Published:Updated:

`சர்ச்சைப் பேச்சு; 5 மாநிலங்களில் தேசத்துரோக வழக்கு!' - ஜே.என்.யூ மாணவர் சஜ்ரீல் இமாமைத் தேடும் போலீஸ்

சஜ்ரீல் இமாம்
சஜ்ரீல் இமாம் ( Facebook )

வடகிழக்கு மாநிலங்கள் குறித்த சர்ச்சைப் பேச்சால், டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர் சஜ்ரீல் இமாம் மீது அஸ்ஸாம், உ.பியைத் தொடர்ந்து அருணாசலப்பிரதேசம், மணிப்பூர் மற்றும் டெல்லியில் தேசத்துரோக வழக்கு பதியப்பட்டிருக்கிறது.

குடியுரிமை திருத்தச் சட்டம், என்.ஆர்.சியை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ஜே.என்.யூ பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வு மாணவர் சஜ்ரீல் இமாம், `வடகிழக்கு மாநிலங்கள் இந்தியாவை விட்டுத் தனியாகப் பிரிக்க வேண்டும்' என்று பேசியது பெரும் சர்ச்சையானது. அதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து 5 மாநிலங்களில் அவர் மீது தேசத் துரோக வழக்கு பதியப்பட்டுள்ளது. டெல்லி மற்றும் உ.பி போலீஸார் அவரைத் தேடி பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

சி.ஏ.ஏ-வுக்கு எதிரான போராட்டம்
சி.ஏ.ஏ-வுக்கு எதிரான போராட்டம்

இதுகுறித்து பேசிய அலிகார் எஸ்.எஸ்.பி ஆகாஷ் குல்ஹரி, இமாம் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிப்பதற்காக டெல்லி போலீஸாருடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் உ.பி காவல்துறையின் இரண்டு தனிப்படைகள் டெல்லியின் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருவதாகவும் குறிப்பிட்டார். அதேபோல், டெல்லி போலீஸின் தனிப்படை பீகார் மாநிலத்தில் உள்ள இமாமின் சொந்த ஊரான காகோ கிராமத்தில் சோதனை நடத்தி வருகிறார்கள். போலீஸாரிடம் சிக்காமல் இருப்பதற்காக இமாம், தனது சொந்த வீட்டுக்கு வருவதைத் தவிர்த்துவிட்டதாக போலீஸார் கூறுகின்றனர். இதுதொடர்பாக இமாமின் உறவினர்களிடம் தனிப்படை போலீஸார் நடத்திய விசாரணை பல மணிநேரத்துக்கு நீண்டிருக்கிறது. விசாரணைக்குப் பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டதாகவும் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

டெல்லி காவல்துறை குற்றப்பிரிவு துணை ஆணையர் ராஜேஷ் தியோ கூறுகையில், ``ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் பயின்றுவரும் பீகார் மாணவர் சஜ்ரீல் இமாம், தேச ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் பேசியது எங்கள் கவனத்துக்கு வந்தது. குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் என்.ஆர்.சிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கூறி வன்முறையைத் தூண்டும் வகையில் அவர் பேசியிருக்கிறார்.

`ஜும்மா மசூதி ஒன்றும் பாகிஸ்தான் இல்லை!' - டெல்லி போலீஸை விளாசிய நீதிபதி #CAA

இதேபோல், ஜாமியா பல்கலைக்கழகத்தில் கடந்தாண்டு டிசம்பர் 13-ம் தேதி நடந்த போராட்டத்திலும் அவர் அரசுக்கு எதிராகப் பேசியது தெரியவந்திருக்கிறது. அவரது பேச்சு மதநல்லிணக்கத்தைப் பாதிக்கும் வகையில் இருப்பதால் வழக்கு பதிவு செய்து அவரைத் தேடி வருகிறோம்'' என்றார்.

யார் இந்த சஜ்ரீல் இமாம்?

சஜ்ரீல் இமாம்
சஜ்ரீல் இமாம்
Facebook

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சஜ்ரீல், பள்ளிப் படிப்பை பீகார் மற்றும் டெல்லியில் முடித்தவர். பின்னர் மும்பை ஐஐடி-யில் முதுகலைப் படிப்பை முடித்துவிட்டு பல்வேறு இடங்களில் பணிபுரிந்தார். டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டுவரும் அவர், இதற்கு முன்னர் கோபன்கேஹன் பல்கலைக்கழகத்திலும் பணியாற்றியிருக்கிறார். டெல்லி ஷாஹீன் பாக் பகுதியில் நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவராக அறியப்படும் சாஜ்ரீல் இமாம், கடந்த 2-ம் தேதி அந்தப் போராட்டக் களத்திலிருந்து வெளியேறினார். பின்னர், பல்வேறு இடங்களில் நடந்துவரும் போராட்டங்களில் கலந்துகொண்டு பேசி வருகிறார்.

