Published:Updated:

`பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்!’ - WHO விஞ்ஞானி

மாணவர்கள்
மாணவர்கள்

கொரோனா பரவலுக்கு மத்தியில் பள்ளிகளைத் திறக்க முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என WHO -வின் மூத்த விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ்

சீனாவின் வுகான் நகரில் முதன்முதலாக கொரோனா வைரஸ் வெடித்த பிறகு, பெரும்பாலான நாடுகளில் இன்னும் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. அதிலும் குறிப்பாகக் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாகப் பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளன. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது, சில பள்ளிகள் ஆன்லைன் மூலம் பாடம் நடத்தினாலும், இணையம் இல்லாத மாணவர்களின் நிலை மோசமாக உள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோர் மீண்டும் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

பள்ளி
பள்ளி
மாதிரி புகைப்படம்

இந்நிலையில் உலக சுகாதார நிறுவனமும் இதே கருத்தைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்துக்குப் பேட்டியளித்துள்ள WHO-வின் மூத்த விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன், “கொரோனாவுக்கான அதிகாரப்பூர்வமான தடுப்பூசி இன்னும் வெளியிடப்படாத நிலையில் மத்திய மாநில அரசுகள் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்ந்து கண்காணித்துத் தனிமைப்படுத்த வேண்டும். தற்போதைய சூழலில் பள்ளிகள் திறக்கப்படுவதற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

குழந்தைகளின் கல்வியைத் தவறவிடாமல் அதே நேரம் அவர்களின் ஆரோக்கியத்துக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் பள்ளிகள் திறக்கப்படவேண்டும். பள்ளிகள் முழுமையாகக் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படவேண்டும். அதேபோல் மாணவர்களுக்கான சுகாதாரம், கழிப்பறை வசதிகள், தனிமனித இடைவெளி ஆகியவற்றைப் பள்ளி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.

கொரோனா: `சரியான தடுப்பு மருந்து கிடைக்காமலும் போகலாம்!’ - எச்சரிக்கும் WHO

பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்பதற்கான காரணம் பற்றிப் பேசியுள்ள சௌமியா, “கொரோனா காலத்தில் ஏற்பட்டுள்ள இந்த இடையூறுகள் குழந்தைகளின் கற்றல் திறனில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் பள்ளிகளைத் திறப்பதற்கு அதிக முன்னுரிமை வழங்க வேண்டும். பல லட்சக்கணக்கான ஏழை மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ளும் வாய்ப்புகள் கிடைப்பதில்லை. எனவே அவர்கள் நீண்ட காலமாகப் பள்ளிகளுக்கு வராமல் இருந்தால் அது அவர்களின் கல்வி இடை நிற்றலுக்கு வழிவகுக்கும். கல்வி இழப்பைத் தவிரக் குழந்தைக்குச் செய்யும் பெரிய துஷ்பிரயோகம் எதுவும் இல்லை.

WHO விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன்
WHO விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன்

அதுவே பெண் குழந்தைகள் திருமணம், வன்முறை போன்ற அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்கின்றனர். பல இடங்களில் கொரோனா பரவல் உச்சத்தில் இருக்கும்போது பள்ளிகள் திறக்கப்படுவதற்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கைகளையும் இப்போதிலிருந்து செய்ய வேண்டும். முதலில் கொரோனா பாதிப்பு மிகவும் குறைவாக உள்ள மாவட்டங்களில் குறைந்த நேரத்தில் பள்ளிகள் இயங்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

கொரோனா : `இது முதல் அலைதான்; இன்னும் பெரிதாக வரப்போகிறது!’ - WHO எச்சரிக்கை
அடுத்த கட்டுரைக்கு