Published:Updated:

`இரண்டாம் அலை உருவாகிவிட்டது!’ - கேரள சுகாதாரத்துறை அமைச்சருடன் கலந்துரையாடிய கமல்

ஷைலஜா டீச்சர்
ஷைலஜா டீச்சர்

``புதிய நெருக்கடிகள் மனிதர்களுக்கு தொடர்ந்து வந்துகொண்டுதான் இருக்கின்றன. அவற்றை எதிர்த்துப் போராடி வென்று வந்திருக்கிறோம்.”

சீனாவில் உருவானதாகக் கருதப்படும் கொரோனா வைரஸ் உலக நாடுகள் பலவற்றிலும் பரவி தொடர்ந்து அதிகளவில் பாதிப்புகளை ஏற்படுத்து வருகிறது. இந்த கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் ஏற்பட்டுள்ள இழப்புகள் மக்களின் அன்றாட வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. மக்களும் தொடர்ந்து அச்சத்தில் இருந்து வருகின்றனர்.

வைரஸைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறும் அரசுகள், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் வைரஸை எதிர்கொண்டு வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள், வைரஸூக்குப் பிறகு உலகம் பெரிய அளவில் மாற்றங்களை சந்திக்கப்போகிறது என்றும் கூறி வருகின்றனர்.

இந்தநிலையில், மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக `கொரோனாவுக்குப் பிந்தைய உலகின் புதிய யதார்த்தம்’ என்ற தலைப்பில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா டீச்சர், மருத்துவர் ஷாலினி மற்றும் டாக்டர் ரமணன் லஷ்மி நாராயண் ஆகியோருடன் கலந்துரையாடினார்.

கமல் மற்றும் அமைச்சர் ஷைலஜா
கமல் மற்றும் அமைச்சர் ஷைலஜா

கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா டீச்சர் பேசுகையில், ``உலகின் மற்ற நாடுகளைவிடவும் இந்தியாவின் மற்ற பகுதிகளைவிடவும் கேரளாவின் சூழ்நிலை மிகவும் வித்தியாசமானது. இங்கு 1957 முதல் decentralized planning இருந்து வருகிறது. இதன்மூலம் நல்ல முடிவுகள் கிடைத்துள்ளன. பொருளாதார அளவில் பலம் வாய்ந்த மாநிலமாக கேரளா இல்லை, அதிக பிரச்னைகள் உள்ளன. மக்களை மையப்படுத்திய திட்டங்கள், பொது சுகாதார அமைப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் அரசின் ஒன்றிணைந்த நடவடிக்கைகள் ஆகியவை கேரளாவில் சிறப்பாக இருந்து வருகிறது. வுகானில் வைரஸ் பரவி வருவது தொடர்பான உலக சுகாதார அமைப்பின் கட்டுரையை நாங்கள் படித்தோம். உடனடியாகச் சுகாதாரத்துறை செயலாளருடன் இதுதொடர்பாக கலந்துரையாடல்களை நடத்தினோம். ஏனென்றால், அங்கு அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர்” என்றார்.

மூன்று மாதங்களாக வீட்டுக்கு வரவில்லை! - களத்தில் போராடும் ஷைலஜா டீச்சர்

தொடர்ந்து பேசிய அவர், ``ஜனவரி 24-ம் தேதி மாநில அளவிலான கட்டுப்பாட்டு அறைகளையும் நிபுணர்கள் குழுக்களையும் உருவாக்கினோம். எங்களுடைய ஸ்கிரீனிங் குழு முதல் விமானம் வரும்போதிலிருந்தே விமான நிலையத்தில் இருந்து வந்தது. எங்களுடைய நடவடிக்கைகளை நாங்கள் நிறுத்தவே இல்லை. தொடர்ந்து காண்டாக்ட் டிரேசிங் உள்ளிட்டவற்றை மிகவும் நுண்ணிய அளவில் செய்துகொண்டிருந்தோம். தன்னார்வ அமைப்புகள், மத அமைப்புகள் என ஒவ்வோர் அமைப்புடனும் நாங்கள் தனித்தனியாகக் கலந்துரையாடல்களை நடத்தி கோரிக்கைகளை முன் வைத்தோம். அவர்கள் மக்களுக்கு அறிவித்தார்கள் என்பதுதான் இங்குள்ள வித்தியாசம். மக்களின் ஒத்துழைப்பும் அதிகமாக இருந்தது. 80 சதவிகிதம் மக்கள் எங்களுடைய வழிகாட்டுதல்களைப் பின்பற்றினர்” என்றும் கூறினார்.

