Published:Updated:

ரூ.3.7 லட்சம் செலவு; ஹெலிகாப்டர் ரைடு - அசத்தலாகப் பணி ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்

சத்யா கோபாலன்

மனைவியின் ஆசையை நிறைவேற்ற பணி ஓய்வு நாளில் ஹெலிகாப்டரில் பறந்து அசத்தியுள்ளார் அரசு ஆசிரியர் ஒருவர்.

Ramesh Chand Meena
Ramesh Chand Meena ( ANI )

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் உள்ள சவுரய் என்ற பகுதியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர் ரமேஷ் சந்த் மீனா. இவரின் பணிக்காலம் முடிவடைந்த நிலையில் நேற்று பணி ஓய்வு பெற்றுள்ளார். தன் பணி ஓய்வை சொந்தச் செலவில் சிறப்பாகக் கொண்டாடியுள்ளார் ரமேஷ்.

Ramesh helicopter ride
Ramesh helicopter ride
ANI

ரமேஷின் மனைவிக்கு ஹெலிகாப்டரில் செல்ல வேண்டும் என்பது பெரும் கனவாக இருந்துள்ளது. இதை தன் கணவரிடம் தெரிவித்துள்ளார். மனைவியின் ஆசையை எப்படியேனும் நிறைவேற்றியே ஆக வேண்டும் என நினைத்த ரமேஷ் அதற்காக தன் பணி ஓய்வு நாளை பயன்படுத்திக்கொண்டுள்ளார்.

நேற்று பள்ளியில் நடந்த ஓய்வு விழாவில் ரமேஷ் தன் மனைவியுடன் கலந்துகொண்டுள்ளார். அதன் பின்னர் பள்ளியிலிருந்து 22 கி.மீ தொலையில் உள்ள தன் வீட்டுக்குச் செல்வதற்காக ஹெலிகாப்டர் ஒன்றை புக் செய்து அதில் மனைவியை அமரவைத்து அழைத்துச் சென்றுள்ளார். தங்கள் கிராமத்தில் ஹெலிகாப்டர் வருவதை அறிந்த மக்கள் பள்ளிக்கு அருகில் திரண்டனர்.

Ramesh's wife
Ramesh's wife
ANI

இதைப் பற்றிப் பேசிய ரமேஷ், ``ஒரு நாள் வானத்தில் ஹெலிகாப்டர் பறந்ததைப் பார்த்த என் மனைவி, என்னிடம் வந்து நாம் எப்போது இது போன்று பறக்கப் போகிறோம் எனக் கேட்டார். எப்படியாவது மனைவியை ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்ல வேண்டும் என அப்போதே முடிவு செய்துவிட்டேன். அதனால் ஒரு ஹெலிகாப்டரை புக் செய்து என் பணி ஓய்வைக் கொண்டாடினேன்” எனக் கூறியுள்ளார்.

ரமேஷ், டெல்லியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் இந்த ஹெலிகாப்டரை புக் செய்துள்ளார். பள்ளி மற்றும் அவரது வீட்டுக்கு அருகில் ஹெலி பேட் அமைப்பது, ஹெலிகாப்டர் வாடகை என அனைத்துக்கும் சேர்த்து மொத்தமாக 3.7 லட்சம் செலவழித்துள்ளார். மேலும் தங்கள் மாவட்ட அதிகாரி, காவலர்கள் என அனைவரிடமும் முன்னதாக அனுமதியும் பெற்றுள்ளார்.

Ramesh helicopter ride
Ramesh helicopter ride
ANI

பள்ளியில் பணி ஓய்வு நிகழ்ச்சி முடிந்த பிறகு ட்ரம்ஸ் இசைத்து, பட்டாசு வெடித்து ரமேஷ் மற்றும் அவரது மனைவியை ஹெலி பேட் இருக்கும் இடத்துக்கு அழைத்து வந்துள்ளனர் கிராம மக்கள். இதையடுத்து ரமேஷ், ஹெலிகாப்டரில் மொத்த கிராமத்தையும் சுற்றி வந்தார். அப்போது மேலே இருந்து ரோஜா பூ இதழ்களும் தூவப்பட்டுள்ளன. இதைப் பார்த்த சவுரய் கிராம மக்கள் ஆச்சர்யத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்ந்துள்ளனர்.