீட்டிலிருந்து பள்ளிக்குச் செல்வதாகத் தெரிவித்துவிட்டு கிளம்பியுள்ளார். ஆனால், பள்ளிக்குச் செல்வதற்குப் பதிலாக தனது கறுப்பு சட்டைக்குள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியுடன் ஜாமியா போராட்டக் களத்துக்கு வந்துள்ளார்.

சிறுவனின் முகநூல் பக்கம்
சிறுவனின் முகநூல் பக்கம்

சமூக வலைதளங்களில் இந்த மாணவர் பதிவிட்டுள்ள சில பதிவுகள் இவரைப் பற்றி சொல்வதுடன் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளன. சாரதா பல்கலைக்கழகத்தில் ஆப்கானிஸ்தான் மாணவர்களுக்கு எதிராகப் போராட்டங்களை தூண்டிவிட்டதாகக் கூறி கடந்த 2018-ம் ஆண்டு தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட தீபக் ஷர்மா என்பவருடன் எடுத்த புகைப்படத்தை தன்னுடைய முகநூலில் பகிர்ந்துள்ளார். மேலும், பஜ்ரங் தள அமைப்பினருடனும் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக பஜ்ரங் தள உறுப்பினர் ஒருவர் பேசும்போது, `அவர் என்னுடைய சகோதரனின் நண்பர். பஜ்ரங் தளத்தில் மிக தீவிரமாகச் செயல்பட்டு வந்தார்" என்று தெரிவித்துள்ளார். ஏ.என்.ஐ-யும் மாணவனின் மதிப்பெண் சான்றிதழ் ஒன்றையும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடக்கும் போராட்டங்களுக்கு எதிராகத் தொடர்ந்து தனது கருத்துகளைப் பதிவு செய்து வந்துள்ளார். முகநூலில், சம்பவம் நடைபெறுவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு வரை போராட்டக்களத்தில் இருந்த லைவ் வீடியோக்களை பதிவிட்டுள்ளார். `இந்து ஊடகங்கள் இங்கு இல்லை. நான் மட்டும்தான் இங்கு இந்துவாக நிற்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார். மேலும், போராட்டக்காரர்களை நோக்கி, ``நான் உங்களுக்கு சுதந்திரம் வழங்குகிறேன்" என்றும் ``என்னுடைய இறுதிப்பயணத்தில் என் உடலைக் காவித் துணியால் போர்த்துங்கள். ராம நாமங்களைப் பாடுங்கள். என்னுடைய குடும்பத்தையும் கவனித்துக்கொள்ளுங்கள்" என்றும் தொடர் பதிவுகளை எழுதியுள்ளார்.

ஜே.என்.யூ மாணவர்கள் மீது முகமூடி அணிந்த மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவத்தைத் தொடர்ந்து நடிகை தீபிகா படுகோன் மாணவர்களைச் சந்தித்துப் பேசினார். இதுதொடர்பாகவும் தனது கண்டனங்களை அவர் பதிவு செய்துள்ளார். மேலும், துப்பாக்கிகளுடன் இருக்கும் புகைப்படங்களும் அதைப் பயன்படுத்தும் சிறிய வீடியோக்களும் இடம்பெற்றிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மற்றொரு பதிவில், ``2018-ம் ஆண்டு குடியரசு தினத்தன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற வகுப்புவாத வன்முறையில் கொல்லப்பட்ட சந்தன் குப்தாவுக்காக இதைச் செய்கிறேன்" என்றும் கூறியுள்ளார். `இதுமாதிரியான வன்முறை பதிவுகளுக்கு முகநூல் இடமளிக்காது' எனக்கூறி இந்த மாணவரின் முகநூல் கணக்கை முகநூல் நிறுவனம் தற்போது நீக்கியுள்ளது. எனினும் அதுதொடர்பான ஸ்கிரீன் ஷாட்டுகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

உள்துறை அமைச்சர் அமித் ஷா, ``டெல்லியில் நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாகக் காவல் அதிகாரிகளிடம் பேசியுள்ளேன். கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியுள்ளேன்" என்று பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக காவல்துறையினர் ட்விட்டர் பக்கத்தில், `குற்றம் சாட்டப்பட்டவர், அமைப்புகளுடன் தொடர்பில் இருக்கிறார் என்ற குற்றச்சாட்டை அவர் மறுத்துவிட்டார். சமூக வலைதளங்களில் பகிரப்படும் போராட்டம் தொடர்பான வீடியோக்களைப் பார்த்து ஆத்திரமடைந்ததாகவும் 2018-ல் கொல்லப்பட்ட சந்தன் குப்தாவின் மரணத்துக்கு பழிவாங்கவே அவர் இதைச் செய்துள்ளதாகவும் கூறுகிறார்" என்று பதிவிட்டுள்ளார்.

இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட மாணவரின் குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ``பள்ளிக்குச் சென்றுவிட்டு விரைவில் வந்து குடும்பத்தில் நடைபெற இருக்கும் திருமண நிகழ்வில் கலந்துகொள்வதாகக் கூறினான். சில நாள்களாகவே அவனுடைய நடவடிக்கைகள் வித்தியாசமாக இருந்தன. எங்களால் இதை நம்பவே முடியவில்லை" எனச் சிறுவனின் தாத்தாவும் தெரிவித்துள்ளார். காவல்துறையினரும் இந்தச் சம்பவம் தொடர்பாகத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.