கமல் மற்றும் ரமணன் லஷ்மி நாராயன்
கமல் மற்றும் ரமணன் லஷ்மி நாராயன்

மேலும், ``வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு உரிய வழிகாட்டுதல்களைக் கொடுத்து வீடுகளிலேயே தங்க அறிவுறை வழங்கினோம். வீடுகளில் தனி அறை மற்றும் தனி கழிவறைகள் இல்லாத பட்சத்தில் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளைச் செய்தது. காவலர்களும் அவர்களுடைய வீடுகளுக்குச் சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். இப்படித்தான் காண்டாக்ட் டிரேசிங்கை கட்டுப்படுத்தினோம்” என்றவரிடம் கமல் இரண்டாம் அலைக்கு தயாராகி வருவது குறித்த கேள்விகளை எழுப்பினார். அதற்கு பதிலளித்த கேரளா அமைச்சர், ``இரண்டாம் கட்ட அலைகள் ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டன. மே 7-ம் தேதிக்குப் பிறகு போக்குவரத்து சேவைகளைத் தொடங்கிய பிறகு ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இங்கு வந்துள்ளனர். அவர்களைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். மும்பை, சென்னை என அதிகம் பாதிப்படைந்த பகுதிகளிலிருந்து வருகின்றனர்” எனத் தெரிவித்தார்.

டாக்டர் ரமணன் லஷ்மி நாராயன் பேசும்போது, ``நாம் பாதுகாப்பு எச்சரிக்கையுடன் இருந்தாலும் வேறு ஒருவர் மூலமாக எளிதாக நமக்கு பாதிப்பு ஏற்படும் என்பதுதான் மக்களின் அச்சம். பயம்தான் பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டோ ஓட்டுநர்கள் எல்லாம் அதிகமாகப் பாதிப்படைந்துள்ளனர். அது தேவையே இல்லை. சர்வதேச விமானநிலையங்கள் உள்ள இடத்தில் பாதிப்புகள் அதிகமாக உள்ளன. மாநிலங்கள் தன்னிச்சையாகச் சில முடிவுகளை எடுக்க வேண்டும். பொது சுகாதார அமைப்பில் தமிழகம் மிகவும் சிறப்பாக உள்ளது. சுயமாக அரசு முடிவுகளை எடுக்காவிட்டால் பிரச்னைகள் ஏற்படும்” என்று தெரிவித்தார்.

கமல் மற்றும் ஷாலினி
கமல் மற்றும் ஷாலினி

மனநலம் குறித்து பேசிய மருத்துவர் ஷாலினி, ``புதிய நெருக்கடிகள் மனிதர்களுக்கு தொடர்ந்து வந்துகொண்டுதான் இருக்கின்றன. அவற்றை எதிர்த்துப் போராடி வென்று வந்திருக்கிறோம். முதலில், உடல் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அதிகமான புரோட்டீன் பொருள்களை எடுத்துக்கொள்ள வேண்டும். அடுத்துதான் மனநிலை தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். வைரஸை எதிர்த்து ஜெயிக்க முடியும் என்ற போராட்ட குணம் வேண்டும். நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள வேண்டும். பொருளாதார அளவில் பின்தங்கியுள்ள மக்களின் வாழ்க்கை முறை பாதுகாப்பானதுதான். முகக்கவசங்கள் அணிவதை மரியாதைக் குறைவாக மக்கள் கருதக் கூடாது. தனிமனித இடைவெளி போன்றவற்றை கவனமாகக் கடைப்பிடிக்க வேண்டும். கல்வி, பொழுதுபோக்கு என எல்லாமே புதிய எதார்த்தத்துக்குள் அடங்கி வருகிறது” என்று பகிர்ந்துகொண்டார்.

கமல்ஹாசன் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்த தனது வருத்தங்களையும் அரசின் மீதான விமர்சனங்கள் குறித்தும் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். மேலும், மாநிலங்கள் சுய அளவில் முடிவுகளை எடுக்க வேண்டும் என்பது குறித்தும் `கொரோனாவால் மரணம் ஏற்பட்டுவிடும்’ என மக்கள் அச்சப்படக் கூடாது என்றும் கலந்துரையாடலின்போது தெரிவித்தார்.

"பதின்பருவ மகன் தவறு செய்தால், அதை வாய்ப்பாகக்கொண்டு பெற்றோர்  மனம்விட்டுப் பேச வேண்டும்!"- டாக்டர் ஷாலினி
அடுத்த கட்டுரைக்கு