சர்ச்சைப் பேச்சு

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் போராட்டத்தில் கலந்துகொண்டு கடந்த 16-ம் தேதி சஜ்ரீல் இமாம் பேசினார். அவர் பேசியதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பீகாரில் கன்னையா குமார் தலைமையில் நடைபெற்ற பேரணியை உதாரணம் காட்டி அவர் பேசுகிறார். அந்தப் பேரணியில் சுமார் 5 லட்சம் பேர் கலந்துகொண்டனர்.

`அடுப்படியிலிருந்து முதன்முறையா போராட்டத்துக்கு வந்திருக்கோம்!' - கொதிக்கும் ஷாஹீன் பாக் பெண்கள்

அந்தப் பேரணியைச் சுட்டிக்காட்டிப் பேசிய சஜ்ரீல் இமாம், ``நம்மிடம் 5 லட்சம் பேர் இருந்தால், வடகிழக்கு மாநிலங்களை இந்தியாவிடமிருந்து பிரித்து விடலாம். நிரந்தரமாக இல்லாவிட்டாலும் ஓரிரு மாதங்களாவது இதைச் செய்ய வேண்டும். சாலைகள் மற்றும் ரயில் பாதைகளில் தடைகளை ஏற்படுத்துங்கள். அஸ்ஸாம் துண்டிக்கப்பட்டுவிட்டால், நாம் பேசுவதைக் கேட்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. நம்மால் அதைச் செய்ய முடியும் ஏனென்றால் சிக்கன்ஸ் நெக் காரிடார் பகுதி முஸ்லிம்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது'' என்று பேசியிருக்கிறார். மேலும், டெல்லி நோக்கிச் செல்லும் சாலை மார்க்கங்களை அடைக்க வேண்டும் எனவும் அவர் பேசுவது போன்ற காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றிருக்கின்றன.

சிக்கன்ஸ் நெக் காரிடார் (Chicken's Neck Corridor) அல்லது சிலிகுரி காரிடார் என்பது மேற்குவங்கத்தில் அமைந்திருக்கும் 22 கி.மீ நீள சாலையைக் குறிப்பது. வடகிழக்கு மாநிலத்தை இந்தியாவோடு இணைக்கும் இந்தப் பகுதியில் முஸ்லிம்களே பெருவாரியாக வசித்து வருகின்றனர். இதுகுறித்து சஜ்ரீல் பேசியது தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. மதநல்லிணக்கத்துக்கு உறுவிளைவிக்கும் வண்ணம் அவர் பேசியிருப்பதாகக் கொதிக்கிறார்கள் பல்வேறு மாநில முதல்வர்கள்.

வடகிழக்கு மாநிலங்களில் நடந்த போராட்டம்
வடகிழக்கு மாநிலங்களில் நடந்த போராட்டம்

இதுகுறித்து பேசிய மணிப்பூர் முதல்வர் எம்.என்.பிரேந்திரசிங், ``ஷாஹீன் பாக் போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக அறியப்படும் சஜ்ரீல் கான் பேசும் வீடியோ ஒன்று பரப்பப்பட்டு வருகிறது. அதில், வடகிழக்கு மாநிலங்களை இந்தியாவிலிருந்து பிரித்துவிடுவோம் என மிரட்டும் தொனியில் அவர் பேசியிருக்கிறார். இதனால் அவர் மீது அரசு எதிராக வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் மணிப்பூர் போலீஸார் வழக்கு பதிந்திருக்கிறார்கள்'' என்றார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் அருணாசலப்பிரதேச முதல்வர் பேமா கண்டு, ``அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களை இந்தியாவிலிருந்து பிரிப்பேன் என்பன போன்ற பேச்சுகள், சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும். நாட்டின் இறையாண்மைக்கு எதிரான இதுபோன்றவற்றை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது. அவர் மீது அருணாசலப்பிரதேசத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது'' என்று பதிவிட்டிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு