Published:Updated:

` பட்டாசு வெடிக்கக் கூடாது; ட்ரோன் பறக்கக் கூடாது!' -உச்சக்கட்ட பாதுகாப்பில் அயோத்தி

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு விசாரணை முடிவடையவுள்ள நிலையில் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அயோத்தி
அயோத்தி

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் பகுதியை இந்து, இஸ்லாமியர் எனப் பல்வேறு அமைப்புகள் சொந்தம் கொண்டாடி வருகின்றன. இது தொடர்பான வழக்கு பல வருடங்களாக உச்சநீதிமன்றத்தில் நடந்துவருகிறது.

அயோத்தி
அயோத்தி

அயோத்தி நிலத்தை 3 பகுதிகளாகப் பிரித்து இஸ்லாமியர்கள், இந்துக்கள் மற்றும் நிர்மோஹி அகாராக்களுக்கு வழங்க வேண்டும் என அலகாபாத் உயர் நீதிமன்றம் 2010-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அலகாபாத் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்துப் பல அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.

பின்னர் இந்த வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்தே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.அப்துல் நசீர் ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில், கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் நாள்தோறும் விசாரணை நடைபெற்று வருகிறது.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

தசரா விடுமுறை நாள்கள் முடிந்து இன்று முதல் உச்சநீதிமன்றம் செயல்படத் தொடங்குகிறது. அயோத்தி நிலம் தொடர்பான வழக்கு இன்று இறுதிக்கட்ட விசாரணைக்குச் செல்லவுள்ளது. இன்று இஸ்லாமிய அமைப்பினர் தங்களின் இறுதிவாதத்தை முன்வைக்கின்றனர். இன்னும் இரண்டு நாள்களுக்கு எதிர்த்தரப்பினர் தங்களின் இறுதி வாதங்களை நீதிமன்றத்தில் தெரிவிக்கவுள்ளனர்.

Vikatan

சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் தொடர்பான வழக்கு விசாரணை, வரும் 17-ம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. அடுத்த மாதத்துக்குள் இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், பாதுகாப்புக் காரணங்களுக்காக அயோத்தியா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் அடுத்த மாதம் 10-ம் தேதி வரை இந்தத் தடை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரோன் - பட்டாசுக்கு தடை
ட்ரோன் - பட்டாசுக்கு தடை

“அயோத்தியா வழக்கு, இறுதி விசாரணையை எட்டியுள்ளதால் பொதுமக்களின் பாதுகாப்புக்காக 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் ட்ரோன், சிறிய விமானங்கள் பறக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. சினிமா படப்பிடிப்பு காரணங்களுக்காகவும் ட்ரோன் பறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மிக முக்கியமாக, தீபாவளிப் பண்டிகையையொட்டி அனுமதியின்றி பட்டாசுகள் வாங்கவும் விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே பட்டாசுக் கடைகள் அமைக்க வேண்டும். பொது இடங்களில் நான்கு பேர் சேர்ந்து கூடவும் அனுமதியில்லை. அடுத்த ஒரு மாதத்துக்கு அயோத்தியா மாவட்டம் தீவிரக் கண்காணிப்பில் இருக்கும்” என அம்மாவட்ட கலெக்டர் அனுஜ் குமார், டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்துக்குப் பேட்டியளித்துள்ளார்.